Published:Updated:

அடுத்த முதல்வர் அன்புமணி

தர்மபுரி டு ஜார்ஜ் கோட்டை ப்ளான்!

பிரீமியம் ஸ்டோரி
அடுத்த முதல்வர் அன்புமணி

''அன்புமணி உங்கள் வீட்டு பிள்ளை... தர்மபுரி மக்களின் பிள்ளை... இந்த பிள்ளையை உங்களை நம்பி ஒப்படைக்கிறேன். தமிழகத்திலேயே யாரும் இல்லாத அளவுக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்'' நாடாளுமன்றத் தேர்தலின் தர்மபுரி பா.ம.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அன்புமணியை அறிமுகப்படுத்தி வைத்தபோது ராமதாஸ் இப்படி பேசினார்.

தமிழகம் முழுக்க அடித்த அ.தி.மு.க அலையையும் தாண்டி தர்மபுரியை வசப்படுத்திய பா.ம.க கூடாரத்தில் இப்போது ஒலிப்பது... 'அடுத்த முதல்வர் அன்புமணி’.

அடுத்த முதல்வர் அன்புமணி

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பதில் ஆரம்பித்து,

அடுத்த முதல்வர் அன்புமணி

சின்ன சின்ன பகுதிகளுக்கும் சென்று நன்றி சொல்வதோடு அந்தப் பகுதியின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பது.. மக்களை சந்திப்பது... என அன்புமணியின் செயல்பாடுகள் தர்மபுரியை இன்னும் தேர்தல் களம்போலவே காட்சியளிக்க வைத்திருக்கிறது.

இது தொடர்பாகப் பேசிய பா.ம.க-வின் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரான வெங்கடேஸ்வரன், ''தர்மபுரியில இருக்குற ஒவ்வொரு குடிசை தவறாம போய் நன்றி சொல்லணும்னு சொல்கிறார். ஓட்டுக்கேட்க போகாத இடங்களுக்குக்கூட நன்றி சொல்ல போகணும்னு ஆசைப்படுகிறார். இதுவரை 40 சதவிகித இடங்களுக்குச் சென்றுவிட்டார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். முக்கியமான பிரச்னை என்றால் ஸ்பாட்டில் இருந்தே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, அதை சரி செய்கிறார். இப்படித்தான் அதியமான் கோட்டைக்குப் பக்கத்துல இருக்கிற கோடியூர் பகுதிக்கு நன்றி அறிவிப்புக்கு செல்லும்போது, 'ரோடு போடுறேன்னு சொல்லி வந்துகிட்டு இருந்த பஸ்ஸை நிறுத்துனாங்க. ஆனா ஆறு மாசமாகியும் அந்த பஸ்ஸை மறுபடியும் விடவே இல்லை’ என்று மக்கள் கண்ணீர் வடித்தார்கள். அப்போது இரவு 8 மணி. அந்த சமயத்துலகூட உடனே ஜி.எம்-க்கு போன் பண்ணி விவரத்தைக் கேட்டார். அதற்கு அந்த ஜி.எம் 'அதெல்லாம் இல்லையே சார் பஸ் போய்கிட்டுத்தான் இருக்கு’னு சொன்னார். அப்ப பஸ் வந்து ஆறு மாசமாகுதுனு மக்கள் சொல்றது பொய்யானு இவர் கோபமாகிவிட்டார். அப்புறம் மோட்டுப்பட்டி கிராமத்துக்கு ரேஷன் கடை இல்லாத பிரச்னை, உடையான் காடு கிராமத்துக்கு சாலையில்லாத பிரச்னைனு இவர் செல்லும் இடங்களில் உள்ள முக்கிய பிரச்னைகளை தனக்கு ஒதுக்கப்படும் நிதியில் தீர்த்து வைக்கவும் அவ்வப்போது பட்டியல் போட்டுக்கொள்கிறார். தர்மபுரி

அடுத்த முதல்வர் அன்புமணி

மக்கள் இங்கு வேலை வாய்ப்பு இல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவுக்குப் பிழைக்க சென்றுகொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மாற்றி தர்மபுரியிலேயே அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று செயல்படுகிறார். முதற்கட்டமாக விவசாயிகளை ஒன்றிணைத்துக் கூட்டுறவு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார். அதை தனியார் நிறுவனமாகப் பதிவுசெய்து நபார்டு மூலமாக அவர்களுக்கு பயிற்சி அளித்து  விவசாயம் சார்ந்து மார்கெட்டிங்கில் ஆரம்பித்து அவர்களே எல்லாவற்றையும் செய்யும் அளவுக்குக் கூட்டுறவு நிறுவனம் தொடங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்'' என்று முடித்தார்.

பா.ம.க-வின் தர்மபுரி மாவட்ட மாநில துணைச்செயலாளர் சரவணன், ''அவர் இப்போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். முதல் முறையா மக்கள்ட்ட ஓட்டு வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார். அதனால ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி சொல்றத பிரதான கடமையாக நினைக்கிறார், ஜெயலலிதா கருணாநிதி மாதிரி போய்விட முடியாது, அந்தம்மா பர்கூர்ல ஜெயிச்சாங்க... அதோட  போய்ட்டாங்க. திருச்சியில ஜெயிச்சாங்க... ஏதோ ஒரு முறை யானைகுட்டி கொண்டு போய் கொடுத்துட்டு வந்தாங்க. அவ்வளவுதான். வேற ஏதாவது திட்டங்கள் துவக்கிவைக்கிறதுக்கு ஏதோ ஒருமுறை இரண்டு முறை வர்றாங்க. இவர் அந்தமாதிரி இல்ல. ஒரு நல்ல முன்னுதாரணமான நாடாளுமன்ற உறுப்பினரா இருக்கணும்னு நினைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி ஃபார்முலாவை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர் ஐயா சொல்லியிருக்கிறார் அதற்கான ஆலோசனைகளையும் சொல்வதாக சொல்லியிருக்கிறார் நிச்சயம் சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்'' என்றார்.

மோடி எப்படி குஜராத் என்ற ஒற்றை மாநிலத்தை முன்னுதாரணமாக வைத்து பிரதமரானாரோ அதே போல இதையெல்லாம் சொல்லி தர்மபுரியை மட்டும் வைத்து தமிழகத்தைப் பிடிக்க நினைக்கிறார்கள் போலும்!  

- எம்.புண்ணியமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு