Published:Updated:

நான்தான்டா 'ரூட் தல'!

சென்னை கல்லூரிகளில் பரவிவரும் பயங்கரம்!

பிரீமியம் ஸ்டோரி

செப்டம்பர் 8.

நான்தான்டா 'ரூட் தல'!

மத்தியான நேரம்... சென்னை அண்ணாசாலை ஸ்பென்ஸர் பிளாஸா பஸ் ஸ்டாப். ஏராளமான பயணிகள் காத்திருக்கிறார்கள். அப்போது, ஒரு பஸ் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒரு மாணவர் குதித்து ரோட்டில் தலைதெறிக்க ஓடுகிறார். அதே பஸ்ஸில் இருந்து குதித்த நாலைந்து மாணவர்கள் கைகளில் அரிவாள், கத்திகளுடன் துரத்துகின்றனர். இவர்கள் போட்ட கூச்சலில், பயணிகள் மிரண்டு வேடிக்கைப் பார்க்க.. பின்னால் சென்ற கும்பல் முன்னால் ஓடிய மாணவரை நெருங்கி அரிவாளால் வெட்டுகிறது. கைவிரல்கள் துண்டித்து விழ, தலையில் பயங்கர வெட்டுக்காயங்கள். ரத்தம் பீறிட நடுரோட்டில் அலறியபடி சாய்கிறார். அதன்பிறகே, துரத்திய கும்பல் சந்துபொந்துகளில் ஓடி மறைகிறது. இந்தக் கொடூர சம்பவம் நடந்த இடத்துக்கு எதிரில்தான் அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. ஸ்பென்ஸர் பிளாஸா வாசலில் நான்கு டிராஃபிக் போலீஸார் இத்தனையையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை.

நான்தான்டா 'ரூட் தல'!

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. கடந்த சில தினங்களாக சென்னை கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. புத்தியைத் தீட்ட கையில் புத்தகங்களுடன் கல்லூரிக்கு மாணவர்கள் சென்ற காலம் போய், கத்தியைத் தீட்ட கல்லூரிக்கு வரும் காலமாக மாறி வருகிறது. இந்த அரிவாள் கலாசாரம் மாணவர்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது.  

செப்டம்பர் 9-ம் தேதி, மாநிலக் கல்லூரி மாணவர்கள் புளியந்தோப்பை சேர்ந்த அகஸ்டின் ஆகாஷ், பெரம்பூர் பெரியார் நகரை சேர்ந்த அருண்குமார் ஆகிய மாணவர்களை கல்லூரி வளாகத்திலேயே வீச்சரிவாளால் பயங்கரமாக வெட்டியுள்ளனர். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்த மாணவர்களைப் பாதுகாப்பில் நின்ற போலீஸார் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த மோதல் மாணவர் பேரவை தேர்தல் தொடர்பாக நடந்ததாகத் தெரிகிறது.

இப்படியாக நடக்கும் மாணவர்கள் மோதல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

'ரூட் தல?' யார்  

குறிப்பிட்ட பஸ் ரூட்டில், பெரும்பாலான மாணவர்களால் ஒருவன் தலைவன் எனக் கொண்டாடப்படுவதே 'ரூட் தல’ எனப்படுகிறது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஆனந்த், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோரிடம் பேசினோம்.

'சென்னையைப் பொறுத்தவரைக்கும் பஸ்களில் கல்லூரிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கிருந்துதான் மாணவர்களிடையே மோதல் உருவாகுகிறது. அதாவது 'ரூட் தல’ என்ற பதவிக்காக மாணவர்களிடையே போட்டி ஏற்பட்டு அது மோதலாக மாறுகிறது. இந்த 'ரூட் தல’ பிரச்னையை முளையிலேயே கிள்ளி எரிந்து விட்டால் மாணவர்கள் மோதல் தடுக்கப்பட்டுவிடும். சென்னையில் பல கல்லூரிகள் இருந்தாலும் குறிப்பாக பச்சையப்பன், நந்தனம், மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரி. தியாகராஜா கல்லூரி, அம்பேத்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றில் மாணவர்கள் மோதல் இருக்கின்றன. இதில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன், நந்தனம், புதுக் கல்லூரிகளில் மாணவர்கள் மோதல் அதிக அளவில் நடக்கின்றன. இதற்கு ஒவ்வொரு கல்லூரி மாணவர்களிடையே ஈ.கோ, ரூட் தல பிரச்னைகள் தலைதூக்குகின்றன. இந்தப் பிரச்னையை ஏற்படுத்தும் மாணவர்களின் பின்னணியில் தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சி அரசியலும் இருப்பது வேதனைக்குரியது. மாணவர்கள் மோதல் சம்பவத்தைக் குறைப்பதற்காக எங்கள் அமைப்பு சார்பில் கவுன்சலிங் கொடுக்கிறோம். வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்துகிறோம். விழிப்பு உணர்வு நோட்டீஸ் பிரசாரம், செமினார் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்து, சென்னையில் நான்கு கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பேச்சுவார்த்தை நடத்தி வன்முறைக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கல்லூரி வளாகத்தில் போலீஸாரை அனுமதிப்பதை கல்லூரி நிர்வாகம் தடுக்க வேண்டும். இதுவும் மாணவர்கள் மோதலுக்கு ஒருகாரணமாக உள்ளது. எனவே, அரசும், கல்லூரி நிர்வாகமும், மாணவர்களும் ஒருங்கிணைந்து இந்தப் பிரச்னையைக் கையாண்டால் மட்டுமே சுமுக தீர்வு ஏற்படுத்த முடியும். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஷிஃப்ட் முறையை அரசு ஏற்படுத்தியது. ஷிஃப்ட் முறை மாணவர், ஆசிரியர் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நான்தான்டா 'ரூட் தல'!

தமிழகத்தில் 74 அரசு கல்லூரிகள் உள்ளன. ஆனால், அவற்றில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. மகளிர் கல்லூரிகளில்கூட கழிவறை வசதிகள் இல்லை. அடுத்தபடியாக கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் கல்லூரியைப் புறக்கணித்துவிட்டு வெளியே வருகின்றனர். முக்கியமாக, கல்லூரிகளில் மாணவர்களின் திறமை, ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கலைவிழாக்கள், விளையாட்டு போன்றவற்றில் கல்லூரி நிர்வாகமும், அரசும் போதிய கவனம் செலுத்துவது இல்லை. இதுவும் மாணவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழிவகுக்கிறது. ஆசிரியர்களுக்குக் கொடுத்த மரியாதையும் மதிப்பும் இன்று மாணவர்களிடையே இல்லை' என்றனர்.

8 மாதங்களில் 89 பேர் கைது

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். 'மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்தும் மாணவர்கள் மோதலைத் தடுக்க முடியவில்லை. பொது இடங்களில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 89 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது 11 வழக்குகளும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது 8 வழக்குகளும், நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் மீது 5 வழக்குகளும், இதர கல்லூரி மாணவர்கள் மீது 7 வழக்குகள் என 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டு கைதானவர்களில் பச்சையப்பன் கல்லூரியில் 7 பேரும், நந்தனம் கலைக் கல்லூரியில் 31 பேரும், தியாகராஜா கல்லூரியில் 8 பேரும் என 46 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல கடந்த ஆண்டு  மோதலில் ஈடுப்பட்ட 162 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 36 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் மோதலைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்துக்குள் எங்களை அனுமதிப்பது இல்லை. மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் வெட்டப்பட்டவுடன் நாங்கள் உள்ளே சென்றிருந்தால் குற்றவாளிகளைப் பிடித்திருப்போம்'' என்றனர்.

கல்லூரி வளாகத்திலேயே ஆயுதங்கள்

சென்னையில் உள்ள கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள மரப்பொந்துகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, நோட்டு புத்தகத்தின் நடுவிலும் சிறிய கத்தியையும் சில மாணவர்கள் வைத்திருக்கின்றனர்.

நான்தான்டா 'ரூட் தல'!

மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு ஆதரவாக சில அமைப்புகள் களமிறங்குகின்றன. இருப்பினும், காவல் துறை தனது கடமையை செய்து வருகிறது. பிரச்னைக்குரிய கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது'' என்று அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

'தேவை இயக்கம்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, 'பஸ்ஸில் ஏறும் மாணவர்கள், டிக்கெட் எடுக்காமல் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 'எங்க கண்டக்டரு ரொம்ப நல்லவரு, டிக்கெட் கூட எடுக்கச் சொல்ல மாட்டாரு’ என்று ஒரு மாணவன் பாட..... சக மாணவர்கள் அதற்கு பஸ்ஸைத் தட்டி தாளமிடுகின்றனர். அடுத்து வரும் பாடல் வரிகள் வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசமாக இருக்கின்றன. இதை தட்டிக் கேட்க யாரும் முன்வருவது இல்லை. பஸ்ஸுக்குள் மாணவர்கள் மோதிக்கொள்வதால், குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாணவர்களின் மோதலுக்கு அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றார்.

முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணனிடம் பேசினோம். 'சென்னை நகரின் மையப் பகுதிகளிலேயே கல்லூரிகள் செயல்படுகின்றன. வெளிநாடுகளில் நகரத்தை விட்டுத் தள்ளியே கல்வி நிலையங்கள் இருக்கும். சென்னையில் உள்ள கல்லூரிகளும் இதே அடிப்படையில் தான் முன்பு தொடங்கப்பட்டன. ஆனால் நகர வளர்ச்சிக் காரணமாக பச்சையப்பன், நந்தனம், மாநிலக் கல்லூரிகள் உட்பட பெரும்பான்மையான கல்லூரிகள் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து இருக்கின்றன. ஏட்டளவிலேயே சாதி மறுப்புகள் இருக்கின்றன. சாதி அடிப்படையிலும் மாணவர்கள் மத்தியில் மோதல் உருவாகின்றன. இது தடுக்கப்பட வேண்டும்.

நான்தான்டா 'ரூட் தல'!

பருவத் தேர்வுக்கான வருகைப்பதிவில் கட்டுப்பாடு இல்லை. இதை கட்டாயப்படுத்த வேண்டும். பஜார் நோட்ஸ்களைப் படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற மனநிலையில் பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர். இந்த நிலைமாற வேண்டும். அதாவது திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். மாணவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான தகவல்களை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். மாணவர்களைப் பற்றிய அக்கறை, சமூக பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். சட்டங்களும் கடுமையாக்கப்பட்டால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வது குறையும்'' என்றார்.

இளைஞர்கள் கையில் எதிர்கால இந்தியா இருப்பதை உணர்வார்களா இவர்கள்?

- எஸ்.மகேஷ்

படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு