Published:Updated:

டாக்டர் இல்லாததால் உயிர் பலி...

திசை திருப்பப் பார்த்த டாக்டர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் இல்லாததால் உயிர் பலி...

அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் டாக்டர் இல்லாததால் ஒரு அப்பாவி உயிர் பறி போனதாக சர்ச்சை வெடித்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அரசு மருத்துவமனைதான் இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறது.

கடையநல்லூரை அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர், சங்கர் குமார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு எட்டு மாத கைக்குழந்தை உள்ளது. வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சத்யாவுக்கு கடந்த 7-ம் தேதி திடீர் மூச்சுத் திணறல். அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியிருக்கிறார்கள். அதன்படி சென்றிருக்கிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனையில் டாக்டர் யாரும் இல்லை. அதனால், சத்யா உயிரிழந்ததாக உறவினர்கள் கொந்தளிக்கிறார்கள்.

டாக்டர் இல்லாததால் உயிர் பலி...

மனைவியை இழந்த வருத்தத்தில் அவரது கணவர் சங்கர் குமார், ''என் மனைவிக்கு எந்த உடல்நலக் குறைவும் கிடையாது. சம்பவம் நடந்த அன்று நான் சாப்பாடு வாங்க கடைக்குப் போயிருந்தேன். அப்போது திடீரென அவளுக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனே பக்கத்து வீட்டு பெண்மணி ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றார். அந்த சமயத்தில் டாக்டர் இல்லை. அதற்குள் நானும் ஆஸ்பத்திரிக்குப் போனேன். அங்கே இருந்த நர்ஸ், யாருக்கோ போன் போட்டு விவரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனாலும் ஒருவரும் வரவில்லை. என் மனைவிக்கு மூச்சுத் திணறல் அதிகமாகிவிட்டது. நான் அந்த நர்ஸிடம், 'டாக்டரை உடனே வரச் சொல்லுங்கம்மா..’ என்று கெஞ்சினேன். ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வரவில்லை. அதுக்கப்புறம், நர்ஸ் வந்து செக்கப் பண்ணிவிட்டு, 'உயிர் பிரிஞ்சிடுச்சு’ என்று சொல்லிவிட்டார்கள்'' என்று கதறியவர், சற்று நேர இடைவெளிக்குப் பின்னர் தொடர்ந்து பேசினார்.

''தகவல் கேள்விப்பட்டு ஆஸ்பத்திரிக்குள் எங்கள் உறவினர்கள் நிறைய பேர் வந்து விட்டனர். உடனே டாக்டர்கள், தங்கள் தவறை மறைப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டு, 'அந்தப் பெண் சாவில் மர்மம் இருக்கு’ என்று பிரச்னையை திசை திருப்பி விட்டுவிட்டார்கள். அது தெரியாமல் போலீஸாரும் அங்கே வந்து, 'இந்தப் பெண் எப்படி இறந்தாள்? நாங்கள் பிணத்தைக் கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செஞ்சுதான் குடுப்போம்’ என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும், எங்கள் உறவினர்கள் கொந்தளித்தார்கள். 'பணி நேரத்தில் இங்கே இருக்க வேண்டிய டாக்டர் சொந்த ஆஸ்பத்திரிக்குப் போயிட்டதால எங்க பெண்ணை இழந்துட்டு தவிச்சு நிக்குற எங்க மேலய கேஸ் போடுவீங்களா?’னு கேட்டு சத்தம் போட்டாங்க.

டாக்டர் இல்லாததால் உயிர் பலி...

இந்த ஆஸ்பத்திரியில் அடிக்கடி இது மாதிரி சம்பவம் நடப்பதால் கொந்தளிப்பில் இருந்த இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவங்களும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எங்களுக்கு உதவியாக வந்தார்கள். அவங்க ஆஸ்பத்திரியை பூட்டியதோடு சாலை மறியலும் செய்த பிறகே எங்க மேல் பொய் கேஸ் போடாமல் விட்டுவிட்டார்கள். சாலை மறியல் செய்ததாகவும் அரசு ஊழியர்களை வேலை பார்க்க விடாமல் தடுத்ததாகவும் 30 பேர் மீது கேஸ் போட்டிருக்கிறார்கள். டாக்டரோட அலட்சியத்தால்தான் என் மனைவி இறந்தாள். எட்டு மாதக் கைக்குழந்தையை நான் எப்படி வளர்க்கப் போகிறேனோ..?'' என்று தலையில் அடித்துக் கதறினார்.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களும் ஊழியர்களும் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று சம்பவம் நடந்த மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த மருத்துவமனையில் இதற்கு முன்பும் பல்வேறு சமபவங்கள் நடந்து இருப்பதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ அமைப்பு கோரிக்கை விடுத்து இருக்கிறது.

இதுபற்றி நெல்லை மாவட்ட ஆட்சியரான கருணாகரனிடம் கேட்டதற்கு, ''கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தினேன். அந்தப் பெண் இறந்ததும் அது பற்றி எந்தப் புகாரையும் அவரது கணவர் கொடுக்கவில்லை. போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாம் என எழுதிக் கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் டாக்டர் இல்லாமல் இருந்தது உண்மையா என்பது பற்றி விசாரிக்கப்படும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் டாக்டர் உரிய நேரத்துக்கு வருகிறாரா? உரிய சிகிச்சை கொடுக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கும் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. அதில் தவறு நடந்தால் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்'' என்றார் காட்டமாக.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு