Published:Updated:

பாம்பும் போச்சு... பணமும் போச்சு!

சேலத்தில் ஒரு நிஜ சதுரங்க வேட்டை!

பாம்பும் போச்சு... பணமும் போச்சு!

சேலத்தில் ஒரு நிஜ சதுரங்க வேட்டை!

Published:Updated:
பாம்பும் போச்சு... பணமும் போச்சு!

'நான் யார்கிட்டயும் ஏமாந்தது இல்லை. ஆனா, பலவிதங்களில் ஏமாந்த ஏகப்பட்ட மனிதர்களைச் சந்திச்சேன். மண்ணுளிப் பாம்பு அஞ்சு லட்சம்னு விற்கவந்த ஒரு குரூப்கூட, மூணு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை. அவங்க பேச்சும், மார்க்கெட்டிங் தந்திரங்களும் அரசியல் கட்சித் தலைவரோட அனுபவத்துக்கு சமம். 'பணத்துக்கு ஏன் இப்படி அலையுறாங்க?’னு யோசிச்சப்ப, இங்கே மனுஷனா இருக்கிறதைவிட பணக்காரனா இருக்கத்தான் ஆசைப்படுறாங்கனு புரிஞ்சுகிட்டேன்''- மண்ணுளிப் பாம்பு பற்றிய மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டிய 'சதுரங்க வேட்டை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் கடந்த வாரம் ஆனந்த விகடனுக்கு அளித்தப் பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார். அந்த ஆசைதான் இப்போது சேலத்தில் மண்ணுளிப் பாம்புடன் ஒரு கும்பலை சிக்க வைத்திருக்கிறது.

 கடந்த 5-ம் தேதி சேலத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு காவல் துறையும், வனத்துறையும் இணைந்து உள்ளே புகுந்தது. அந்த ஹோட்டலில் ஒரு அறையின் கதவை போலீஸ் தட்ட... நீண்ட நேரத்துக்குப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாம்பும் போச்சு... பணமும் போச்சு!

பிறகு கதவு திறக்கப்பட்டது. அந்த அறையில் இருந்த ரவி, பிர்தௌஸ், ஜாஃபர்கான், மைக்கேல்ராஜ் ஆகிய நான்கு பேரையும் போலீஸ் கைதுசெய்தது. கூடவே ஒரு மண்ணுளிப் பாம்பும்!

வனத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் கைதுசெய்யப்பட்ட ரவியிடம் பேசினோம். ''மண்ணுளிப் பாம்பு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. திருச்சியில இருக்கும் எங்களோட நண்பர் ஒருத்தர் மூலமா குணசீலன்னு ஒருத்தர் அறிமுகமானார். அவர்தான் எங்களுக்கு மண்ணுளிப் பாம்பு பற்றி சொன்னார். 'எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட நாலு கிலோ வெய்ட்ல ஒரு மண்ணுளிப் பாம்பு இருக்கு. எப்படியும் அஞ்சு லட்சத்துக்கு குறையாம விலை போகும். ஒரு லட்சம் ரெடி பண்ணினா வாங்கிடலாம். நாலு லட்சம் லாபத்துக்கு வித்துடலாம்’னு சொன்னாரு. நாங்களும் பணத்தை ரெடி பண்ணி அவருகிட்ட கொடுத்தோம். அவர்தான் எங்களை சேலம் வரச் சொன்னாரு. இங்கே வந்து ரூம் போட்டுத் தங்கியிருந்தோம். குணசீலனும் எங்களுக்கு பாம்பு கொண்டுவந்து கொடுத்தாரு. இதை எப்படி விற்கிறதுன்னு கேட்டோம். அதுக்கு நிறைய ஆளுங்க இருக்காங்க. நான் பார்ட்டியை கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனவருதான்... திரும்ப வரவே இல்லை. இந்த விஷயம் எப்படி போலீஸுக்குப் போச்சுன்னு தெரியலை...'' என்றார் அப்பாவியாக.

அருகில் இருந்த பிர்தௌஸ், ''பாம்பு நல்லா வெய்ட்டாக இருந்துச்சுங்க. எப்படியும் அஞ்சு லட்சத்துக்கு வித்துடலாம்னுதான் நினைச்சோம். இப்போ பணமும் போயிடுச்சு. போலீஸ்லயும் மாட்டிகிட்டோம். பாம்பு கொடுத்தவன் எங்க போனான்னே தெரியலை...'' என்று கலங்கினார்.

அவர்களிடம், ''சதுரங்க வேட்டை படம் பார்த்தீங்களா?'' என்று கேட்டோம். ''இன்னும் இல்லைங்க. இப்போ போலீஸ்ல மாட்டின பிறகுதான் அந்தப் படத்தைப் பத்தி சொன்னாங்க. இனிதான் பார்க்கணும்!'' என்றனர்.

வனச்சரக அலுவலர் குமாரிடம் பேசினோம். ''இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் மண்ணுளிப் பாம்பு பற்றி அடிக்கடி பேசியிருக்கிறார்கள். இவர்களுக்குள் ஏதோ சண்டை வந்திருக்கிறது. அப்போது பாம்பு பற்றியும் பேசியிருக்கிறார்கள். இதை அங்கிருந்த ஒருவர் கேட்டு அழகாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லியிருக்கிறார். அங்கிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. நாங்கள் ஹோட்டல் அறையை சோதனையிட்டபோது உள்ளே பாம்பு இருந்தது. இந்த பாம்பு மூலம் மருந்து தயாரிப்பதாகச் சொல்கிறார்கள். அது பித்தலாட்டம். எவ்வளவோ விழிப்பு உணர்வு வந்தாலும் ஏமாறும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு ஒரே காரணம் பணத்தாசை!'' என்றார்.

ஏமாற்றுவதும் ஏமாறுவதும் இயற்கையான விஷயம்தான் போல.

- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism