Published:Updated:

'இன்ஜினீயரம்மா!'

ஒரு வைராக்கிய தாயின் வெற்றிக் கதை

'இன்ஜினீயரம்மா!'

'இந்தக் குடும்பத்தோட பாரத்தை முழுக்க நான் என் தலையில சுமக்கிறேன்’ - இது காலங்காலமாக நம்மூர் ஆண்கள் வாடிக்கையாக உச்சரிக்கும் வார்த்தை. இந்த வார்த்தைக்கு வலுசேர்க்கும் விதத்தில் 28 வருடங்களாக சித்தாளாக 'கல்லையும் மண்ணையும்’ தன் தலையில் சுமந்து, பிள்ளைகளை இன்ஜினீயராகவும், பார்மசிஸ்டாகவும் ஆக்கும் முயற்சியில் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறார் வைராக்கிய தாய் ஒருவர்.

சென்னை பூந்தமல்லியில் வசித்துவரும் 38 வயதான 'சித்தாள்’ ஜெயந்தி, தான் கடந்துவந்த முள்பாதையை தானே விவரித்தார். ''அஞ்சாவது படிக்கும்போதே படிப்பை ஏறக்கட்டிட்டு பாண்டு (சிமென்ட் சட்டி) தூக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு அப்பவே என் குடும்பம் கூலி குடும்பம் ஆயிடுச்சு.

'இன்ஜினீயரம்மா!'

16 வயசுல காஞ்சிபுரத்துல இருந்து சென்னைக்கு வாக்கப்பட்டு வந்தேன். எல்லா பொம்பள புள்ளைங்க மாறிதான் நானும், 'இன்னியோட நம்ம பாரமெல்லாம் போயிடுச்சு’ன்னு என் புருஷன் வீட்டுக்குப் போனேன். ஆனா, அப்புறம்தான் தெரிஞ்சது... அது நல்ல குடித்தனக் குடும்பம் அல்ல, குடிகார குடும்பம்னு. 24 மணி நேரமும் குடியோடும் சீட்டுக்கட்டோடும் குடித்தனம்  செஞ்ச என் புருஷனுக்கு, என் நகையை எல்லாம் அடகு வைக்கற சேட்டு கடையாகவே டாஸ்மாக் கடை மாறிடுச்சு.

அவரு என்னைக்காவது திருந்துவாரு... நாமளும் எல்லாரையும் போல ஒருநாள் நல்லா இருப்போம் என்ற நம்பிக்கையில வாழ ஆரம்பிச்ச எனக்கு, அடுத்து விழுந்த அடிதான் ரொம்பவும் படுத்தி எடுத்திடுச்சு'' என்று குரல் உடைந்தார்.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் கலங்கிய கண்களுடனே தொடங்கினார். ''என் வீட்டுக்காரருக்கு ரத்தத்துல புற்றுநோய் இருக்கு, அதுவும் ரொம்ப முத்திப்போச்சுன்னு டாக்டர்கள் கையை விரிச்சுட்டாங்க. ஏதாவது பண்ணி அவரைக் காப்பாத்தணும்னு, தெரிஞ்சவங்க கையில கால்ல எல்லாம் விழுந்து பணத்தைப் புரட்டிக்கிட்டு போறதுக்குள்ள அந்தக் காலன் முந்திக்கிட்டான். என் புருஷன என்கிட்ட இருந்து கொண்டுபோயிட்டான்'' என்று நிறுத்தினார்.

அதுவரை வெறும் சித்தாளாக மட்டும் இருந்த ஜெயந்தி, முழு நேர உழைப்பாளியாக மாறிவிட்டார். காலை 5 மணிக்குத் தொடங்கிய அவரது வேலைச் சக்கரம், இரவு 10 மணிக்குதான் வீடு திரும்பியிருக்கிறது. காலை 5 மணிக்கு தன் வீட்டு வேலையை முடித்துவிட்டு, அதற்கு பின் 8 மணி வரை மூன்று வீடுகளில் வீட்டு வேலை, 5 மணி வரைக்கும் சித்தாள் வேலை, பிறகு மீண்டும் 10 மணி வரை நான்கு வீடுகளில் வீட்டு வேலை, சில நாட்களில் இரவு வேளைகளிலும் சித்தாள் வேலை... எனப் பம்பரமாகச் சுழன்றிருக்கிறார்.

இப்படிச் சுற்றிச் சுழன்று உழைத்து, அதன் பலனாக தன் முதல் மகன் ராஜேஷை இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.

தன் தாய் படும் கஷ்டத்தைப் பார்த்த ஜெயந்தியின் இரண்டாவது மகன் கதிரவன், ''அம்மா... நானும் வேலைக்குப் போறேம்மா என்று என் 11-வது வயதில் அம்மாவிடம் சொன்னேன். அப்போ என் அம்மா என்கிட்ட, 'அப்பா இல்லாத புள்ள தப்பா போயிட்டான்னு உன்னை யாரும் சொல்லிடக் கூடாது. நீ நல்லா படிச்சு உங்கப்பா மாதிரி யாரும் நோயால சாகாம பாத்துக்க’ன்னு அழுதுகிட்டே சொன்னாங்க. அந்த ஒரு வார்த்தைதான் என்னை இந்த அளவுக்கு கொண்டுவந்திருக்கு'' என்று சொல்லும் கதிரவன், இன்று பி.பார்ம் மாணவர்.

தன் கணவன் இறந்த பிறகு, தானே உழைத்து இன்று சொந்தமாக வீடும் கட்டி, தன் பிள்ளைகளையும் முன்னேற்றிப் பார்த்திருக்கும் இந்தத் தாய் தன் வீட்டுக்குக்கூட தானே சித்தாளாக இறங்கி வேலை பார்த்திருக்கிறார். ''சித்தாள் ஜெயந்தின்னு என்ன கூப்பிட்டவங்களை எல்லாம் 'இன்ஜினீயரம்மா’ன்னு கூப்பிட வெச்சிருக்கான் என் புள்ளை. நான் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஆறுதல் தர, இது ஒண்ணே போதும்'' - பெருமிதமாகச் சொல்கிறார் ஜெயந்தி.

அம்மா என்றால் தெய்வம் என்று சும்மாவா சொல்கிறார்கள்!

- க.தனலட்சுமி

அடுத்த கட்டுரைக்கு