Published:Updated:

ஆக்கிரமிப்பை அகற்றினால் அவ்வளவுதான்!

மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகள்.. தொல்லையில் மயிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
ஆக்கிரமிப்பை அகற்றினால் அவ்வளவுதான்!

''ஆக்கிரமிப்பு கட்டடங்களைக் கண்டுபிடித்து இடிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. ஆனால், ஆக்கிரமிப்பு என்று தெரிந்தும் கட்டடத்தை இடிக்காமல் வேடிக்கை பார்க்கிறது மாநகராட்சி'' என்று புகார் வாசிக்கிறார்கள் மயிலாப்பூர்வாசிகள்.

சென்னை மயிலாப்பூர் ரோசரி சர்ச் சாலையில் 80 சதுர அடி கட்டடம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தலித் சமூக புனரமைப்பின் மாவட்டச் செயலாளர் இமானுவேல், சென்னை மாநகராட்சிக்கு கடந்த சில மாதங்களாகப் புகார் மனு அனுப்பி வந்தார். அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இமானுவேல் மனு அளித்தும் பதில் இல்லை. இதனை அடுத்துதான் நீதிமன்ற படி ஏறியிருக்கிறார் இமானுவேல்.

அவரைச் சந்தித்தோம். ''மயிலாப்பூர், ரோசரி சர்ச் சாலையின் நடைபாதையில் இரவு நேர பாடசாலை என்ற பெயரில் 80 சதுர அடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால், கடும் போக்குவரத்து நெருக்கடி. அந்தக் கட்டடத்துக்கு மின் இணைப்பும் கிடையாது. அதில், எந்த மாணவ, மாணவிகளும் பயில்வதும் கிடையாது. சிலரின் பிடியில் இருக்கும் இந்தக் கட்டடத்தில் சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. இந்தத் தகவல் போலீஸாருக்குத் தெரிந்தும், அவர்கள் நடவடிக்கை எடுப்பது இல்லை. அதனால்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், ரவிசந்திரபாபு ஆகியோர், மாநகராட்சிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்'' என்றார்.

ஆக்கிரமிப்பை அகற்றினால் அவ்வளவுதான்!

அறிவர் அம்பேத்கர் சுனாமி மகளிர் கூட்டமைப்பின் தலைவி ஆக்னஸ், ''இந்தக் கட்டடம் சமூக விரோதிகளின் பிடியில் இருப்பதால், இந்தப் பகுதியில் யாரும் நிம்மதியாக வாழ முடியவில்லை. மயிலாப்பூர் போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் இந்தக் கட்டடத்தை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்,

ஆக்கிரமிப்பை அகற்றினால் அவ்வளவுதான்!

போராட்டத்தில் குதிப்போம்'' என்றார் ஆவேசமாக.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூரிடம் பேசினோம். ''இதுதொடர்பான எந்தப் புகாரும் எனது கவனத்துக்கு வரவில்லை. விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படாததற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, ''அந்த இரவு நேர பாடசாலையை ஆரம்பித்தது ஓர் அரசியல் கட்சி. இந்தப் பாடசாலையை யாரும் பராமரிக்காததால், இப்போது சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறிவிட்டது. இதற்கு வலதுகரமாக இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் இருக்கின்றனர். கட்டடத்தை இடித்தால் சட்ட - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவோம் என்று அவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கின்றனர். சட்ட - ஒழுங்கு பிரச்னை வராமல் இருக்க, ஆக்கிரமிப்பு கும்பலுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுகின்றனர். குறிப்பாக நுண்ணறிவுப் பிரிவில் உள்ள ஒருவர், ஆக்கிரமிப்பு கும்பலுடன் கைகோத்து செயல்பட்டு வருகிறார். மேலிடத்து பிரஷர் என்று ஆக்கிரமிப்பை அகற்றாமல் நழுவுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள். மேலிடம் என்பது சமூக விரோத கும்பலுக்கு துணையாக இருக்கும் கட்சிகள். இதுவே மயிலாப்பூர் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததற்கு முக்கியக் காரணம்'' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''இந்தப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், எதுவும் பேச முடியாது'' என்றார். ''ஆக்கிரமிப்பு கும்பலுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே...'' என்று கேட்டதற்கு, ''இந்தப் புகார் உண்மையென்றால் சம்பந்தப்பட்ட​வர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மயிலாப்பூரில் மட்டும் அல்ல... சென்னையின் பல இடங்களிலும் இதுபோல பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த விவகாரம் நீதிமன்றப் படியேறியிருப்பதால், விவாதப் பொருளாகியிருக்கிறது.

நீதிமன்றப் படியேறினால் மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்ற முடியும் போலும்!

- எஸ்.மகேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு