Published:Updated:

அரியலூரில் ஒரு மன்மத ராஜா!

சப்போர்ட் செய்தாரா கவிதா ராஜேந்திரன்?

பிரீமியம் ஸ்டோரி
அரியலூரில் ஒரு மன்மத ராஜா!

''அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் கவிதா ராஜேந்திரன் பெயரைச் சொல்லி ஒருவன், என் வாழ்க்கையையே சீரழித்துவிட்டான்'' - என்று அரியலூர் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்துள்ளார் அபிநயா என்ற பெண்.

அபிநயாவைச் சந்தித்துப் பேசினோம். ''நான் ஆண்டிமடம் அருகில் உள்ள விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவள். எனக்கு தனியார் சிட்ஃபண்ட் நிறுவனத்தில் வேலை. பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பஞ்சாயத்து கிளார்க்காகப் பணிபுரிந்து வரும் ராஜா, எங்களிடம் டூ-வீலர் வாங்குவதற்காக லோன் வாங்கியிருந்தார். சரியாகப் பணம் கட்டி முடித்ததால், அவருக்கு வேறு எதுவும் லோன் வேண்டுமா என்று கேட்பதற்காக போன் செய்தேன். நேரில் வந்து பேசினார். அதன் பின் அடிக்கடி வந்து ஏதாவது லோன் விஷயமாகப் பேசிக்கொண்டிருப்பார்.

ஒரு கட்டத்தில்,  'அபி... உன்னைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. உன்னை லவ் பண்றேன்’ என்று சொன்னார். அதோடு, என் அம்மா காலில் விழுந்து, 'அபியைத் கல்யாணம் பண்ணி கொடுக்கவில்லை என்றால் இறந்துவிடுவேன்’ என்று கெஞ்சியுள்ளார். அவரும் என் வாழ்க்கையை நினைத்து திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.

அரியலூரில் ஒரு மன்மத ராஜா!

2.2.14 அன்று வடலூரில் உள்ள பச்சை வாளியம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. கல்யாணம்

அரியலூரில் ஒரு மன்மத ராஜா!

முடிந்ததும் 10 நாட்கள்தான் சந்தோஷமாக இருந்தோம். பின்னர், அவர் போக்கில் மாற்றம் தெரிந்தது. அவர் சரியாக வீட்டில்  தங்குவதே இல்லை. பின்பு அவரை பற்றி விசாரித்தபோது  'மரக்காணக்குறிச்சி பகுதியில் உள்ள குடும்பத்தில் அக்காவைக் காதலிப்பதாகச் சொல்லி தங்கச்சியை கர்ப்பமாக்கிவிட்டார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த கவிதா ராஜேந்திரன் இவருக்கு மாமா என்பதால், அவர்கள் எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே போய்விட்டார்கள்’ என்றார்கள். அவரது அக்கா மகளை திருமணம் செய்யப் போவதாகத் தகவல் தெரிந்து, அவர்களது வீட்டுக்குச் சென்று எனது கணவருடன் வாழ வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தேன். ராஜாவின் அம்மாவும் அக்காவும் என்னை செருப்பு, விளக்குமாறால் அடித்தார்கள். 'என் கணவரோடு வாழ வேண்டும்’ என்று 19.5.14 அன்று ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காமாட்சியிடம் புகார் கொடுத்தேன். அவர், 'நீ வேறு கல்யாணம் பண்ணிக்கோ’ என்று என்னை பிரைன்வாஷ் செய்தார். மேலதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதற்கு முதல்வர் அம்மாதான் நல்ல தீர்வு காண வேண்டும்'' என்றார்.

கவிதா ராஜேந்திரனிடம் பேசினோம். ''அந்தப் பையன் ராஜா எனக்குத் தூரத்து சொந்தம். அந்தப் பெண்ணின் அப்பா என்னிடம் 15 வருடங்களாக டிரைவராக இருந்தார். இந்த விஷயத்தைப் பற்றி சொன்னார். பெண்கள் விஷயத்தில் நான் தலையிடுவது கிடையாது என்று சொல்லி அனுப்பிவிட்டேன். எனக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. நான் சத்தியமாகப் பெண்களுக்குத் துரோகம் செய்ய மாட்டேன். இது, என்னைப் பிடிக்காதவர்கள் எனக்கு எதிராக செய்யும் சதி'' என்றார்.

அரியலூர் எஸ்.பி-யான ஜியாவுல் ஹக்கிடம் பேசினோம். ''பெண்களை ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும், என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இன்ஸ்பெக்டர் காமாட்சி அடிக்கடி பணம் வாங்குகிறார் என்ற புகார் எனக்கு வந்தது. அவரை சஸ் பெண்ட் செய்துள்ளேன். இந்த வழக்கை வேறொரு இன்ஸ்பெக்டர் மூலம் விசாரிக்க உத்தரவிடுகிறேன்'' என்றார்.

கலெக்டர் சரவணவேல் ராஜிடம் பேசினோம். ''துறைரீதியான புகார்களால் ராஜாவை சஸ்பெண்ட் செய்துள்ளேன். தவறு செய்திருந்தால், அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்காகக் காத்திருப்போம்!

- எம்.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு