Published:Updated:

பேப்பரில் ஓட்டை... சீக்ரெட் கேமரா... நடுங்கும் பெண்கள்!

'துள்ளும்' சேலம் ரவுடிகள்

பிரீமியம் ஸ்டோரி
பேப்பரில் ஓட்டை... சீக்ரெட் கேமரா... நடுங்கும் பெண்கள்!

கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி, பிரபாத் தியேட்டர், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை... இவை எல்லாம்தான் சேலம் மாநகரத்தில் பிரபல ரவுடிகள் நடமாட்டம் உள்ள ஏரியாக்கள், தினம் ஒரு கொலை, கொள்ளை என க்ரைம் ரேட் எகிறிக்கொண்டிருக்கும் இந்த ஏரியாக்கள் வரிசையில் மேலும் சில ஏரியாக்களும் புதியதாக சேரப்போகிறது. அந்த ஏரியாக்களில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் தங்களை 'டான்'களாக நினைத்துக்கொண்டு தங்களுக்கென ஒரு பாஸ்... அடியாட்கள்...என ரவுடி கோஷ்டியினராக பிரகடனப்படுத்திக்கொண்டு திரிகிறார்கள். தெருவில் எப்போதும், கத்தி கம்புகளுடன் வலம் வருகிறார்கள். சின்ன லெவலில் தற்போது நடமாடும் இவர்களை ஆரம்பத்திலேயே போலீஸார் தட்டிவைக்காவிட்டால், கூடிய விரைவில் பெரிய தாதா-க்களாக வலம் வருவார்கள்!

அண்மையில், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில்மேடு 7- வது கிராஸைச் சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் தரப்பட்டது.

பேப்பரில் ஓட்டை... சீக்ரெட் கேமரா... நடுங்கும் பெண்கள்!

அந்த பகுதியைச் சேர்ந்த ராமு, ''இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பேப்பரில் ஓட்டை... சீக்ரெட் கேமரா... நடுங்கும் பெண்கள்!

எல்லோரும் தினசரி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் நடுத்தர மக்கள். இதுவரை அமைதியாக வாழ்ந்து வந்தோம். கடந்த இரண்டு மாதங்களாக ரவுடிகும்பல் நடமாட்டத்தால் பீதியில் இருக்கிறோம்.  இவர்களைப் பார்க்க வெளியிலிருந்து வாட்டசாட்டமான ஆட்கள் வர்றாங்க. இந்த கும்பல் இரவு 8 மணிக்கு மேல தெருவுல பண்ற அலம்பல் தாங்க முடியலை. சரக்கடிச்சிட்டு தெருவுல போறவர்றவங்களையெல்லாம் வம்பிழுக்குறது, பெரிய ஆட்கள் யாராவது தட்டிக்கேட்டால் அவர்களை போட்டு அடிப்பது, அந்த சின்ன தெருவுக்குள்ள நான்கு பேர் உட்கார்ந்து கொண்டு பைக்கை வேகமாக ஓட்டுவது... என்று அட்டகாசம் செய்கிறார்கள். சிலநேரம்,  தெரு முனையில  இருக்குற கடையில அந்த கும்பல் திடீர் மௌனமாகி பேப்பர் படிச்சுக்கிட்டிருப்பாங்க. விஷயம் என்னான்னா... பேப்பர்ல சின்னதா ஓட்டை போட்டு அதுல செல்போன் கேமராவை வைத்து.. எதிர்ப்புறம் உள்ள பஜ்ஜி கடைக்கு வருகிற பெண்கள், ரோட்டில் நடக்கும் பெண்கள்... இவர்களையெல்லாம் தவறான கோணத்தில் படம் எடுப்பார்கள். ஒருகட்டத்தில், அந்த பஜ்ஜி கடைக்காரர் கடையையே காலிசெய்துவிட்டார். தெருவில் நடக்கும் பெண்களை எல்லாம் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்வது அந்த கும்பலின் வழக்கம். இந்த மாதிரியான அடாவடி தாங்க முடியாமல்தான் தெரு மக்களிடம் கையெழுத்து வாங்கி கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

அடுத்ததாகப் பேசிய  ரெங்கசாமி என்பவர் ''ஒருநாள் எங்க வீட்டுக்கு கீழே, போறவர்றவங்களை எல்லாம் வம்பிழுத்துக்கொண்டிருந்தார்கள். நான் மாடியில் நின்று கொண்டு, 'ஏம்ப்பா? இப்படி பண்றீங்க'ன்னு அமைதியாதான் கேட்டேன். அதுக்கு, 'யோவ்...பெருசு, போய் தின்னுட்டு தூங்கு. வெளியில வந்தா அவ்வளவுதான்'னு மிரட்டுனாங்க. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு பிரச்னை பெருசா ஆகுறமாதிரி தெரிஞ்சது. உடனே கீழே வந்தேன். திடீர்னு என்னை அடிக்க வந்துட்டானுங்க. இதை தட்டிக் கேட்கப்போன என் மகனை வயித்துலயே குத்திபுட்டானுங்க. இவனுங்களுக்கு பயந்துகிட்டே இருக்க வேண்டியிருக்கு. அதனாலயே 40 வருஷமா தெரு முனையில இருந்த கடையக்கூட இடிச்சுட்டோம். ஆனாலும், இவனுங்க தொல்லை தீரலை. போலீஸ்காரங்கதான் இதற்கு ஒரு முடிவை சொல்லணும்'' என்றார்.

அடுத்ததாகப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலருமான ரமணி, ''59-வது டிவிஷனைப் பொறுத்தவரைக்கும் இந்த மாதிரியான பசங்க தொல்லை ரொம்ப நாளாகவே இருக்கிறது. எல்லாரும் 20-லிருந்து 25 வயசுக் காரங்கதான். டாஸ்மாக் கடைகளை மூடின பிறகு, இங்க இருக்கும் சந்துகடைகள்ல சரக்கு விற்பனை தாராளமாக நடக்குது. முன்பெல்லாம் இரவு நேரங்கள்ல போலீஸ் ரவுண்ட்ஸ் வருவாங்க. ஆனா, இப்போதெல்லாம் வர்றதில்ல. அதனாலதான் இப்படி நடக்குது. இதைத் தடுக்காம விட்டால், நாளைக்கே கொலை, கொள்ளைனு போய் நிக்கும். இதனை உடனடியாக காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார்.

இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் பேசினோம். ''பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஏரியாக்களில் மஃப்டியில் போலீஸ் போட்டு கண்காணிக்கச் சொல்லியிருக்கிறோம். அந்த நான்கு பேர் மீதும் வழக்குகள் எதுவும் இல்லாததால் விசாரணை நடந்துவருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

புகார் கொடுத்தால் மட்டும்தான் நடவடிக்கை எடுப்பார்கள் போலிருக்கிறது.

- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு