Published:Updated:

'நேர்மை இல்லாத வேலை... கொள்கை இல்லாத அரசியல்!'

வேண்டாம் என்கிறார் நல்லகண்ணு

'நேர்மை இல்லாத வேலை... கொள்கை இல்லாத அரசியல்!'

வேண்டாம் என்கிறார் நல்லகண்ணு

Published:Updated:
'நேர்மை இல்லாத வேலை... கொள்கை இல்லாத அரசியல்!'

''ஓர் அதிகாரி பணியில் சேரும்போது சில காலம் நேர்மையாக இருக்கிறார். நாட்கள் நகர நகர நேர்மை தவறிவிடுகிறார். அது ஏன் ஐயா?''- இப்படி ஒரு கேள்வியை சங்கீதா என்ற மாணவி கேட்க... ''அதிகாரிகள் நியாயமாக நடந்தால் மேலே இருக்கும் உயர் அதிகாரிகளிடம் இருந்தும், மற்றவர்களிடம் இருந்தும் பல நெருக்கடிகள் வரத் தொடங்கும். அதனால் அவரது நேர்மை தவறும் சூழல் உருவாகிறது'' என்று பதில் சொன்னார் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு.

விழுப்புரம் அருகே உள்ள மைலம் பொறியியல் கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் பேச வந்திருந்தார் நல்லகண்ணு. அவரிடம் மாணவர்கள் கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்க அத்தனைக்கும் பொறுமையாக பதில் சொன்னார் அவர். முதலில் நல்லகண்ணு சில விஷயங்களை மாணவிர்களிடம் பகிர்ந்துகொண்டார். ''உங்களின் முந்தைய தலைமுறைக்கு கிடைக்காத பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. எங்கள் காலத்தில் வானொலிகூட இல்லை. ஆனால், இன்று உங்கள் காலத்தில் கைக்குள் உலகம் சுருங்கிவிட்டது. நீங்கள் கிராமத்தில் இருந்தாலும் உங்களுக்கு எல்லாமே கிடைக்கிறது. பொதுவாழ்வில் மாணவர்களின் பங்கு முக்கியமானது. அதுதான் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படும். அரசியல் என்பது யாருக்கும் தனிப்பட்டது இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது. அதில் நீங்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும். பொது நிர்வாகம், பொது உடைமை என்று வரும்போது பாரபட்சம், உறவுமுறை பார்க்கக் கூடாது என்பதை நீங்கள் மனதில்வைத்து செயல்பட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நேர்மை இல்லாத வேலை... கொள்கை இல்லாத அரசியல்!'

சுதந்திரப் போராட்டத்துக்கு முந்தைய காலகட்டங்களில் பணக்காரர்களும், பட்டதாரிகளும் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகுதான் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வந்தது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முடிவெடுக்கும் தகுதியும் அதிகாரமும் இப்போது உங்கள் கையில் இருக்கிறது. அதற்கான பொறுப்பும் உங்களிடம் இருக்கிறது. நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான சீர்கேடுகள் ஏராளமாக நடக்கிறது. தவறுகள் எங்கே தொடங்குகிறது என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

'ஒழுக்கமில்லாத கல்வி, உழைப்பில்லாத செல்வம், மனசாட்சி இல்லாத இன்பம், நேர்மை இல்லாத வேலை, பக்தி இல்லாத பிரார்த்தனை, கொள்கை இல்லாத அரசியல்- இது எதுவும் வேண்டாம்’ என்று காந்தி சொன்னார். அதை மனதில்கொண்டு நீங்கள் செயல்படுங்கள்'' என்று நல்லகண்ணு முடிக்க... கேள்வி நேரம் ஆரம்பமானது.

சௌமியா என்ற மாணவி, ''நான் என் அப்பாவுடன் வருமானம் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ் வாங்க தாலுக்கா ஆபீஸ் போயிருந்தேன். அங்கே சான்றிதழ் வழங்க பணம் வாங்கினார்கள். அது லஞ்சம்தானே?'' என்று கேட்டார்.

'நேர்மை இல்லாத வேலை... கொள்கை இல்லாத அரசியல்!'

''நிச்சயமாக... இதுபோன்ற சான்றிதழ்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் சட்டமே கொண்டு வந்துள்ளார். ஆனாலும் சில அலுவலகங்களில் நீங்கள் சொன்னதுபோல பணம் வாங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக நீங்கள்தான் போராட வேண்டும்'' என்றார் நல்லகண்ணு.

''என் உயரதிகாரி ஒரு தவறு செய்கிறார். அதை நான் தட்டிக்கேட்டால் என்னை அந்த வேலையில் இருந்து விரட்டிவிடுவார்கள். அந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய முடியும்?''- இப்படிக் கேட்டவர் லட்சுமி.

''நீங்கள் தனித்து செயல்பட்டால் உங்களுக்கு பிரச்னை வரவே செய்யும். அதனால் நீங்கள் ஒரு குழுவாக இணைந்து அவரை எதிர்க்க வேண்டும்'' என்று ஐடியா கொடுத்தார் நல்லகண்ணு.

அடுத்து எழுந்த பார்த்தசாரதி, ''எல்லா தரப்பு மக்களுக்கும் முழுமையான சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு நல்லகண்ணு, ''அம்பேத்கர் காலத்தில் அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று பல சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனாலும் அது முழுமையடையவில்லை. இன்று பல ஏற்றத்தாழ்வுகள் இருப்பது நிஜம். வருங்காலத்தில் அதை மாற்ற நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்'' என்று முடித்தார்.

இது சாம்பிள் கேள்விகள் மட்டுமே கிட்டதட்ட இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக மாணவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்ன நல்லகண்ணு, ''இந்தப் புள்ளைங்கதானே நாளைக்கு நம் நாட்டின் நம்பிக்கை. அவங்ககிட்ட பேசுறதைவிட எனக்கு என்ன பெரிய சந்தோஷம் இருக்கப்போகுது!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

-அ.ஆமினா பீவி

படங்கள்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism