Published:Updated:

தடாலடி ரங்கசாமி... தகிக்கும் தமிழ் ஆர்வலர்கள்!

சி.பி.எஸ்.இ களேபரத்தில் புதுச்சேரி

பிரீமியம் ஸ்டோரி
தடாலடி ரங்கசாமி... தகிக்கும் தமிழ் ஆர்வலர்கள்!

தான் நினைத்ததை உடனே நிறைவேற்றிக் காட்டுபவர் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி. அவருக்கு பாசிட்டிவ் ஆக அவருடைய கட்சிக்காரர்களால் கருதப்படும் இந்த விடாப்பிடியான குணமே, அவரது எதிர்ப்பாளர்களால் நெகட்டிவாக சுட்டிக்காட்டப்படுகிறது. 'இந்தக் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்படும்’ என்று ரங்கசாமி தடா லடியாக அறிவிக்க... வழக்கம்போல் அதற்கு கலவையான ரியாக்ஷன்!

புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் கிடையாது. தமிழக அரசைப் பின்பற்றியே பல ஆண்டுகளாக புதுச்சேரி கல்வித் துறை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், ரங்கசாமியின் தடாலடி அறிவிப்பால் சமூக ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலரான கோகுல் காந்தியிடம் பேசினோம். ''இதுவரை புதுச்சேரியை ஆண்ட

தடாலடி ரங்கசாமி... தகிக்கும் தமிழ் ஆர்வலர்கள்!

ஆட்சியாளர்கள், மாநிலத்துக்கு என தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் துளியும் அக்கறைக் காட்டவில்லை. ரங்கசாமியும் அப்படித்தான். இப்போது, ஒட்டுமொத்தமாக தமிழ் மொழியை குழிதோண்டி புதைக்க, இப்படியொரு திட்டத்தை அறிவித்துள்ளார். அவர் இப்படி நடந்துகொள்வதற்கு ஒரே காரணம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவருக்குப் பிடிக்காது. அவர்கள் இருவருக்குள் இருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, அரசு நிர்வாகத்தின் மீதா திணிப்பது?

அடுத்த ஆண்டு இந்தக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால்கூட பல சிக்கல்களைத் தீர்த்திருக்கலாம். தலைகால் புரியாமல் அவசர அவசரமாக யாரிடமும் கருத்து கேட்காமல் முதல்வர் ரங்கசாமி இதை அமல்படுத்தியுள்ளார். இதனால், மாணவர்களின் நிலை மோசமாகப் பாதிக்கப்படும்.  பிள்ளைகளின் நிலையைவிட ஆசிரியர்களின் நிலை இன்னும் மோசம். தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலேயே பாடம் நடத்த போதிய திறமையான ஆசிரியர்கள் இன்றி சிரமப்படும் நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இது கடுமையான சுமைதான். இந்தத் திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிடும் வரை அனைத்து கட்ட போராட்டங்களையும் தொடர்ந்து நடத்துவோம்'' என்றார் ஆவேசம் குறையாமல்.

தமிழ் மொழியைப் புறக்கணித்து ஒரு பாடத்திட்டமா என்ற கொதிப்பில் தமிழ் ஆர்வலர்கள் உள்ளனர். பயிற்று மொழியிலும் தமிழ் இருக்கப்போவது இல்லை; ஒரு பாடமாவது இருக்குமா என்பதும் சந்தேகம்தான்.  

இந்த விவகாரம் தொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத தலைமையாசிரியர் ஒருவர் நம்மிடம் பேசினார். ''ஆட்சியாளர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளின் உச்சக்கட்ட முட்டாள்தனமான

தடாலடி ரங்கசாமி... தகிக்கும் தமிழ் ஆர்வலர்கள்!

திட்டம்தான் இது. கூலி ஆட்களைப் போருக்கு அனுப்பி சண்டைப்போடச் சொல்வதுபோலதான். அரசு ஆசிரியர்களின் தகுதியே தெரியாமல், இதுபோன்ற சுமையை அவர்கள் மீது திணித்தால் நிலைமை என்னவாகும்? கற்றுக் கொடுப்பவர் தகுதியற்றவராக இருந்தால், பிள்ளைகளுக்குத் தரமான கல்வி எப்படி போய் சேரும்?

சில ஆண்டுகளுக்கு முன் இந்தத் திட்டம் 90 அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு, தோல்வி கண்டது. அதை மீண்டும் அமல்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? இந்தத் திட்டத்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை கண்டிப்பாக உயர்த்தலாம் என்று முதல்வர் நினைத்துள்ளார். அது கண்டிப்பாக ஒருபோதும் நடக்காது. நிலைமை மேலும் சிக்கலாகும்.

இப்போது எல்லா பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்களிடம் மட்டுமே சி.பி.எஸ்.இ புத்தகம் உள்ளது. பிள்ளைகளுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. தமிழ்மொழியை பிள்ளைகள் கற்பார்களா எனத் தெரியவில்லை. சமச்சீர் கல்வியானது சிறந்த கல்வித்திட்டம்'' என்றார் அவர்.

கல்வித் துறை வட்டாரத்திலோ, ''கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்; அனைவரும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது  முதல்வரின் கனவு. அதனால், திட்டத்துக்குத் தடை சொல்ல முடியாது. மேலும், ஒவ்வொரு முறையும் தமிழகத்திடம் ஏன் நாம் கையேந்திக்கொண்டிருக்க வேண்டும். மிக முக்கியமாக ஜெயலலிதாவிடம் பணிந்துகொண்டிருக்க வேண்டுமா? அதனால்தான் முதல்வர் ரங்கசாமி இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்'' என்கின்றனர்.

ரங்கசாமியின் திட்டம் மாணவர்களுக்குக் கை கொடுக்குமா?

- நா.இள.அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு