Published:Updated:

மனிதநேயம் மரத்துப் போய்விட்டதா?

தலைநகர அதிர்ச்சிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சக மனிதர்களை நேசிப்பதுதான் மனிதநேயம். சக மனிதனிடம் அல்ல; தங்கள் ரத்த உறவுகளிடமே மனிதநேயத்தைக் காட்ட முடியாத அளவுக்கு சகிப்புத்தன்மை அற்றவர்களாக மனிதர்கள் மாறிவருவது அதிர்ச்சியாக உள்ளது. சென்னையில் நடந்த இரு வேறு சம்பவங்கள் அந்த அதிர்ச்சியைக் கூட்டுகினறன.

சம்பவம் ஒன்று...

மனிதநேயம் மரத்துப் போய்விட்டதா?

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் வசந்தியம்மாள். (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) 60 வயதைக் கடந்தவர். கணவர், தொழிலதிபர். ஒரு மகன், மூன்று மகள்கள் என வசதியான குடும்பம். முதுமையின் பலனால் அவருக்கு அல்சைமர் நோய் வந்தது. தங்களைத் தாங்களே உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு, நிமிடத்துக்கு நிமிடம் மறதி நோயால் அவதிப்படுவது இந்த நோயின் தன்மை என்பது, 'அரசியல் அறிந்த’ யாவருக்கும் தெரியும்.

வசந்திக்கு, சமீப காலமாக நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் ஒருநாள் தன் வீட்டில் இருந்து அரைகுறை ஆடையோடு தெருவுக்கு ஓடிவந்தார் வசந்தி. அவர் உடல் முழுவதும் சூடு காயங்கள். ரத்தம் வழிய தெருவுக்கு வந்தவரை, திரும்ப வீட்டுக்குக் கொண்டுசேர்த்தனர் தெருவாசிகள். அவருக்கு சூடு வைத்தவர்கள் அவர்களின் குடும்பத்தினரே எனத் தெரியவர, அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி. யாரோ சில அரைகுறை மருத்துவர்கள், 'அல்சைமர் நோய்க்கு உடல் முழுக்க சூடு வைத்தால் அந்த வலி தரும் அதிர்ச்சியால் நோய் தீரும்’ என அறிவுரை கூறியிருக்கின்றனர். அதனால்தான், வசந்திக்கு அவருடைய குடும்பத்தினர் இப்படி சிகிச்சை அளித்ததாகச் சொல்லப்படுகிறது. தலையில் தொடங்கி ஆசனவாய் வரை சூடு வைக்கப்பட்ட வசந்தி, இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

தன்னைப்பற்றி உணர முடியாத நிலையில் உள்ள ஒருவருக்கு இந்தக் கொடூரத்தை கொஞ்சமும் மனிதநேயம் இன்றி அரங்கேற்றிய கொடூரர்களை என்னவென்று சொல்வது?  

சம்பவம் இரண்டு...

வேளச்சேரியைச் சேர்ந்த மகேஷ§க்கு( பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. தந்தை இல்லை. தாய் புவனா  மட்டுமே. திருமணமான நாளில் இருந்து மாமியார் - மருமகள் உறவு சரியில்லை. தாயோ, மனைவியோ யாரோ ஒருவர்தான் வீட்டில் இருக்க வேண்டும் என்ற நிலை.  அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி இதுதான்... கொஞ்ச நாள் அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு, அவருக்குத் தனிமைச் சிந்தனையை ஏற்படுத்துவது. அந்த நாட்களில் மகன், மருமகள், பேரன் இவர்களின் மீது அன்பு உருவாகும். அதன்பின் அவரிடம் பேசி, 'ஏன் இங்கே வந்து யார்கூடவோ அநாதை மாதிரி தங்கணும்? வீட்டுக்கு வந்து யாரிடமும் பிரச்னை பண்ணாம நிம்மதியா வாழ்க்கையைக் கழிக்கலாம்’ என அவர் மனத்தை மாற்றுவதுதான் இவரிம் திட்டமாம்.

முதியோர் இல்லத்தில் தாய் புவனாவை அனுப்பிவைத்த மறுநாள், மகேஷ§க்கு வேறு விதமான அதிர்ச்சி. அன்று மாலை அலுவலகத்தில் இருந்தவரை, அவருடைய மனைவி பதற்றமான குரலில் வீட்டுக்கு அழைத்துள்ளார். வீட்டில் அவருடைய அம்மா புவனா, அரை மயக்கத்தில் இருந்தார். அவரின் முகம், கை, கால்களில் ரத்த காயங்கள். இடது கை கிட்டத்தட்ட உடைந்து தொங்கிய நிலையில் இருந்தது.

நடந்தது இதுதான்... முதியோர் இல்லத்தில் புவனாவை விட்டுச் சென்ற சற்று நேரத்தில் வீட்டுக்குப் போகப்போகிறேன் என இல்ல நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். 'புவனா வெளியேறினால் தாங்கள் பெற்ற அட்வான்ஸ் தொகையை இழக்க நேரிடும்’ என்ற எண்ணத்தில், 'உன்னை எங்கேயும்  அனுப்பக் கூடாதுன்னு உன் மகன் சொல்லியிருக்கார். அடம் பிடிச்சா அடிச்சுத் திருத்தச் சொல்லியிருக்கார்’ என்று கூறி, கம்பால் அவரைத் தாக்கியிருக்கிறார்கள். மறுநாள், முதியோர் இல்ல நிர்வாகிகளுக்குத் தெரியாமல் சுவர் ஏறிக் குதித்து தப்பித்து வந்திருக்கிறார்.

''ரெண்டு, மூணு நாள் விட்டா, மனசு மாறுவாங்கன்னுதான் முதியோர் இல்லத்துல விட்டேன். ஆனா, அந்தப் பாவிங்க ஈவு இரக்கம் இல்லாம என் அம்மாவை அடிச்சிருக்காங்க'' என்று இப்போது புலம்புகிறார் மகேஷ்.  

எங்கே செல்கிறோம் நாம்?

- எஸ்.கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு