Published:Updated:

'எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும்!'

போராடும் ஜெயங்கொண்டம்... என்ன செய்யப்போகிறது என்.எல்.சி.?

பிரீமியம் ஸ்டோரி
'எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும்!'

ஒரே விஷயத்துக்காக 11,000 வழக்குகள் போட்டும் தீர்வு கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். சொந்த கிராமத்திலேயே அகதிகளாய் வாழும் இந்தக் கொடுமை, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடக்கிறது.

போராட்டக்குழுவில் இருக்கும் ஆசைத்தம்பியைச் சந்தித்தோம். கடந்த 1989-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஜெயங்கொண்டம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பயன்படுத்தும் அளவுக்கு நிலக்கரி புதைந்து கிடப்பதாக தகவல் சொன்னது. இதை போலந்து நாட்டில் இருந்து வந்த ஆய்வுக்குழுவும் ஒப்புக்கொண்டது. அந்த அடிப்படையில் கடந்த 1991-ம் ஆண்டு அ.தி.மு..க ஆட்சியின் கடைசி கால கட்டத்தில் இதற்கான திட்டத்தை அறிவித்தார்கள். அதிகாரிகளையும் நியமித்து  இதற்காக 17 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 23 குக்கிராமங்களில் இருந்து. 7,800 ஏக்கர் பட்டா நிலங்களையும், 2,500 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களையும் கையகப்படுத்தினார்கள். விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட பட்டா நிலங்களுக்கு அரசுதரப்பிலிருந்து ஏக்கருக்கு சுமார் 15,000 முதல் 22,000 வரை இழப்பீடாக கொடுத்தார்கள். இந்தத் தொகை போதாது என போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் எங்களிடம்  இந்தத் திட்டத்தால் இந்தப் பகுதியே வளம்பெறப் போகிறது என்றும், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சொன்னார்கள். அதோடு, இப்போதைக்கு இந்தப் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். போதாது என நினைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, பிறகு பணம் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்கள்.அதிகாரிகளின் ஆலோசனைப்படி நாங்கள் 7121 பேர் நீதிமன்றத்துக்குப் போனோம். அடுத்து வந்த தி.மு.க., அ.தி.மு.க  இரு அரசுகளும் இந்தத் திட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. போராட்டம் வலுப்பெற்ற பின்பு 2008-ம் ஆண்டு தி.மு.க இரண்டு சார்பு நீதிமன்றங்களை அமைத்தது. வழக்கை விசாரித்த நீதியரசர்கள், 'ஒரு ஏக்கருக்கு இழப்பீடு மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து 10 லட்சம் முதல் 17 லட்சம் வரை இழப்பீடு தரவேண்டும்; அதையும் ஒரு மாதத்துக்குள் கொடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

'எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும்!'

இந்தத் தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகியும் இதுவரை எங்களுக்கான இழப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை. இனியும் தாமதிக்காமல் எங்களுக்கான தொகையைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், எங்கள் நிலத்தை எங்களுக்கே திருப்பித்தர வேண்டும்'' என்றார்.

'எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும்!'

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரியலூர் மாவட்ட பி.ஜே.பி இளைஞரணி தலைவர் ஜெயக்குமார், ''ஆசியாவிலேயே தரமான நிலக்கரி இந்தப் பகுதியில் இருக்கிறது என்றும் இந்த நிலக்கரியில் கார்பன் கன்டன்ட் அதிகமிருப்பதால் வெப்பத்தை அதிக அளவில் வெளிப்படுத்தும் என்றும், 137 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு நிலக்கரி படிமங்கள் இருப்பதாகவும் ஓ.என்.ஜி.சி அறிக்கை கொடுத்து இருக்கிறது. இந்த வகை நிலக்கரியால் வருடத்துக்கு 2,400 மெகாவாட் மின்சாரம் தயாரித்து நம் மாநில தேவை போக அண்டை மாநிலங்களுக்கும் மின்சாரம் தரலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். மக்கள் வேண்டாம் என போராடும் எத்தனையோ திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. ஆனால், மக்களே ஏற்றுக்கொள்ளும் இந்தத் திட்டத்தில் ஏனோ, அக்கறை காட்டாமல் இருக்கிறது அரசு.

இந்தத் திட்டத்தை கையில் எடுத்த மின்வாரியம் அதை

'எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும்!'

டிட்கோவிடம்  ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்களும் இது பெரிய திட்டம் என்பதால்  ரிலையன்ஸ், டாடா, மேக்னெல்லி, பாரத் போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க, அவர்கள் வந்து ஆய்வு செய்கிறார்கள். இந்த நேரத்தில் இழப்பீட்டுக்கான விவசாயிகளின் போராட்டம் வலுப்பெற்றிருக்க, இதைப் பார்த்த நிறுவனங்கள் ஒதுங்கிக்கொள்கிறது. அதற்கடுத்து என்.எல்.சி நிறுவனம் வருகிறது. அவர்களின் ஆய்வில் இங்கு தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும், இதற்காக வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டும்; கையகப்படுத்திய இடம் போதாது இன்னும் இடங்கள் வேண்டும்; சுரங்க உரிமை உரிமம் தரவேண்டும் என மூன்று கோரிக்கைகளை வைத்தார்கள். ஆனால், அரசு தரப்போ, ஒப்பந்தப்படி மின் உற்பத்தியை தொடங்குங்கள் பிறகு பார்க்கலாம் என அலட்சிய பதிலைத் தருகிறார்கள். இதனால், என்.எல்.சி-யும் இதிலிருந்து ஒதுங்கிக்கொண்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தாமல் இருப்பதால் இந்தப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்காமல் நீதிமன்ற உத்தரவுப்படி பணமும் கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கவனத்துக்குக் கொண்டுசென்று என்.எல்.சி நிறுவனம் மூலமே இந்தத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்'' என்றார்.

இதுகுறித்து அ.தி.மு.க எம்.பி-யான சந்திரகாசியிடம் பேசினோம். ''இது பலவருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டம். முதல்வர் அம்மாவின் ஆணைப்படி நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசியுள்ளேன். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்'' என்றார்.

இருட்டையும் திருட்டையும் போக்க நிலக்கரியும் மின்சாரமும்தான் தேவை!

   - எம்.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு