Published:Updated:

இரண்டு ஆண்டுகளில் 700 டிரான்ஸ்ஃபர்!

கோவை வேளாண் பல்கலை அதிரடி

பிரீமியம் ஸ்டோரி
இரண்டு ஆண்டுகளில் 700 டிரான்ஸ்ஃபர்!

வேளாண் துறையை முடக்கும் அனைத்து வேலைகளையும் செய்துவருகிறார் என துணைவேந்தரைக் கண்டித்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர் கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆசிரியர்கள்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மண் மற்றும் நீர் பாதுகாப்பு பொறியியல் துறை, பண்ணை இயந்திரவியல் துறைகளை, திருச்சி குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரிக்கு மாற்றி பல்கலைக்கழகம் உத்தரவிட்டதை எதிர்த்துத்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளில் 700 டிரான்ஸ்ஃபர்!

இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரத்திடம் பேசினோம். ''கடந்த வாரம் பல்கலைக்கழகத்துல இருந்து இரண்டு உத்தரவு வந்துச்சு. ஒன்று... மண் மற்றும் நீர் பாதுகாப்பு பொறியியல் துறை, பண்ணை இயந்திரவியல் துறைகளை, திருச்சி குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரிக்கு மாற்றியது. ரெண்டாவது, இரண்டு துறைகள்ல இருக்குற அனைத்து அலுவலர்கள், ஃபைல்கள், ஆவணங்கள், சொத்து எல்லாத்தையும் மாத்தணுங்கற உத்தரவு. இதுல சொத்துங்கறது ஒர்க்‌ஷாப், இயந்திரங்கள், இயந்திரங்களை இயக்கும் மனித சக்தி எல்லாம் அடங்கும். ஆனால், இங்கே இருக்குற ஒர்க்ஷாப், இயந்திரங்களை அங்கே கொண்டுசெல்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

கடந்த 42 வருஷமா இங்கே பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருது. மண், நீர்வளப் பாதுகாப்பு, பண்ணை இயந்திரவியல் இது ரெண்டும் அடிப்படை துறைகள். இந்த ரெண்டு துறைகளை மாத்தறது சரியில்லை.

இரண்டு ஆண்டுகளில் 700 டிரான்ஸ்ஃபர்!

குமுளூரில் இருக்குற கல்லூரி, 1989-ம் ஆண்டு விவசாயக் கல்லூரிக்காகத் தொடங்கப்பட்டது. 1992-ல்தான் பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. கோயம்புத்தூர்ல இருக்குற ஒர்க்ஷாப் வசதிகள்ல கால் பங்குகூட குமுளூரில் கிடையாது. 22 வருஷமாகியும் டெவலப் பண்ண முடியாத ஒரு காலேஜை, முதுகலை பாடப்பிரிவு ஆரம்பிக்கிறதால மட்டும் எப்படி டெவலப் பண்ண முடியும்?

கட்டடம், இயந்திரம், லேப் என எந்த வசதியும் குமுளூரில் கிடையாது. இதையெல்லாம் ஒரு நாளில் எப்படி கொண்டுபோவது?. கட்டடம் கட்டி, இயந்திரங்களை எல்லாம் நிறுவிய பின்னர்தான் அங்கே ஆரம்பிக்கணும். இப்போது இரு துறைகளையும் மாற்றுவதால், பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் பாதிக்கும். போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், எம்.டெக்., பி.ஹெச்டி ஆகிய மேற்படிப்புகளில் சேரும் மாணவர் சேர்க்கை கணிசமா குறையும். எனவே, பல்கலைக்கழகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து இரு துறைகளும் இங்கேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கணும்'' என்றார்.

''பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 700 பேருக்கும் மேல் இடமாற்றம்  செய்யப்பட்டிருக்காங்க. பணி நியமனத்தில் எதுவும் வெளிப்படைத்தன்மை இல்லை. உதவி பேராசிரியர்கள் நேர்முகத்தேர்வு நடத்தியும், இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை. இப்படியே போனால் பல்கலைக்கழகத்தை காலி செய்து விடுவார்' என்றும் ஆசிரியர்கள் புலம்பினர்.

கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமியிடம் இதுதொடர்பாகப் பேசினோம். ''இரண்டு துறைகளையும் இப்போ மாத்தின மாதிரி பேசறாங்க. 25 வருஷத்துக்கு முன்னாடியே மாத்த உத்தரவு போட்டாச்சு. அப்போ இவங்க போகலை. இப்போ இந்த முடிவை நான் எடுத்த மாதிரி சொல்றாங்க. கல்வி கவுன்சில், மேலாண்மை வாரியத்தில் முறையா விவாதம் நடத்திதான் இந்த முடிவு எடுத்திருக்காங்க. ஆராய்ச்சி எதுவும் பாதிக்கப்படாது. குமுளூர்ல 1,300 ஏக்கர் இடம் இருக்கு. கட்டட வசதிகள் இல்லைங்கறது எல்லாம் உண்மை இல்லை.

ரெண்டு வருஷத்துல 700 பேர் டிரான்ஸ்ஃபர் எல்லாம் இருக்காது. 150 பேரை டிரான்ஸ்ஃபர் பண்ணியிருப்போம். ஒருவர் டிரான்ஸ்ஃபர் கேக்கும்போது, பல வருஷம் வேலை பார்த்த இன்னொருத்தரை இங்கே இருந்து டிரான்ஸ்ஃபர் பண்ணிதானே ஆகணும்? எங்க பல்கலைக்கழகத்துல 1,200 பேராசிரியர்கள், 740 கிளரிக்கல் ஸ்டாஃப், 9,000 டெக்னீஷியன் இருக்காங்க. அதுல வருஷத்துக்கு 50-ல இருந்து 75 பேர் டிரான்ஸ்ஃபர் ஆகியிருப்பாங்க. அவ்வளவுதான்'' என்றார்.

அதுசரி!

- ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு