Published:Updated:

''ஏமாற்றியவனையே குருவாக ஏற்றுக்கொள்!''

நிஜ 'சதுரங்க வேட்டை'

பிரீமியம் ஸ்டோரி
''ஏமாற்றியவனையே குருவாக ஏற்றுக்கொள்!''

'ஒருத்தன் உன்னை ஏமாத்திட்டான்னா, அவன் மேல கோபப்படக் கூடாது. ஒரு வகையில அவன் உனக்கு குரு. எப்படி வாழறதுன்னு உனக்குக் கத்துக் கொடுத்திருக்கான்!’ - சமீபத்தில் வெளியான 'சதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் இது. நிஜத்திலும் அந்த வாசகங்களை தாரக மந்திரமாகக் கொண்டு ஏகப்பட்ட பேரை மோசடி செய்திருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த சவுமியா.  

ஆவடி அருகே உள்ள வேல்டெக் பல்கலைக்கழகத்துக்கு சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பிர்லா சாஃப்ட் கம்பெனியில் இருந்து, 'தங்கள் கல்லூரியில் கேம்ப்ஸ் இன்டர்வியூ நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை செய்யவும். இப்படிக்கு ஹெச்.ஆர் மேலாளர் சவுமியா’ என்று இ-மெயில் வந்தது. கடந்த 16-ம் தேதி  பல்கலைக்கழக வளாகத்தில் 500 இன்ஜினீயரிங் மாணவ, மாணவிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. இதில் செலக்ட் ஆன மாணவ, மாணவிகளிடம் பதிவுக் கட்டணமாக 1,500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று சவுமியா கூறினார். இதனால் சவுமியா மீது பல்கலைக்கழக வேலை வாய்ப்புப் பிரிவினருக்கு சந்தேகம்.

''ஏமாற்றியவனையே குருவாக ஏற்றுக்கொள்!''

உடனடியாக பிர்லா சாஃப்ட் கம்பெனி ஹெச்.ஆர். பிரிவு அதிகாரிகளை போனில் தொடர்புகொண்டு பேசினர். 'எங்கள் கம்பெனியில் இருந்து யாரும் வரவில்லை’ என்று அவர்கள் சொல்ல... ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, சவுமியா மற்றும் அவரது உதவியாளர் பீனத் என்ற சையத் சபானா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இருவருக்கும் பிர்லா சாஃப்ட் கம்பெனிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது தெரியவர, அவர்களை கைது செய்தனர். இதில் சவுமியாதான் பிரதான மோசடி பெண்மணி. 1,500 ரூபாய் சம்பளத்துக்கு ஆசைப்பட்டு நான்கு நாட்கள் அவருடன் பணியாற்றியதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த சபானாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ''டெல்லியைச் சேர்ந்த சவுமியா, பெங்களூரில் பி.டெக் படித்துள்ளார். கால் ஊனமுற்றவர். பி.டெக் படித்தபோது, அவரும் ஒரு கேம்பஸ்

''ஏமாற்றியவனையே குருவாக ஏற்றுக்கொள்!''

இன்டர்வியூவில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவரிடம் பதிவுக் கட்டணமாக 1,000 ரூபாய் வசூலித்துள்ளனர். ஆனால் அந்த கேம்பஸ் இன்டர்வியூவில் அவர் செலக்ட் ஆகவில்லை. இந்தச் சூழ்நிலையில் பெற்றோரை எதிர்த்து அரியானாவைச் சேர்ந்த சர்மா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன. காதல் திருமணம் கசந்துவிட, கணவரைவிட்டுப் பிரிந்து, டெல்லியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைபார்த்தார். போதிய வருமானம் கிடைக்காததால், போலியாக கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியுள்ளது.

டெல்லியில் உள்ள பிரபல சாஃப்ட்வேர் கம்பெனிகளின் வேலைவாய்ப்பு அதிகாரிகள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் பெற்றுள்ளார். பின்னர் அந்தப் பெயரில் போலியாக அடையாள அட்டைகளையும், விசிட்டிங் கார்டுகளையும் அச்சடித்துள்ளார். தொடர்ந்து அந்த கம்பெனிகளிலிருந்து இ-மெயில் வருவதைப்போல ஒவ்வொரு இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ சம்பந்தமாக தகவல் தெரிவித்துள்ளார். அதனை நம்பி கல்லூரி நிர்வாகத்தினரும் சவுமியாவை அழைத்துள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்துக்கு எந்தச் சந்தேகமும் வராமல், கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி, செலக்ட் ஆனவர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் கொடுத்து சவுமியா அசத்தியுள்ளார். போலி கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சவுமியாவுக்கு லட்சக்கணக்கில் பணம் கொட்டியுள்ளது. இதனால் அவர் பிற மாநிலங்களிலும் கைவரிசையைக் காட்டியுள்ளார் சென்னைக்கு கடந்த மாதம் வந்த அவர், இங்கு சில கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தியுள்ளார். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளிடம் தலா 1,500 ரூபாய் வீதம் வசூலித்துள்ளார். வேல்டெக் பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது சிக்கிக்கொண்டார்'' என்றனர்.

கல்லூரிகளே ஜாக்கிரதை!

- எஸ்.மகேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு