Published:Updated:

ஜனாதிபதி வரும் நேரத்தில்...

பல்கலைக்கழக பகீர்!

பிரீமியம் ஸ்டோரி

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன¢பு மத்திய பல்கலைக்கழகத்தை தற்காலிக இடத்தில் துவக்கிவைத்தார் அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல். இப்போது மத்திய பல்கலைக்கழகத்துக்கு புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கட்டமைப்பு முடிந்து, முற்றுப்பெறாமல் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் புதிய கட்டடங்களைத் திறந்து வைப்பதற்காக 19-ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மத்திய பல்கலைக்கழத்துக்கு வரவிருக்கிறார்.

ஜனாதிபதி வரும் நேரத்தில்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில துணைத் தலைவரும், தேசியக் குழு உறுப்பினருமான கே.ராஜா இதுபற்றி நம்மிடம் பேசினார். ''மத்திய பல்கலைக்கழகம் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து பாடப்பரிவுகளும் துவங்கப்படவில்லை. கட்டட வசதிகள் இல்லை என்பதுதான் அதற்குக் காரணம் என்றார்கள். இப்போதுதான் புது கட்டடங்களை கட்டி வருகிறார்கள். போதுமான வசதிகள் கொண்ட முறையான ஆய¢வகங்கள் இல்லை. நூலகங்களும் இல்லை. இதுவரை இங்கு படித்த மாணவர்கள் பலர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். அதற்குக் காரணம் பெரும்பான்மை​யான பேராசிரியர்கள் இந்தியில¢ பாடம் நடத்துவதுதான். தமிழக மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது இல்லை.

ஜனாதிபதி வரும் நேரத்தில்...

டீச்சிங் டெக்னாலஜிக்குத் தேவையான புரொஜக்டர் வசதியும் இல்லை. மருத்துவப் படிப்புகளைத் தவிர மற்ற அனைத்து பாடப்பிரிவுகளும் இருப்பதுதான், ஒரு மத்திய பல¢கலைக்கழகமாகப் போற்றப்படும். பிஹெச்.டி படிப்புகள், அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இல்லை. தமிழக மாணவர்களை, மாணவர்கள் மாதிரியே நடத்துவது இல்லை. தமிழ் மாணவர்களுக்கு மரியாதையும் இல்லை. தமிழ் பேராசிரியர்கள் ஏழு பேர்தான் இருக்கிறார்கள். உலக அளவிலும், மற்ற மாநிலங்களில் இருந்தும் வந்து படிக்கும் மாணவர்களிடையே தமிழ் மாணவர்கள் போட்டிப் போட்டுப் படிக்க முடியவில்லை. இதனால் தமிழ் மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது'' என்றார்.

படிப்பு இப்படி பிரச்னை என்றால், இன்னொரு பக்கம், விவசாயிகள் தரப்பிலும் சில பிரச்னைகளைச் சொல்கிறார்கள். ''வயலாக இருந்த அந்தப் பகுதியில் 560 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான கட்டடங்கள் கட்டி வருகிறார்கள். களிமண் சார்ந்த பகுதி என்பதால், தரைமட்டத்தில் இருந்து சற்று உயர்வாக பேஸ்மென்ட் போட்டு கட்டினால்தான், தரமான கட்டடமாக நிலைத்து நிற்கும். ஆனால், அங்கு கட்டப்படும் கட்டடங்கள் அப்படி முறைப்படி கட்டப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் அங்கு அமைக்கப்பட்டுள்ள சாலையைவிட சற்று தாழ்வாகத்தான் கட்டடங்கள் இருக்கிறது. மழைக் காலங்களில் கனமழை பெய்தால் பல்கலைக்கழக கட்டடங்களைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து நிற்கும் என்பதை நினைவில் கொள்ளாமல் கட்டியிருக்கிறார்கள். மழைக் காலங்களில் வெள்ள நீர் பல்கலைக்கழகத்தின் உள்ளே புகும் அபாயம் இருக்கிறது. அதையெல்லாம் வரையறை செய்யாமல், முறைப்படுத்தாமல் கட்டடங்களை கட்டியிருக்கிறார்கள்.

தண்ணீர் புகாமல் இருப்பதற்காக அந்தப் பகுதியில் செல்லும் வெட்டாற்றில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த தடுப்புச்சுவரை, 20 அடிக்கு கீழ் இருந்துதான் கட்ட வேண்டும். அப்போதுதான் தண்ணீர் உள்ளே வராமல் தடுக்க முடியும். ஆனால், அங்கு கட்டப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரானது ஐந்து அடியில் இருந்து கட்டப்பட்டிருப்பதால், பலவீனமாகத்தான் இருக்கும். தடுப்புச் சுவரால் விளைநிலங்களுக்கு போக வேண்டிய பாசன நீர் சீராக பாயாது'' என்கிறார்கள்.

மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) செங்கதிரிடம் பேசினோம். ''அதெல்லாம் எந்தப் பிரச்னையும் கிடையாது. மண்ணின் தன்மைக்கு ஏற்பத்தான் கட்டடங்கள் அனைத்தும் கட்டப் பட்டிருக்கின்றன'' என்று மட்டும் சொன்னார்.

பிரச்னைகள் எதுவும் இல்லாமல் மத்திய பல்கலைக்கழகம் மகத்தான பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கனவும். கனவு நனவாகுமா?

- ஏ.ராம்

படங்கள்: மு.ரா.நிவாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு