Published:Updated:

பள்ளி மாணவி... பலான விவகாரம்... படுகொலை!

சிதம்பரம் பயங்கரம்

பிரீமியம் ஸ்டோரி
பள்ளி மாணவி... பலான விவகாரம்... படுகொலை!

பள்ளி வயதிலேயே திசைமாறிப் போன சிறுமியின் சோகக் கதை இது.

கடந்த 10-ம் தேதி, கடலூர் மாவட்டம் கிள்ளையை அடுத்த எம்.ஜி.ஆர் திட்டு கால்வாயில் 15 வயது சிறுமி,  கையில் பையுடன் அழுகிய நிலையில் நிர்வாணக் கோலத்தில் பிணமாகக் கிடந்தாள். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிள்ளை போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து வந்த ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன், ஐ.ஜி மஞ்சுநாத், டி.ஐ.ஜி முருகன், எஸ்.பி ராதிகா உள்ளிட்ட அதிகாரிகள், 'இறந்தது யார்? கொலையா அல்லது தற்கொலையா?’ என்று தீவிர விசாரணையில் இறங்கினர்.

இறந்துபோன சிறுமியின் உடல் நான்கைந்து நாட்கள் தண்ணீரிலேயே கிடந்திருக்கிறது. அதனால் உடல்

பள்ளி மாணவி... பலான விவகாரம்... படுகொலை!

அழுகி, முகம் சிதைந்து போனதால், அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போனது போலீஸ். பெண்ணில் கையில் இருந்த பையைச் சோதனை செய்ததில், சுடிதார்கள், செருப்பு மற்றும் அரசு பள்ளி சீருடை ஒன்றும் இருந்தது. இறந்துபோனது பள்ளி மாணவிதான் என்று முடிவுக்கு வந்தனர் போலீஸார்.

முதற்கட்டமாக மாவட்டத்தில் காணாமல் போன சிறுமிகள் பற்றிய புகார்களை அலச ஆரம்பித்தனர். அதில் ஏதும் புலப்படாததால் அரசு பள்ளி சீருடையில் இருந்த டைலர் கடை விலாசத்தை வைத்து விசாரணையைத் தொடங்கினர். அதில் அந்த சீருடையை தைத்தது நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த காயத்ரி டைலர்ஸ் என்று தெரியவர, விசாரணையை அங்கிருந்தே தொடங்கினர். அதுவும் கைகொடுக்காததால், இறந்துபோன சிறுமி யார் என்று நான்கு நாட்களாய் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி, நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்த

பள்ளி மாணவி... பலான விவகாரம்... படுகொலை!

ஜெயபாரதி என்ற பெண், அந்தப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சடலத்தின் புகைப்படத்தைப் பார்த்து, 'இறந்துபோனது எனது பெரியம்மா மகள் கௌசல்யா’ என தெரிவிக்க, சுறுசுறுப்பானது போலீஸ். அதன் அடிப்படையில் சிறுமியின் தந்தை திருகார்த்திகேயனை, சிதம்பரத்துக்கு அழைத்துவந்து அடையாளம் காட்டியபோது, ''இது என் மகள் கௌசல்யாதான். பக்கத்து கிராமமான காரைமேடு அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளிக்கூடத்துல 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். படுபாவிங்க இந்தப் பச்ச புள்ளைய, இப்படி கொன்னுட்டாங்களே'' என்று முகத்தில் அறைந்துகொண்டு கதறித் துடித்தார்.

மாணவியின் தந்தை திருகார்த்திகேயனை சமாதானப்படுத்தி, பேச்சுக் கொடுத்தோம். ''பழையார் கிராமத்தைச் சேர்ந்த மீனவரான அன்புதாஸ் என்கிற ஜான்விஜய் என்பவன், எங்க ஊருக்கு அடிக்கடி வந்து சுற்றித் திரிந்துகிட்டு இருப்பான். எல்லோர்கிட்டேயும் பேசுறமாதிரி என் பொண்ணு கௌசல்யாகிட்டேயும் சகஜமாத்தான் பேசிக்கிட்டிருப்பான். அவன்கூட வண்டியில அடிக்கடி கடைக்குப் போய்ட்டு வருவா. சின்ன பொண்ணுதானேன்னு நானும் அதை பெருசா எடுத்துக்கல. இப்ப, எனக்கு என்னமோ அவன் மேலதான் சந்தேகமாக இருக்கு'' என்று அழுதார்.

அன்புதாஸ் பற்றி அந்தப் பகுதியில் விசாரிக்க, ''அன்புதாஸுக்கும் கௌசல்யாவின் அம்மா

பள்ளி மாணவி... பலான விவகாரம்... படுகொலை!

பழனியம்மாளுக்கும் இடையே ஏற்கெனவே தொடர்பு இருந்துள்ளது. இதனால் அன்புதாஸ், கௌசல்யாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வான். பிறகு, மாணவி கௌசல்யாவுக்கும் அன்புதாஸுக்குப் பழக்கம் ஏற்பட்டது. திருமணமும் செய்துகொள்வதாகக் கூறியுள்ளான். இதை நம்பி கௌசல்யா, அன்புதாஸுடன் மோட்டார் சைக்கிளில் செல்வாள். சம்பவத்துக்கு ஒரு வாரத்து முன்புகூட கௌசல்யாவை அவள் அம்மாதான் அன்புதாஸ்கூட அனுப்பி வைத்தார்'' என்றனர்.

இந்தநிலையில், அன்புதாஸ் மீது சந்தேகப்பட்ட போலீஸார், அன்புதாஸைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கடலூர் தனியார் லாட்ஜ் ஒன்றில் குடிபோதையில் அன்புதாஸ் மயங்கிக்கிடப்பது தெரியவர, அன்றிரவே அவனை அள்ளிவந்து விசாரித்தது.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராதிகா, ''விசாரணையில் அன்புதாஸ், 'எனக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் உள்ளது. மீன்பிடித் தொழில் மட்டுமில்லாமல் கொத்தனார் வேலையும் செய்து வருகிறேன். அப்போதுதான், கௌசல்யாவின் அம்மாகூட பழக்கம் எனக்கு ஏற்பட்டது. கௌசல்யாவும் என்கூட பழகினாள். அது காதலாக மாறியது. திருமணம் செய்வதாகக் கூறித்தான் கௌசல்யாவை கிள்ளை பகுதிக்கு அழைத்துச் சென்றேன். போகும் வழியில்தான் எனக்குத் திருமணமானதைச் சொன்னேன். அதற்கு அவள், 'பரவாயில்லை... இனிமேல் நீ என்னோடுதான் இருக்க வேண்டும்’ என்று வாக்குவாதம் செய்தாள். கோபத்தில் வாய்க்காலில் கிடந்தக் கட்டையை எடுத்து கௌசல்யாவின் தலையில் அடித்தேன். கௌசல்யா மயங்கி கீழே விழுந்துவிட்டாள். பிறகு கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்’ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதன் அடிப்படையில் அன்புதாஸ் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளோம்'' என்றார்.

பாதை மாறிய பயணங்கள், ஊர் சென்று சேர்வது இல்லை!

- க.பூபாலன், படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு