Published:Updated:

ஐந்து வருடங்களில் 50 பலிகள்!

அலறும் அருப்புக்கோட்டை கிராமங்கள்

பிரீமியம் ஸ்டோரி
ஐந்து வருடங்களில் 50 பலிகள்!

ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து கிட்னி பாதிப்பால் 50 பேர் திடீர் திடீரென்று பலியாக, அடுத்தது யார் என்ற பீதியில் உறைந்துபோய் இருக்கின்றனர் அந்தக் கிராம மக்கள்.

விருதுநகர் மாவட்ட கடைக்கோடியில் இருக்கிறது தும்மசின்னம்பட்டி கிராமம். இங்குதான் கடந்த ஐந்து ஆண்டுகளில் 50-க்கும் அதிகமானவர்கள் திடீரென்று கிட்னி பாதிப்புக்கு உள்ளாகி இறந்துபோயிருக்கிறார்கள். இப்போதும் 200-க்கு அதிகமானவர்கள் கிட்னி பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இப்படியொரு பகீர் தகவலை நம்மிடம் சொன்ன அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான மலைராஜன்,  தும்மசின்னம்பட்டி கிராமத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

ஐந்து வருடங்களில் 50 பலிகள்!
ஐந்து வருடங்களில் 50 பலிகள்!

கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ். ''எங்க கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளா 100-க்கும் மேற்பட்டவங்க கிட்னி பாதிப்பு அடைஞ்சிருக்காங்க. 50-க்கும் அதிகமானவங்க இதே கிட்னி ஃபெயிலியர் பிரச்னையால் இறந்து போயிருக்காங்க. சமீபத்துல அ.தி.மு.க-வைச் சேர்ந்த யூனியன் கவுன்சிலர் அமலா பாஸ்கரன்கூட கிட்னி கோளாறாலதான் இறந்துபோனார். எங்க பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணனின் மகன் நாகராஜன் போன வருஷம் கிட்னி பாதிச்சு இறந்து போனார். இப்ப ராமகிருஷ்ணனும் கிட்னி  பாதிச்சு நோயாளியாகிட்டார். ஒரு சில குடும்பத்துல எல்லோரும் கிட்னி பிரச்னையால் அடுத்தடுத்து இறந்து போயிருக்காங்க.

எங்க ஊர் ஜனங்க குடிக்கிற தண்ணீரில் உப்பு சத்து அதிகமாக இருக்கிறதாலதான், எல்லோரும் கிட்னி பாதிச்சு இறக்கிறதா சந்தேகப்பட்டோம். இது சம்பந்தமா அதிகாரிங்ககிட்ட புகார் செஞ்சோம். அரசு தரப்பில் குடிதண்ணீரை சோதனை செஞ்சு பார்த்துட்டு, தண்ணீர்ல பிரச்னை இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும், தொடர்ந்து பலருக்கும் கிட்னி பிரச்னை வந்துகிட்டுதான் இருக்கு'' என்றார்.

கூலித்தொழிலாளி அம்மாசியும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் அடுத்தடுத்து கிட்னி பாதிப்பால் கடந்த ஆண்டு இறந்து போயுள்ளனர். அம்மாசியின் மகள் அழகுவள்ளி, ''முதலில் எங்க அப்பா அம்மாசிக்கு கிட்னி பிரச்னை ஏற்பட்டது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்து போனார். பிறகு எங்க அம்மா பந்தானம், தம்பிங்க முருகேசபாண்டி, முனியாண்டிக்கும் கிட்னி பாதிப்பு

ஐந்து வருடங்களில் 50 பலிகள்!

ஏற்பட்டது. ஒரு வாரத்துல ஒவ்வொருத்தரும் ரெண்டு தடவை  கிட்னி டயாலிசிஸ் பண்ணணும்னு டாக்டருங்க சொன்னாங்க. ஆனா, இதுக்காக ஆயிரக்கணக்கில் செலவழிக்க எங்ககிட்ட பணவசதி இல்லை. கடந்த  ஆண்டு எங்க அம்மா இறந்தாங்க. அதுக்கு அடுத்து 15 நாளில் என் தம்பிங்க அடுத்தடுத்து வரிசையா இறந்துபோனாங்க'' என்று கலங்கினார்.

சமூக ஆர்வலரான மலைராஜன், ''அருப்புக்கோட்டை பகுதி கிராமங்களான எம்.புளியங்குளம், மிதலைக்குளம், தும்மசின்னம்பட்டியில் கிட்னி பிரச்னையால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புளியங்குளம், மிதலைக்குளத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 பேர் இறந்துள்ளனர். 60 பேர் கிட்னி பாதிக்கப்பட்டுள்ளனர். தும்மசின்னம்பட்டியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 பேர் இந்த நோயால் அநியாயமாக உயிர் இழந்துள்ளனர். இதில், பெரும்பாலானவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத ஏழை விவசாயக் கூலிகள்.

தும்மசின்னம்பட்டி கிராம மக்கள் குடிக்கும் தண்ணீரில் உப்புச் சத்து அதிகம் இருப்பதால், பலரும் கிட்னி பாதிப்பு ஏற்படுகிறது என்கிறார்கள். ஆனால், தண்ணீரை பரிசோதித்தால், குடிப்பதற்கு உகந்தது என்று அதிகாரிகள் சான்றிதழ் தருகின்றனர். இந்தக் கிராமங்களில் மேலோட்டமாக ஆய்வு செய்யாமல், தீவிரமாக ஆய்வு செய்து கிட்னி பாதிப்புக்கு என்ன காரணம் என்பதைக் கண்டுப்பிடிக்க வேண்டும். கிட்னி பாதிப்புக்குப் பயந்து இந்தக் கிராமத்தில் இருந்து பல குடும்பங்கள் வெளியேறி வருகின்றன. எனவே, அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் கதிரேசனிடம் பேசினோம். ''கிட்னி பாதிப்பு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தும்மசின்னம்பட்டியில் எதனால் கிட்னி பாதிப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டுப்பிடிக்க தீவிர மருத்துவ முகாம் விரைவில் நடத்தப்படும். கிட்னி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்'' என்றார் உறுதியுடன்.

மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம்.

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு