Published:Updated:

அறிவாலயத்துக்குப் பறக்கும் கடிதங்கள்...

அறிவாலயத்துக்குப் பறக்கும் கடிதங்கள்...

பிரீமியம் ஸ்டோரி
அறிவாலயத்துக்குப் பறக்கும் கடிதங்கள்...

''என்னை சஸ்பெண்ட் செய்ததற்கு முதலில் கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே ஒன்றியத்தில் தீர்மானங்கள் போட்டு 13 பேர் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டோம். நாமக்கல் மாவட்ட உட்கட்சி தேர்தலில் உலக மகா ஊழல் செய்தவர் மாவட்டச் செயலாளரான 'மகாத்மா’ காந்திசெல்வன். இதை 11 முறைக்கு மேல் தி.மு.க தலைமைக்குக் கடிதம் எழுதியும் கண்டுகொள்ளவில்லை'' என சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாமக்கல் ஒன்றியச் செயலாளர் கணேசன் ஏற்கெனவே பொங்கியிருந்தார்.

 அவரைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல ஒன்றியச் செயலாளர்கள் அடுக்கடுக்கான

அறிவாலயத்துக்குப் பறக்கும் கடிதங்கள்...

புகார்களை அறிவாலயத்துக்கு அனுப்பியபடியே இருக்கிறார்கள். அதில் சில கடிதங்கள் நமக்குக் கிடைத்தன.

''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட காந்திசெல்வன் தமிழகத்திலேயே மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் (சுமார் 2,94,000) மூன்றாவது இடம் பிடித்தார். சதவிகித கணக்கில் பார்த்தால், தமிழகத்தில் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றவர் அவர்தான்.

நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்த கே.கே.வீரப்பனை 2000-ம் ஆண்டு கவிழ்த்துவிட்டு கட்சியை சொந்தமாக்கிக் கொண்டவர் காந்திசெல்வன். கடந்த 13 வருடங்களாக மாவட்டச் செயலாளராக இருந்துகொண்டு பிறருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆறு முறை இவரே கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார்.இப்படி உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவருக்கே வாய்ப்பு வழங்கினால், கட்சிக்காக குச்சி நட்டவனும், கொடி கட்டியவனும் கட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா? 2006-2011 தி.மு.க ஆட்சியில் மாவட்டம் முழுவதும் கேபிள் டிவி உரிமம் அனைத்தும் தன் பெயரிலேயே வைத்திருந்தார். டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் தன் அண்ணன் பெயரில் நடத்தி சம்பாதித்தார். பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, வீட்டுவசதி வாரிய காலி மனை ஒதுக்கீடு அனைத்தும் இவரே அபகரித்துக்கொண்டார்.

நாமக்கல் கழக அலுவலக கட்டடம் கட்டுவதற்காக ஆஞ்சநேயர் கோயில் அருகில் கே.கே.வீரப்பன் இருந்தபோது வாங்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படாமல் இருந்த  இடத்தை தன் தந்தை செல்லப்ப கவுண்டர் பெயரில் பதிவு செய்து கொண்டார். அதன் பிறகு ரங்கநாதர் கோயில் படிவாசல் அருகில் வாங்கிய 5 ஆயிரம் சதுரஅடி நிலத்தையும் தன் தந்தை பெயரில் எழுதிக் கொண்டார்.

இவர் மத்திய இணை அமைச்சராக இருந்த (2009-2013) ஐந்து வருடங்களில் தொகுதி பக்கம் வந்தது இல்லை. மக்களை சந்திக்கவில்லை. ஒருமுறைகூட கோரிக்கை மனு வாங்கியதும் கிடையாது. எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதிகூட பயன்படுத்தப்படாமல் 1 கோடி ரூபாய் கிடப்பில் உள்ளது.

நாமக்கல்லில் தி.மு.க தோற்றதற்கு யாரும் காரணம் கிடையாது. காந்தியே காரணம். இதனால் தொண்டர்களும், நிர்வாகிகளும் காந்தியின் மீது அதிருப்தியில் இருக்கிறோம். என்பதை தயவுகூர்ந்து தலைமை தெரிந்துகொள்ள வேண்டும்'' என்று விரிகிறது அந்தக் கடிதம்.

கடிதத்தில் உள்ள புகார்களுக்கு விளக்கம் கேட்டு நாமக்கல் மாவட்டச் செயலாளர் காந்திசெல்வனைத் தொடர்புகொண்டோம். ''என்னைப் பற்றி தலைமைக்கு நன்றாகத் தெரியும். கழக அலுவலகக் கட்டடம் வாங்கிய நிலப் பிரச்னையைப் பற்றி தலைமையிடமே கேட்டுப்பாருங்கள். எல்லா உண்மையும் தெரியவரும். பொய்யான தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை. தோற்றுப்போவோம் என்பதற்காக யாராவது ஸீட் வாங்குவார்களா? என்னைப் பிடிக்காத சிலர் தேவை இல்லாமல் அவதூறு பரப்புகிறார்கள். அதற்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை'' என்று நிதானமாகவே சொன்னார்.

தலைமையும் இதே விளக்கத்தை ஏற்றுக் கொள்ளுமா?

- வீ.கே.ரமேஷ்

படம்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு