
இரண்டே அடிகளில் கல்வியின் அவசியத்தை உலகத்துக்குச் சொன்னவர் திருவள்ளுவர். வேலூரில் அவர் பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள்.
2002-ல் அப்போதைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தின்போது 112 ஏக்கரில் வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் இது. 11 அரசு கல்லூரிகள் உட்பட 112 கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. வருடா வருடம் இந்தப் பல்கலைக்கழகத்தில் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் மதிப்பெண்களைப் பதிவுசெய்வதிலும் பல உள்குத்துகள் நடப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே பிரச்னையை முன்வைத்து போராட்டங்கள் நடக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சிமன்ற உறுப்பினர் இளங்கோவன், ''திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஸ்தம்பித்துள்ளது. பல வருடங்களாகப் பல்கலைக்கழகத்துக்கு என நிரந்தர பேராசிரியர்களோ, நிரந்தர ஊழியர்களோ கிடையாது. பல வருடங்களாக தற்காலிகமாக வேலை பார்த்து வந்த 66 ஊழியர்களை, திடீரென்று வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஆட்கள் பற்றாக்குறையால் மதிப்பெண் பதிவுசெய்யும் வேலையை அவுட் சோர்ஸிங் முறையில் விட்டதன் விளைவாகத்தான் பல்கலைக்கழகத்துக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்.
தகுதிவாய்ந்த ஆசிரியர்களை வைத்துதான் விடைத்தாள்களைத் திருத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற ஆணை உள்ளது. அதையெல்லாம் மீறி தகுதியே இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு

பல்கலைக்கழக நிர்வாகம் விடைத்தாள்களைத் திருத்தியுள்ளது. ஒரு நாளைக்கு 40 விடைத்தாள்களைத்தான் திருத்த வேண்டும் என வரைமுறை உள்ளது. ஆனால், நிர்வாகமோ 140 விடைத்தாள்களை அவசரகதியில் திருத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நன்றாகப் படிக்கக் கூடியவர்களுக்குக் குறைவான மதிப்பெண்களும், படிக்காத மக்கு பிள்ளைகளுக்கு அதிக மதிப்பெண்களையும் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது'' என்றார் ஆவேசத்தோடு.
இந்த நிலையில், பல புகார்களை முன்வைத்து கடந்த வாரம் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள், விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர்கள், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடலூர் கந்தசாமி நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முல்லை, ''ஆங்கிலம் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு மூன்று தாள்களுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு தாள்களுக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை. அதேபோல், இன்டர்னல் மார்க் வழங்குவதிலும் பல குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன. ஒரு மாணவி படித்து முடித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்னும் அந்த மாணவிக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடைத்தபாடில்லை. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற அந்த மாணவியின் கனவை பல்கலைக்கழகம் சுக்குநூறாகத் தகர்த்துவிட்டது'' என்றார் கோபமாக.
பல்கலைக்கழக துணைவேந்தர் குணசேகரனிடம் பேசினோம். ''கடந்த 10 வருடங்களாகப் பல்கலைக்கழகத்துக்கு எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் இருந்தது. இப்போதுதான் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. தகுதியான பேராசிரியர்களைக் கொண்டுதான் விடைத்தாள்களைத் திருத்தியுள்ளோம். முடிந்தவரை எல்லா பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த செமஸ்டரில் இருந்து மதிப்பெண் பட்டியல்களை அந்தந்த கல்லூரியின் முதல்வர்களுக்கே அனுப்பிவிடலாம் என்ற திட்டத்தில் உள்ளோம். இதனால் பல பிரச்னைகள் தவிர்க்கப்படும்'' என்றார் உறுதியாக.
இந்தப் பல்கலைக்கழக விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்!
- நா.இள.அறவாழி
படங்கள்: ச.வெங்கடேசன், எஸ்.தேவராஜன்