Published:Updated:

நதியை இணைக்க நிதியைக் கொடுப்பது யார்?

அரசியல் இழுபறியில் நெல்லை - தூத்துக்குடி திட்டம்!

பிரீமியம் ஸ்டோரி
நதியை இணைக்க நிதியைக் கொடுப்பது யார்?

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், ''தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு மூலம் நாங்குனேரி, சாத்தான்குளம், திசையன்விளை பகுதிகளை வளப்படுத்தலாம் என்று ரூ.369 கோடியில் திட்டம் வகுத்து, 2009-ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

நதியை இணைக்க நிதியைக் கொடுப்பது யார்?

இதில் 148 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இரண்டுகட்டப் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் இரண்டு கட்டப்

நதியை இணைக்க நிதியைக் கொடுப்பது யார்?

பணிகள் தொடங்கப்படவே இல்லை. அ.தி.மு.க. அரசு 2012-13-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் துரித செயலாக்கத்தில் உள்ளது என்று கூறிவிட்டு பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதில் 24.80 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மீதிப் பணத்தை இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்காததால் திருப்பி அனுப்பிவிட்டோம் என்று நெல்லை மாவட்ட நீர்வள ஆதார அமைப்புத் துறையினர் எனக்குத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளனர். திட்டப் பணிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிவிட்டு அதை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளது வியப்பாக இருக்கிறது. 'மாநில அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் மூன்றாம், நான்காம் கட்டப்பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு கருத்து கூறியுள்ளதால் அந்தப் பணிகள் செயல்படுத்துவதில் தாமதமாகுகிறது. மத்திய அரசிடமிருந்து நிதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் திட்டம் முழுமைபெறும்’ என்கிறது தமிழக பொதுப்பணித் துறை.

ஆனால், தமிழக பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு 2013-2014-ம் ஆண்டில் உள்நாட்டு ஆறுகள் இணைப்பு என்ற பெயரில் தாமிரபரணி ஆறு, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம், கட்டளை கதவணையுடன் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றுக்காக 156.44 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2014-2015-ம் ஆண்டில் 119 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்குவதைப் போல பதிவு செய்துவிட்டு தி.மு.க ஆட்சியில் தொடங்கிய ஆறுகள் இணைப்பு திட்டத்தை முடக்குகிறது. திட்டமிட்டபடி முடித்திருந்தால் இப்போது 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கும்'' என்று கூறியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, 'திட்டத்தை தாமதம் செய்வது ஏன்? திட்ட இடையூறுக்கு காரணமாக இருப்பது என்ன?, எப்போது திட்டம் முடிவடையும்? திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் ஏற்படும் கூடுதல் நிதிச்சுமைக்கு யார் பொறுப்பு?’ என்று கேட்டு, மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள், ''மத்திய அரசின் விரைவுபடுத்தப்பட்ட பாசன திட்டத்தின் நிதி உதவியை எதிர்நோக்கி, மாநில நிதியின் கீழ் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு 369 கோடி ரூபாயில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் செயல்விளைவு மதிப்பீடு குறித்த ஆய்வை அண்ணா பல்கலைக்கழகம் செய்கிறது. ஆய்வு சமர்ப்பித்து, விரைவில் மத்திய நீர் குழுமத்தின் ஒப்புதல் பெறப்படும்' என்றனர்.

நதியை இணைக்க நிதியைக் கொடுப்பது யார்?

நாங்குனேரி எம்.எல்.ஏ நாராயணன், ''நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குனேரி, சாத்தான்குளம், ராதாபுரம் ஆகிய ஐந்து தாலுகாக்கள் இந்தக் கால்வாய் திட்டத்தால் செழிக்கும். 73 கிலோ மீட்டர் மொத்த தூரத்தில் 39 கிலோ மீட்டர் கால்வாய் தோண்டப்பட்டுவிட்டது. மத்திய அரசின் நிதியை எதிர்நோக்கி இருக்கும் இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கும் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. நிச்சயம் இந்தத் திட்டம் விரைவில் நிறைவேறும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.  

ராதாபுரம் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன், ''மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த திட்டத்துக்கு நிதியே தரவில்லை. அ.தி.மு.க அரசு அமைந்த பிறகும் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் நிதியைக் கேட்டபோது, மத்திய காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தி.மு.க., இரண்டரை வருடங்களாக நிதி உதவி பெற இடையூறாகத்தான் இருந்தது. அப்போதெல்லாம் எந்த முயற்சியும் செய்யாத தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு, இப்போது நீதிமன்றம் சென்றுள்ளது வியப்பாக இருக்கிறது. 'ஜனவரிக்குள் இந்தத் திட்டத்தின் 3 மற்றும் 4-ம் கட்ட பணிகள் தொடங்கப்படும்’ என்று அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்'' என்றார் நம்பிக்கையுடன்.

நதிநீர் இணைப்புக்கான இந்த முன்னோடி திட்டம் நிறைவேறினால் சரி!

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படம்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு