Published:Updated:

''மதுபானத்தைத் தடுப்பவர்கள், ஆள்கடத்தலை விட்டுவிடுகின்றனர்!''

விழுப்புரம் சோதனைச் சாவடி வில்லங்கம்

பிரீமியம் ஸ்டோரி
''மதுபானத்தைத் தடுப்பவர்கள், ஆள்கடத்தலை விட்டுவிடுகின்றனர்!''

விழுப்புரத்தில் உள்ள மதுவிலக்கு சோதனைச்சாவடிகளால் புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் வேதனைகளை அனுபவித்துவருகின்றனர்.

புதுச்சேரியில் மதுபானங்களில் விலை குறைவாக இருப்பதால், புதுவையில் இருந்து தமிழ்நாட்டுக்கு மதுபானங்கள் கடத்துவதைத் தடுப்பதற்காக  மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு போலீஸார் சார்பில் விழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் ஆறு இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்தச் சோதனைச் சாவடிகளைப் பற்றிதான் அதிரிபுதிரியாகக் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.

''தினமும் புதுவையில் இருந்து செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனைச்சாவடியில் தணிக்கை செய்யப்படுகின்றன. தணிக்கை செய்யப்படும் வாகனங்களில் இருந்து குறைந்தது 50 - 100 மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்வார்கள். ஆனால், பறிமுதல் செய்யப்படும் மதுபானங்களை முறையாக அரசிடம் ஒப்படைப்பது இல்லை.

''மதுபானத்தைத் தடுப்பவர்கள், ஆள்கடத்தலை விட்டுவிடுகின்றனர்!''

விற்பனைக்காக மொத்தமாக எடுத்துச் செல்வதைத்தான் விதிப்படி போலீஸார் தடுக்க வேண்டும். மற்றபடி சொந்தத் தேவைக்காக ஒன்று, இரண்டு பாட்டில்களை எடுத்துச் சென்றால் தடுக்கக் கூடாது. ஆனால், சோதனைச் சாவடியில் உள்ள போலீஸார் மொத்தமாகக் கடத்துபவர்களை விட்டுவிட்டு, ஒரு பாட்டில் எடுத்து செல்பவரைத்தான் பிடிக்கின்றனர். பறிமுதல் செய்த மதுபானங்களை போலீஸார் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு அங்கேயே குடிக்கின்றனர். மீதி பானங்களை பார்களில் இருக்கும் லிங்க் மூலம், பாதி விலைக்கு விற்கின்றனர். கடத்தலைத் தடுக்கிறார்களோ இல்லையோ... குடும்பத்துடன் செல்பவர்களை  நிறுத்தி டார்ச் லைட் அடித்து, சோதனை என்ற பெயரில் போலீஸார் இடையூறு செய்கின்றனர்.  

மாதத்துக்கு நான்கு, ஐந்து கேஸ்களைப் போட்டு, மதுபானக் கடத்தல்களைத் தடுத்ததாக பத்திரிகைகளுக்கு போஸ் மட்டும் கொடுக்கின்றனர். 10 பெட்டிகளைப் பறிமுதல் செய்தால், அதில் ஐந்தை மட்டுமே கலால் துறையில் ஒப்படைக்கின்றனர். மீதியை பாதி விலையில் விற்றுவிடுகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பிறகு மதுபானங்களை அழிக்க வேண்டும். ஆனால், கடந்த சில வருடங்களாக மதுபானங்களை அழித்ததாக எந்தச் செய்தியும் இல்லை. அப்படி என்றால், பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் யார் கைக்கு செல்கின்றன?

''மதுபானத்தைத் தடுப்பவர்கள், ஆள்கடத்தலை விட்டுவிடுகின்றனர்!''

கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆரோவில் அருகே ஒரு சோதனைச் சாவடி உள்ளது. வெள்ளி, சனிக்கிழமைகளில் சாலையில் அந்தப் பகுதியில் கெஸ்ட் ஹவுஸில் தங்குபவர்கள் மதுபானங்களை எடுத்துச் செல்வார்கள். சோதனைச் சாவடியில் அவர்களைப் பிடித்தால் கெஸ்ட் ஹவுஸுக்கு வருமானம் குறையும் என்பதால், வாரா வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் சாலையில் உள்ள தடுப்புகளை எடுத்துவிட்டு போலீஸார் யாரையும் சோதனை செய்வது இல்லை. ஞாயிற்றுக்கிழமையானால், மீண்டும் தடுப்புகளை வைத்து சோதனை செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர். இரண்டு நாட்கள் சோதனை செய்யாமல் இருக்க, போலீஸாருக்கு வாரம் 20 ஆயிரம் ரூபாய் அந்த கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர்கள் சார்பில் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சோதனைச் சாவடியில் விலையுயர்ந்த கார்களையும், கட்சிக் கொடிக் கட்டிய கார்களையும் சோதனை செய்வது இல்லை. அதில்தான் அதிக அளவு கடத்தல் நடைபெறுகிறது.  சோதனைச் சாவடிகளில் மதுபானத்தைக் கைப்பற்றுவதைத் தவிர வேறு எதிலும் போலீஸார் கவனம் செலுத்துவது இல்லை. கடந்த மாதத்தில் இரண்டு புதுச்சேரி சிறுவர்கள் பணத்துக்காகக் கடத்தப்பட்டு காரில் விழுப்புரத்துக்கும் திண்டிவனத்துக்கும் கடத்தல்காரர்களால் கொண்டுசெல்லப்பட்டனர். இந்த வழிகளில்  மூன்று சோதனைச் சாவடிகள் இருந்தும், போலீஸார் மதுபானத்திலேயே குறியாக இருப்பதால், சிறுவர்கள் கடத்தலைத் தடுக்க முடியவில்லை. வெறும் கண்துடைப்புக்காக இல்லாமல், இந்தச் சோதனைச் சாவடிகள் முழுமூச்சுடன் இயங்க வேண்டும்'' என்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி-யான மனோகரிடம் பேசியபோது, ''தமிழ்நாட்டில் அதிக அளவு வெளிமாநில மதுபானங்களைப் பறிமுதல் செய்தது விழுப்புரம் போலீஸார்தான். மூன்று ஷிஃப்ட்களில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களில் இந்த உழைப்பைப் பாராட்டி தமிழக அரசு சோதனைச் சாவடிகளுக்கு நான்கு கார்களை வழங்கியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மதுபானங்களையும் சரியாகக் கணக்குக் காட்டுகின்றனர். சரியாகக் கணக்கு வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்து வருகிறோம்'' என்றார்.

தவறு செய்யும் போலீஸார் மீது கடுமையான நடவடிக்கைத் தேவை!

- ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு