Published:Updated:

40 நாட்களில் 6 குழந்தைகள்!

கிலியில் கொடைக்கானல் மலைக்கிராமம்

40 நாட்களில் 6 குழந்தைகள்!

கிலியில் கொடைக்கானல் மலைக்கிராமம்

Published:Updated:
40 நாட்களில் 6 குழந்தைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பல கோடி ரூபாயை மருத்துவத் துறைக்கு ஒதுக்கீடு செய்கிறது அரசு. சில ஊழியர்களின் சோம்பேறித்தனத்தால் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுகின்றன பல மலைக்கிராமங்கள். இந்த நிலையில், 'திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுக்கா கூக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகாடு கிராமத்தில் கடந்த 40 நாட்களில் 6 குழந்தைகள் இறந்துபோயுள்ளனர்’ என்ற தகவலை நமக்கு 'வாட்ஸ்-அப்’-ல் அனுப்பியிருந்தார் வைகை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை.

அதிர்ச்சியடைந்த நாம், அந்தக் கிராமத்துக்குப் பயணமானோம். கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி வரை பேருந்து செல்கிறது. அங்கிருந்து ஜீப் மூலமாக 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கணேசபுரத்தை அடைந்தோம். அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து பெரியகாடு கிராமத்தை அடைந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

40 நாட்களில் 6 குழந்தைகள்!

ஆரோக்கியம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு இருந்த குழந்தைகள் சோம்பலாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் இறப்பு தொடர்பாக கிராம மக்களிடம்

40 நாட்களில் 6 குழந்தைகள்!

விசாரித்தோம். உடனே சோகமான அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வேலம்மாள், ''அந்தக் கொடுமையை ஏன் கேட்குறீங்க? அரசியல்வாதிங்க ஓட்டுக்கேட்டு வர்றதோட சரி! அதுக்குப் பிறகு யாரும் இங்கே வந்து எட்டிப் பார்க்குறதுகூட இல்ல. சரியான சாலை இல்ல. யாருக்கு உடம்புக்கு முடியலைன்னாலும், டோலி கட்டிதான் தூக்கிட்டுப் போவோம். இதை எல்லாம் சகிச்சுக்கிட்டோம். ஆனா, இப்ப வரிசையா குழந்தைங்க செத்து விழுறதைப் பார்க்குறப்ப நெஞ்சே வெடிக்குற மாதிரி இருக்கு. இத்தனைக் குழந்தைங்க செத்த பிறகும், இதுவரைக்கும் ஒரு அரசாங்க ஆபீஸரோ, ஒரு டாக்டர், நர்ஸோ வந்து எட்டிக்கூட பார்க்கல'' என்றபடியே தேம்பி அழ ஆரம்பித்தார்.

அங்குள்ள ஆதிவாசி மக்களில் 10-ம் வகுப்பு வரை படித்திருக்கும் நாகசெல்வன், ''குழந்தைகள் சாவதற்கு முக்கியக் காரணம் குடிதண்ணீர்தான். 2007-ம் வருஷம் இதே மாதிரி நாலு குழந்தைங்க அடுத்தடுத்து இறந்துட்டாங்க. அப்ப திண்டுக்கல் கலெக்டரா இருந்த வாசுகி அம்மா நேர்ல வந்துப் பார்த்துட்டு, குடிதண்ணிக்கு ஏற்பாடு செய்றதா சொல்லிட்டுப் போனாங்க. அதுக்குப் பிறகு ஒரு குடிநீர்தொட்டி கட்டிக் கொடுத்தாங்க. ஆனா, போர்வெல்லோ கிணறோ வெட்டாம, ஆத்துல இருந்து குழாய் மூலமா தொட்டிக்குத் தண்ணீர் கொண்டுவந்தாங்க. அந்த தண்ணியைப் பயன்படுத்துற வரைக்கும் ஒண்ணும் பிரச்னை இல்ல.

இப்ப ரெண்டு வருஷமா மழை இல்லாம ஆறு வறண்டு போச்சு. அதனால, தண்ணிக்கு ரொம்ப சிரமப்படுறோம். ரெண்டு கிலோ மீட்டர் நடந்துபோனா, ஒரு இடத்துல குட்டையில கொஞ்சம் தண்ணீர் தேங்கி இருக்கும். சாக்கடை தண்ணி மாதிரி இருக்கும் அந்த தண்ணியை எடுத்திட்டு வந்துதான் குடிக்கிறோம். அந்த தண்ணி ஒத்துக்காம குழந்தைகளுக்கு வாந்தி, பேதியாகி இந்த 40 நாள்ல ஆறு பேர் இறந்துட்டாங்க. இந்தத் தகவலை பி.டி.ஓ ஆபீஸுக்குத் தெரிவிச்சோம். ஆனா, இதுவரைக்கும் யாருமே வந்து பார்க்கலை. உடனடியா ஒரு கிணறு வெட்டி குடிநீருக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்தாதான், இருக்குற குழந்தைகளையாவது காப்பாத்த முடியும்'' என்றார் சோகமாக.

வைகை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை, ''பக்கத்தில் இருக்கும் கணேஷபுரத்துல, ஒரு ஆரம்ப சுகாதாரநிலையத்தை அமைத்துக்கொடுத்தால், சுத்து வட்டாரத்துல இருக்கும் மலைக் கிராம மக்களுக்கு மருத்துவ வசதிகிடைக்க வாய்ப்பாக இருக்கும்'' என்றார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்திடம் இந்தத் தகவலை தெரிவித்தோம். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர், ''உடனடியாக சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு அதிகாரிகளை அனுப்பி மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய சொல்கிறேன்'' என்றார். அதனை அடுத்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் தலைமையில் ஒரு மருத்துவ டீமை அனுப்பி வைத்த கலெக்டர், உடனடியாக லாரி மூலம் குடிநீர் அனுப்பவும் நடவடிக்கை எடுத்தார். குடிநீர் வசதிக்கான திட்டம் தீட்டி அதனை உடனடியாக செயல்படுத்தவும் உத்தரவிட்டிருக்கிறார்.

சுகாதாரப் பிரச்னையால் இனியும் அங்கு மரணம் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை.

- ஆர்.குமரேசன்

படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism