Published:Updated:

சமாதிகளை இடித்துத் தள்ளிய நகராட்சித் தலைவர்!

கொந்தளிக்கும் திருத்தணி

சமாதிகளை இடித்துத் தள்ளிய நகராட்சித் தலைவர்!

கொந்தளிக்கும் திருத்தணி

Published:Updated:
சமாதிகளை இடித்துத் தள்ளிய நகராட்சித் தலைவர்!

மனிதனுக்கு வாழும் போதுதான் பல்வேறு பிரச்னைகள் என்றால் இறந்த பிறகும் அவனை சமாதியில் நிம்மதியாக உறங்கவிடுவது இல்லை. திருத்தணி நகராட்சியில் 100 ஆண்டுகள் பழைமையான சமாதிகளை இடித்துத் தள்ளி, அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் நகராட்சித் தலைவர்.

சமாதிகளை இடித்துத் தள்ளிய நகராட்சித் தலைவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சீனிவாசனிடம் பேசினோம். ''திருத்தணி கலைஞர் நகர் பகுதி நந்தி ஆறு கரையோரத்தில் காலம் காலமாய் இறந்தவர்களைப் புதைத்தும், எரித்தும் வருகிறோம். இந்த இடத்துக்குச் செல்ல போதிய பாதை வசதியில்லை என்று கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்தனர். அதன்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நந்தி ஆற்றின் கரையோரத்தில் 50-க்கும் மேற்பட்ட சமாதிகள் உள்ளன. பாதை ஏற்படுத்துவதற்காக 25-க்கும் மேற்பட்ட சமாதிகளை நகராட்சி நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. இதில் என்னுடைய நண்பரின் தந்தை சமாதியும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் எங்களது மனதைப் புண்படுத்தி இருக்கிறது. பாதை அமைப்பது நல்ல விஷயம்தான். அதற்காக சமாதிகளை இடித்துத் தள்ளுவது எந்தவிதத்தில் நியாயம்? கலைஞர் நகர் பகுதி நந்தி ஆற்றின் கரையோரம் பாதைக்காக மணலைக் கொட்டி ஐந்து அடி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதன் எதிரில் உள்ள பட்டாபிராமபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காசிநாதபுரம் கிராமம் தாழ்வாக இருப்பதால், ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும். மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நகராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும்' என்றார்.

சமாதிகளை இடித்துத் தள்ளிய நகராட்சித் தலைவர்!

கலைஞர் நகர் பகுதி மக்கள் கூறுகையில், ''மயானத்துக்குச் செல்ல பாதை வசதி இல்லை என்று கூறி கலெக்டரிடம் மனு கொடுத்தோம். சமாதிகளை இடித்தது தவறு. யாரிடமும் எந்தக் கருத்தும் கேட்காமல் தன்னிச்சையாக சமாதிகள் இடிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் நினைவாக இருந்த சமாதிகள் இப்போது இல்லை. சமாதிகளை இடிக்காமலேயே பாதை அமைத்திருக்கலாம். சமாதிகளில் உறங்கிக் கொண்டியிருந்த ஆன்மாவைக் களங்கப்படுத்திவிட்டது திருத்தணி நகராட்சி' என்று கொந்தளித்தனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் நம்மிடம், 'மக்களுக்காக எந்தப் பணிகளும் நடக்கவில்லை. ஆதாயத்துக்காகவே இந்த நகராட்சியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மயானத்துக்குப் பாதை

சமாதிகளை இடித்துத் தள்ளிய நகராட்சித் தலைவர்!

அமைக்க திருத்தணி அக்கூர் ஏரியிலிருந்து குறிப்பிட்ட லோடு கிராவல் (மணல்) அள்ள ஆர்.டி.ஓ பாண்டியன் வாய்மொழியாக உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை மீறி அதிக அளவில் கிராவல் அள்ளப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதேபோன்று மயானத்துக்கு இடவசதி இல்லை என்று கூறும் நகராட்சியே, திருத்தணி - அரக்கோணம் சாலையில் மயான புறம்போக்கு இடத்தை காவல் நிலையம் கட்டுவதற்கு ஒதுக்க ஏற்பாடு செய்து வருகிறது'' என்றார்.

இதுகுறித்து திருத்தணி நகராட்சித் தலைவரும், நகர அ.தி.மு.க செயலாளருமான சவுந்திராஜனிடம் கேட்டோம். ''மக்களின் வசதிக்காக 10 லட்சம் ரூபாய் செலவில் மயானத்தைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிக்காக 100 ஆண்டுகள் பழைமையான சில சமாதிகள் இடிக்கப்பட்டுள்ளன. புதர் மண்டிக்கிடந்த மயானத்தைச் சீரமைத்துள்ளோம். 30 சென்ட்டில் அமைந்திருந்த மயான புறம்போக்கு இடத்தில் ஏற்கெனவே இடநெருக்கடி இருந்தது. இதனால் இனிமேல் அங்கு யாரும் சமாதிகளைக் கட்டக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்படி கட்ட விரும்புபவர்கள் நகராட்சியிடம் அனுமதி பெற்று, அதற்குக் கட்டணம் செலுத்திய பிறகே சமாதிகளைக் கட்ட வேண்டும். ஆற்றின் தண்ணீர் மயானப் பகுதிக்குள் வராமலிருக்க தடுப்புச் சுவரும் கட்டப்படவுள்ளது. திருத்தணி-அரக்கோணம் மயான புறம்போக்கு இடம் பயன்பாட்டில் இல்லாததால் காவல் நிலையத்துக்கு ஒதுக்க ஆலோசித்து வருகிறோம். சமாதிகள் இடிக்கப்பட்டதற்கு மக்கள் மத்தியில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. கிராவல் அள்ளியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. பணிகளுக்கு மட்டுமே கிராவல் ஏரியிலிருந்து எடுத்துள்ளோம்'' என்றார்.

ஆறடி நிலத்துக்கும் ஆபத்தா?

- எஸ்.மகேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism