Published:Updated:

பறிபோனது நண்பனின் உயிர்!

பறந்தது காதல் ஜோடி..

பிரீமியம் ஸ்டோரி
பறிபோனது நண்பனின் உயிர்!

நண்பனுடைய காதல் ஒரு அப்பாவியை பலிகொண்டிருக்கிறது....

தர்மபுரி மாவட்டம் தொப்பூரைச் சேர்ந்த ரிஸ்வான் பாஷா என்ற முஸ்லிம் இளைஞரும், உப்பாரப்பட்டியைச் சேர்ந்த ஜெயந்தி என்ற இந்து பெண்ணும் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறினர். ஜெயந்தியின் உறவினர்கள், 'பெண்ணைக் காணவில்லை’ என்று ரிஸ்வான் பாஷாவையும் அவரது நண்பர்கள் சிலரையும் அடையாளம் காட்டி, தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல் துறை விசாரித்துவந்த ரிஸ்வான் பாஷாவின் நண்பர்கள் நான்கு பேரில் சந்தானம் என்பவர் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்துகொண்ட விவகாரம்தான் விஷயத்தை சிக்கலாக்கியிருக்கிறது.

பறிபோனது நண்பனின் உயிர்!
பறிபோனது நண்பனின் உயிர்!

விசாரணை என்ற பெயரில் சந்தானத்தை அடித்துத் துன்புறுத்தியதால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று  அவரின் உறவினர்கள் போராட்டத்தில் குதிக்க, இப்போது தொப்பூர் போலீஸார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

இதுதொடர்பாக ரிஸ்வான் பாஷாவின் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமாரிடம் பேசினோம். 'ரிஸ்வான் பாஷா மூன்று மாதத்துக்கு முன்புதான் எங்க ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஆட்டோ ஓட்ட வந்தான். அதுக்கு முன்னாடி ஒரு காலேஜ்ல பஸ் டிரைவரா இருந்தான் அந்த காலேஜ்லதான் அந்தப் பொண்ணு ஜெயந்தி படிச்சிருக்கு ரெண்டு பேருக்கும் பழக்கமாகிடுச்சு. இது ஜெயந்தி வீட்டுக்குத் தெரியவே, ரெண்டு பேரும் வீட்டைவிட்டு வெளியேறிட்டாங்க எங்க போனாங்கனு தெரியாது. ஜெயந்தியோட உறவினர்கள் எங்க ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து, பொண்ணு எங்கனு விசாரிச்சாங்க. பொண்ணு வரலைன்னா அவ்வளவுதான்னு மிரட்டிட்டுப் போய் போலீஸ்ல புகார் கொடுத்தாங்க. உடனே எஸ்.ஐ வைத்தீஸ்வரன் ஸ்டாண்டுக்கு வந்து விசாரிச்சார். பிறகு ரிஸ்வான் பாஷாவின் நெருங்கிய நண்பர்களான கார்த்தி, சுப்பிரமணி, மாதேஷ், சந்தானம் ஆகிய நான்கு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போய் விசாரிச்சிருக்காங்க. இவங்க தெரியலைன்னு சொன்னதும் கண்டபடி அடிச்சி துன்புறுத்தியிருக்காங்க.   எஸ்.ஐ வைத்தீஸ்வரனும் சம்பத்குமாரும் சேர்ந்து அடி.. பிச்சி எடுத்துருக்காங்க. கடந்த 14-ம் தேதி, அந்தப் பெண்ணைக் கூட்டிக்கிட்டு வரச்சொல்லி வெளியே அனுப்பினாங்க. சந்தானம் அந்த

பறிபோனது நண்பனின் உயிர்!

இருவரையும் தேடி சேலத்துக்குப் போயிருக்கான். 16-ம் தேதி மதியம், மறுபடியும் சந்தானத்துக்கு எஸ்.ஐ வைத்தீஸ்வரன் போன் செய்து மிரட்டவே, பயந்துபோய் தற்கொலை பண்ணிக்கிட்டான். அவன் சாவுக்குக் காரணமான காவல் துறை மீது கண்டிப்பா நடவடிக்கை  எடுக்கணும்'' என்றார் ஆக்ரோஷமாக.

சந்தானத்தின் தங்கை அந்தோனியம்மாளிடம் பேசினோம். ''எங்க அண்ணன் எந்த தப்பும் செய்யலைங்க. எந்த வம்புதும்புக்கும் போக மாட்டாரு. யாரோ  யாரையோ கூட்டிகிட்டுப் போனதுக்கு எங்க அண்ணனை அடிச்சே சாகடிச்சுட்டாங்களே...'' என்று கதறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் சேலம் மாவட்ட பொருளாளர்  வேலுநாயகன்,  ''யாரோ செய்த தவறுக்கு அவருடைய நண்பர்களை அடித்துக் கொடுமைப்படுத்துவது   கண்டிக்கத்தக்க செயல். தவறு செய்த போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் காட்டமாக.

தொப்பூர் போலீஸாரிடம் விசாரித்தோம். ''பெண்ணைக் காணவில்லை என்று பெண் வீட்டார் கொடுத்த புகாரில், 'ஆட்டோ ஓட்டுநர்கள் நான்கு பேருக்கு என் பொண்ணு எங்க இருக்காங்கனு தெரியும்’ என்று சொல்லியிருந்தாங்க அதன் அடிப்படையில்தான் சந்தானம், கார்த்தி, சுப்பிரமணி, மாதேஷ் ஆகியோரை விசாரித்தோம். மற்றபடி, அடித்து சித்ரவதை செய்திருந்தால் நாங்கள் ஏன் அவர்களை வெளியில் விடவேண்டும்? 14-ம் தேதியே அனுப்பிவிட்டோம்.  அவர் 16-ம் தேதிதான் தற்கொலை செய்திருக்கிறார். ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்று எங்களுக்கும் புரியவில்லை'' என்றனர்.  

நண்பனின் காதல், ஒரு அப்பாவியின் உயிரைப் பறித்துவிட்டது.

- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு