Published:Updated:

திருச்சி மாநகராட்சியில் பைப் ஊழல்?

திருச்சி மாநகராட்சியில் பைப் ஊழல்?

பிரீமியம் ஸ்டோரி
திருச்சி மாநகராட்சியில் பைப் ஊழல்?

திருச்சி மாநகராட்சியில் காவிரி - கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக பிவிசி பைப்கள் பதிக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

கடந்த 12-ம் தேதி திருச்சி கருமண்டபம் பொன்நகர் சாலையில் மாநகராட்சிக்கான குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தது. அங்கே பைப்கள் அடுக்கி வைக்கப்பட்ட லாரியில் இருந்து 'அவான் பிளாஸ்ட்’ எனும் பெயரில் ஐ.எஸ்.ஓ தரச்சான்றுகள் பெற்ற பிளாஸ்டிக் பைப்களைத் தொழிலாளர்கள் இறக்கிக்கொண்டிருந்தனர். அந்த பைப்கள் அனைத்தும் போலியானவை.  

அவான் பிளாஸ்ட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் பிரகாஷ் நாகரத்தினம், ''திருச்சியில் எங்கள் நிறுவனம் குறித்து விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்திருந்தோம், 12-ம்தேதி காலை எங்கள் திருச்சி டீலரான மருதமுத்து தொடர்புகொண்டு, 'திருச்சி பொன்நகர் சாலையில் நடக்கும் பைப் லைன் பணிகளுக்கு, நம்ம கம்பெனி பைப்கள் இறங்கிக்கிட்டு இருக்கு’ என்று சொன்னார். அவர் சொன்ன இடத்துக்கு சென்று பார்த்தபோது, எங்கள் கம்பெனி பெயர் போட்ட பிவிசி பைப்கள் லாரியில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தன. அவை அனைத்தும் போலி பைப்கள். உடனடியாக போலீஸுக்கு போன் செய்து போலி பிவிசி பைப்புகள் அடுக்கிய அந்த லாரியையும் டிரைவரையும் போலீஸில் பிடித்துக்கொடுத்தோம்'' என்றார்.

திருச்சி மாநகராட்சியில் பைப் ஊழல்?

இந்த வழக்கில் அவான் பிளாஸ்ட் நிறுவனத்துக்காக ஆஜராகியுள்ள வழக்கறிஞர் அமல் ஆண்டனி, ''இந்த வழக்கில் வணிகக் குறியீடு சட்டத்தின் கீழ் வழக்குப் பதியலாம். போலியாக பைப்களைத் தயாரித்தவர், அந்த பைப்பை விற்ற விநியோகஸ்தர், குழாய்களை ஏற்றி வந்த டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தினர், பயன்படுத்தியவர்கள் என அனைவரும் குற்றவாளிகள் என சொல்கிறது வணிகக் குறியீடு சட்டம். ஆனால் போலீஸாரோ, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக வணிகக் குறியீடு

திருச்சி மாநகராட்சியில் பைப் ஊழல்?

சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யாமல் சி.டி, புத்தகம் தயாரிப்புகளுக்காகப் போடப்படும் காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர்'' என்றார் தடாலடியாக.

திருச்சி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் கவுன்சிலருமான முத்துச்செல்வம், ''உலக வங்கியின் நிதி உதவியுடன் கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் 231 கோடி ரூபாய் செலவில்  காவிரி - கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகர் முழுக்க 385 கிலோமீட்டர் பிவிசி பைப்கள் பதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஒப்பந்தத்தில் அவான் பிளாஸ்டிக் பைப்கள் பயன்படுத்துவோம் என சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இவர்கள் போலி பைப்களைப் பயன்படுத்தியது இப்போது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை தேவை'' என்றார்.  

இந்தப் பிரச்னை குறித்து பேச திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயாவைத் தொடர்புகொண்டோம். தொலைபேசியில் பேசிய மேயரின் உதவியாளர் ஆறுமுகம், ''மேடம் அவசர வேலையா இருக்காங்க. இந்தப் பிரச்னை தொடர்பா எங்க கவனத்துக்கு வந்ததும், மாநகராட்சி இன்ஜினீயர் சந்திரனிடம் விசாரித்தோம். அதுபோன்ற சம்பவம் நடக்கவே இல்லை எண்று அவர் சொன்னார்'' என்றார். ''சம்பந்தப்பட்ட கம்பெனியின் மண்டல மேலாளரே போலி பைப் லாரியை போலீஸில் பிடிச்சுக் கொடுத்திருக்காரே?'' என்று அவரிடம் கேட்க, ''அப்படி என்றால் நீங்கள் இன்ஜினீயர் சந்திரனிடமே கேளுங்க'' என்றார்.

மாநகராட்சி இன்ஜினீயர் சந்திரனிடம் பேசியபோது, ''திருச்சி ஜங்ஷன் பகுதிகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடந்துகொண்டிருந்த வேளையில், எப்படியோ அந்த பைப்கள் ஏற்றிய லாரி அங்கே போய் நின்னிருக்கு.  

இதுகுறித்து வழக்குப் பதிவுசெஞ்சு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாங்கள் அந்த டெண்டரையே கேன்சல் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மற்றபடி காவிரி  கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கும் இப்போது பிரச்னை ஏற்பட்ட இடத்துக்கும் சம்பந்தம் இல்லை'' என்றார்.

கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, இந்தத் திட்டத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதனை வெளிச்சத்துக்குக் கொண்டுவர தீவிர விசாரணை தேவை!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு