Published:Updated:

''விவசாயிகள் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள்!

கோர்ட் கதவைத் தட்டும் அப்பாவு

பிரீமியம் ஸ்டோரி

'வேளாண் பயிர்கள் அனைத்துக்கும் தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க முடியும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு. தலைமை நீதிபதி தலைமையிலான முதல் பெஞ்சில் அவரே ஆஜராகியிருக்கிறார்.

''விவசாயிகள் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள்!

 அப்பாவு நம்மிடம், ''உலக பொருளாதார பலத்தில் சீனாவுடன் அமெரிக்காவால் போட்டியிட முடியவில்லை. அதற்கு அந்த நாட்டின் விவசாய உற்பத்திதான் காரணம். இந்தியாவிலும் 58 சதவிகித மக்கள் விவசாயிகள்தான். ஆனால், அவர்கள் ஆண்டுக்கு ஆண்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். 1967-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு 16.50 சதவிகிதம் நிதி ஒதுக்கப்பட்டது. நாட்டு வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்களிப்பு 55 சதவிகிதம் ஆக இருந்தது. அப்போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 100 ரூபாய். ஒரு கோட்டை (138 கிலோ) நெல் விலை 100 ரூபாய். அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பும் இருந்தது.

காலப்போக்கில், விவசாயிகள் கவனிக்கப்படாததால், நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு 18 சதவிகிதமாக சுருங்கிவிட்டது. நிதி ஒதுக்கீடும் நான்கு சதவிகிதம் ஆகிவிட்டது. விவசாய உற்பத்தி கூடினால்தான், நாட்டின் பொருளாதார வலு அதிகரிக்கும். அதை உறுதிப்படுத்தும் வகையில் 2012-ல் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அமெரிக்காவில் அளித்த பேட்டியில், 'இந்தியாவில் சீராகப் பருவமழை பெய்கிறது. விவசாய உற்பத்தி கூடும். அதனால், பணத்தின் மதிப்பும் கூடும்’ என்று நம்பிக்கையோடு பதில் அளித்தார். ஆனாலும், விவசாயிகள் நலன் தொடர்ந்து புறக் கணிக்கப்படுவதால் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை.  

2001-ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் ஏறத்தாழ 16,415 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதில், தமிழ்நாட்டில் மட்டும் 965 விவசாயிகள். இப்போது உள்ள பயிர் காப்பீட்டு முறைகளை மாற்றி அமைத்தாலே, விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க முடியும். தேசிய பயிர் காப்பீடு திட்டத்தின்படி 50 சதவிகித பிரிமியத் தொகையை மாநில அரசும், எஞ்சிய 50 சதவிகித பிரிமியத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளும் செலுத்துகின்றனர். விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை 50:50 என்ற அடிப்படையில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து வழங்குகின்றன. ஐந்து வருவாய் கிராமங்கள் முழுமைக்கும் பயிர் இழப்பு நடந்து இருந்தால்தான், பயிர் இழப்பீடு கிடைக்கும். தனிப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பு ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு கிடைப்பது இல்லை. விவசாயிகளுக்கு உதவாத, இந்தப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மறு ஆய்வு செய்து ஒவ்வொரு விவசாயிக்கும் புயல், மழை, வறட்சி மற்றும் நோய் தாக்குதல்களால் ஏற்படும் இழப்புகளில் இருந்து மீள தனி நபர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு மீதும் தமிழக அரசு மீதும் வழக்குத் தொடுத்துள்ளேன்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்கிற விவசாயிகளின் உழைப்பை, அரசு தவறுதலாகக் கையாள்கிறது. அதாவது, தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 10 லட்சம் பேர் வருமான வரி செலுத்துபவர்கள். 20 லட்சம் பேர் வியாபாரிகள். 20 லட்சம் பேர் அரசு ஊழியர்கள். 25 லட்சம் பேர் தனியார் நிறுவனங்களில் நல்ல வேலையில் இருப்பவர்கள். 10 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுபவர்கள் என மொத்தம் 85 லட்சம் வசதி படைத்தவர்கள், ரேஷன் அரிசியை வீட்டில் சமைத்து சாப்பிடுவதே இல்லை. இந்த இலவச அரிசிதான் ஒரு கிலோ அரிசி நான்கு ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்டு, அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகிறது. இவ்வாறு, 16.5.11 முதல் 13.2.14 வரையிலான காலகட்டத்தில் 15,432 வழக்குகள் தமிழ்நாடு குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. 552 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர். உண்மையிலேயே தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் அரிசியை வழங்கினால், இப்போது வழங்கப்படும் அரிசியில் 50 சதவிகிதமே போதுமானது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு நான்கு ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படும். அந்தப் பணத்தை ஏழை விவசாயிகளின் தனிநபர் பயிர் காப்பீட்டு திட்டம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.  

இரண்டாம் பசுமைப் புரட்சியை உருவாக்குவேன் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், அதற்கான அக்கறையே தமிழக அரசுக்கு இல்லை. 2012-13-ம் ஆண்டு காரிப்பருவத்துக்கு 140 கோடி ரூபாய் அளவுக்குப் பயிர் இழப்பீட்டு கோரிக்கை வந்துள்ளது. அதில், தமிழக அரசு தனது பங்காக செலுத்த வேண்டிய 70 கோடி ரூபாயைக் கட்டாததால், மத்திய அரசும் தனது பங்கான 70 கோடி ரூபாயை இதுவரை செலுத்தவில்லை. 2013-14-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு இன்ஷூரன்ஸ் தொகையில் தமிழக அரசின் பங்கான 17 கோடி ரூபாயைச் செலுத்தாததால் மத்திய அரசு இந்த இன்ஷூரன்ஸை ஏற்றுக்கொள்ளவே இல்லை. 2014-15-ம் ஆண்டு காரிப்பருவம் (ஏப்ரல் டு செப்டம்பர்) பயிர் காப்பீடு செய்வதற்கான உத்தரவை இன்னும் தமிழக அரசு வழங்காததால், தமிழக விவசாயிகள் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேரவே முடியாமல் தவிக்கின்றனர்'' என்றார்.

இதுகுறித்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் சமர்ப்பிக்கும் பதில் மனுக்கள், விவசாயிகளைக் காப்பாற்றுமா?

- எஸ்.முத்துகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு