Published:Updated:

''என்னைக் காப்பாத்துங்க!''

கதறும் வண்ணாரப்பேட்டை ரயில்வே கேட்

''என்னைக் காப்பாத்துங்க!''

கதறும் வண்ணாரப்பேட்டை ரயில்வே கேட்

Published:Updated:
''என்னைக் காப்பாத்துங்க!''

மதிப்புக்குரிய ஜூனியர் விகடனுக்கு...

பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகில் இருக்கிற '11-கி ரயில்வே கேட்’ பேசுகிறேன். ஆறறிவு படைத்தவர்களின் ஆதங்கங்கள் மட்டுமே இதுவரை உங்களுக்கு அஞ்சல் செய்யப்பட்டிருக்கும். உயிரற்ற என் குரலையும் கொஞ்சம் கேளுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வஞ்சிக்கப்பட்ட வட சென்னைவாசி நான். நூறு வயதைத் தொடப் போகிற நான், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்தவன். 'இரும்பு கேட்’டுக்குப் பின்னால் அப்படி என்ன இருந்துவிடப் போகிறது என்று எண்ணிவிடாதீர்கள். உயிர்களைக் காக்கும் உன்னத பணியை 'லெவல் கிராசிங்குகள்’ செய்கின்றன. ஆனால், எனக்கு மட்டும் ஏனோ 'உயிர் பறிக்கும் ரயில்வே கேட்’ என அவப்பெயர். பீச் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு லைன், கொருக்குப்பேட்டையிலிருந்து ஒரு லைன் என எதிரும் புதிருமாக இரண்டு ரயில்வே டிராக்குகளுக்குத் தடுப்பாக மின்ட் மேம்பாலத்தை ஒட்டி நிற்கும் ரயில்வே கேட் நான். என் பூகோளம் தெரிந்தால்தான் என் சரித்திரத்தை மாற்றமுடியும்.

''என்னைக் காப்பாத்துங்க!''

கண்ணன் தெருவில் இருந்து என்னைக் கடந்து சென்றால்தான் மின்ட் மாடர்ன் சிட்டி, சீனிவாசபுரம், போஜராஜன் நகர், பிஸ்மில்லா நகர், பென்சில் ஃபேக்டரி, கீரைத் தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் போகமுடியும். இங்கே மட்டும் 7 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் என்னைக் கடந்துதான் வெளியே வரமுடியும். காரணம், இந்த ஏரியாக்களுக்கு அந்தப் பக்கமும் தண்டவாளங்கள். இப்படித்  தண்டவாளங்கள் தீவுபோல சூழப்பட்ட ஏரியாவை வேறு எங்கும் பார்த்திருக்க முடியாது.

பீச் ஸ்டேஷனிலிருந்து வரும் இரண்டு லைன்கள் இந்தப் பக்கம் போவதைச் சொல்லிவிட்டேன். அந்தப் பக்கம் அதே பீச் ஸ்டேஷனிலிருந்து பேசின் பிரிட்ஜுக்கும் பெரம்பூருக்கும் தலா இரண்டு டிராக்குகள் போகின்றன. இதுதவிர, பேசின் பிரிட்ஜிலிருந்து கொருக்குப்பேட்டைக்கு வேறு இரண்டு டிராக்குகள் குறுக்கே போகின்றன. அதோடு பெரம்பூரிலிருந்து இன்னொரு டிராக்கும்  கொருக்குப்பேட்டைக்குச் செல்கிறது. இப்படி இடியாப்ப சிக்கல்போல சுற்றிலும் தண்டவாளங்கள் பின்னிப்பிணைந்து கிடக்க... உள்ளே சிக்கிக் கிடக்கின்றன ஏரியாக்கள்.

''என்னைக் காப்பாத்துங்க!''

எதிரும் புதிரும், வலதும் இடதுமாக ரயில்கள் போவதால், சிக்னல்கள் மாற்றிக் கொடுப்பதற்கு மணிக்கணக்கில் நேரம் ஆகிறது. மக்கள்  தினமும் அல்லாடுகிறார்கள்.

ஜாதகம், மணப் பொருத்தம் எல்லாம் முடிந்து இங்கே ஒரு பெண்ணை வரன் முடிக்க வந்தார்கள் மாப்பிள்ளை வீட்டார். வழியில் கேட் மணிக்கணக்கில் மூடப்பட்டுக் கிடக்க... காத்துக்கிடந்த வீட்டார் 'சென்டிமென்ட் தடை’ எனச் சொல்லி திரும்பிப் போனதால் திருமணமே நின்றுவிட்டது. பிரசவ வலியால் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லும் வழியில் கேட் பூட்டப்பட்டு கிடக்க... கேட் அருகே டெலிவரியும் நடந்திருக்கிறது. ஆம்புலன்ஸும் தீயணைப்பு வண்டியும் இங்கே நுழைய பட்டபாட்டை எப்படிச் சொல்ல? தாமதமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மரணித்தவர்கள் உயிரை யார் மீட்டுத் தருவார்கள்?

பல வருடங்களாகக் கதறிய பிறகு இரண்டு வருடத்துக்கு முன்புதான் சுரங்கப் பாதைக்கு அறிவிப்பு வந்து அமர்க்களமாக பேனர்களும் போஸ்டர்களும் ஒட்டினார்கள். அறிவிப்புக்கூட 'அடிக்கல் நாட்டல்’ ஆகவில்லை. முதல்வர் அம்மா என்னைக் காப்பாற்றுங்கள்.

என் கண்ணீரைத் துடைக்க...  ஜூ.வி கைக்குட்டையாக இருக்கட்டும்.

இப்படிக்கு,

11 கி ரயில்வே கேட்.

ரயில்வே கேட் சொல்லக்கேட்டு எழுதியவர், எம்.பரக்கத் அலி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism