Published:Updated:

ஆபத்தைக் களையுமா அம்மா உணவகம்?

மலிவாய்ப் போன மதுரை உயிர்!

பிரீமியம் ஸ்டோரி

கஷ்டப்படும் மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டதுதான் அம்மா உணவகங்கள். ஆனால், அதில் வேலை செய்பவர்களின் உயிரும் மலிவானதா எனக் கேட்கும் வகையில் அமைந்துள்ளது சமீபத்தில் மதுரையில் நடந்த சம்பவம்.

 மதிச்சியம் அருகே ராமராயர் மண்டபம் அருகில் இருக்கும் உணவகத்தில் தினக்கூலி அடிப்படையில் கரும்பாலைப் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாரின் மனைவி பிரேமா வேலை செய்து வந்தார்.

ஆபத்தைக் களையுமா அம்மா உணவகம்?

கடந்த 22-ம் தேதி வழக்கம்போல் உணவு தயாரிப்பில் வேகமாக ஈடுபட்டு வந்தனர். கொதித்துக்கொண்டிருந்த உலையில் அரிசியைப் போட பிரேமா முயன்றபோது, அந்தப் பெரிய பாத்திரம் அப்படியே சரிந்து பிரேமாவின் மேல் விழுந்தது. அவருடன் வேலைசெய்து கொண்டிருந்த ஜெயந்தி, கோமதி ஆகியோர் மீதும் சுடுநீர் கொட்டி மூவரும் கதறித் துடித்துள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு தெருவில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு, அருகில் இருந்த ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மூவரும் சேர்க்கப்பட்டனர். அதிகாரிகளால் அப்போது இந்தச் சம்பவம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டு வந்தது. கடந்த 26-ம் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் பிரேமா இறந்துபோன பிறகுதான், இப்படி ஒரு கொடுமையான சம்பவம் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரிய வந்தது.

பிரேமாவின் உறவினர்கள், ''கூலி வேலை செய்துவரும் கணவரின் வருமானம் போதாமல்தான், இரு

ஆபத்தைக் களையுமா அம்மா உணவகம்?

குழந்தைகளை வளர்க்க அம்மா உணவகத்தில் சமையல் வேலைக்கு பிரேமா வந்தார். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இன்று அந்த இரண்டு பிள்ளைகளும் அம்மா இல்லாமல் அனாதையாகி நிற்கின்றன'' என்று கதறினார்கள்.

மதுரை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வான அண்ணாதுரையிடம் பேசினோம். ''இது ஒரு வருத்தமான விஷயம். அம்மா உணவகத்துக்கு அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி செயல்படுத்தினால், அதில் வேலை செய்கிறவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு கிடைக்கும். அந்தந்த உள்ளாட்சி நிர்வாகமே இதை கவனித்துக்கொள்வதால்தான் இந்தப் பிரச்னை. தமிழக முதல்வர் இறந்த பிரேமாவின் குடும்பத்துக்கு நிதியுதவி செய்ய வேண்டும். சிகிச்சையில் இருக்கும் மற்ற இருவரின் குடும் பத்துக்கும் உதவ வேண்டும்'' என்றார்.

மதுரை மாநகராட்சி கமிஷனர் கதிரவனிடம் கேட்டோம். ''பொதுவா அம்மா உணவகத்தில் சுய உதவிக்குழு பெண்கள்தான் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அரசு ஊழியர்கள் கிடையாது. இனி, அம்மா உணவகத்தில் சமையல் செய்வதை நவீனப்படுத்த இருக்கிறோம். வேலைசெய்யும் பெண்களுக்கு இன்ஷூரன்ஸ் போன்ற ஏற்பாடுகள் செய்ய உள்ளோம். இறந்தவரின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இனி அம்மா உணவகத்தில் அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் பாதுகாப்பாக சமைப்பதற்கு ஏற்பாடு செய்வோம்'' என்றார்.

அம்மா உணவகத்தில் செய்யும் அம்மாக்களைக் காப்பாற்றுங்க அம்மா!

- செ.சல்மான்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு