Published:Updated:

''யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!''

புதுச்சேரி பட்ஜெட்... பாயும் எதிர்கட்சிகள்!

''யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!''

புதுச்சேரி பட்ஜெட்... பாயும் எதிர்கட்சிகள்!

Published:Updated:
''யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!''

''தேர்தல் வாக்குறுதிகளை இரண்டாண்டுகளில் நிறைவேற்றுவேன்'' என்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் சூளுரைத்தார் மாநில முதல்வர் ரங்கசாமி. இந்த நிலையில், கடந்த 11-ம் தேதியன்று புதுவை சட்டசபையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் உள்ள சாதக, பாதகங்கள் பற்றி புதுவையிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களிடம் கருத்து கேட்டோம்.

எஸ்.பி.சிவக்குமார், தி.மு.க (முன்னாள் கல்வித் துறை அமைச்சர் ):

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரங்கசாமி அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டின் அடையாளமாகத்தான் பட்ஜெட் பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் செயலற்றவர்களாக இருக்கிறார்கள். முக்கியத் துறைகளின் அமைச்சராக ரங்கசாமியே இருப்பதால் மொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்து நிதியை முழுமையாக செலவு செய்ய முடியாமல் திணறுகின்றனர். பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்களே இல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு முட்டைகள் கொடுப்பதை சாதனையாகப் பேசுகிறார் முதல்வர். 'அமைதி நகர’மாக இருந்த புதுவை தற்போது 'க்ரைம் சிட்டி’யாக மாறியுள்ளது. புதிய மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளின் தேவை இங்கு அதிகமாக உள்ளது. ஆனால், அதற்கானத் திட்டங்கள் பட்ஜெட்டில் கிடையாது. மாநில அந்தஸ்து குறித்தோ, நட்டத்தில் இயங்கும் அரசு பஞ்சாலைகள் பற்றியோ தகவலே இல்லை''.

''யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!''

பெருமாள், சி.பி.எம்  (மாநிலச் செயலாளர்):

''இதை 'வரியில்லா பட்ஜெட்’ என்று பெருமைபாடுவதே ஏமாற்று வேலை. பட்ஜெட் போடுவதற்கு முன்பாகவே மின்சாரக் கட்டணம் மற்றும் பால் விலையை ஏற்றிவிட்டு வரியில்லா பட்ஜெட் என்கிறார் ரங்கசாமி. ஏற்கெனவே காரைக்கால் போலகத்தில் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தார் சாலைகள் அமைத்து புதிய நிறுவனங்களுக்காகக் காத்திருந்தன. ஆனால், ஒரு தொழில் நிறுவனம்கூட அங்கு வரவில்லை. இந்த பட்ஜெட்டில் அதே போலகத்தில் 25 ஏக்கருக்கு ஊரக சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்கிறார் முதல்வர். இது யாரை ஏமாற்றும் செயல்? ஏற்கெனவே அரசால் வழங்கி வந்த 75 சதவிகிதம் தீவன மானியத்தை ரத்து செய்துவிட்டு புதிதாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 6 ரூபாயாக அதிகரிப்பதாகக் கூறி பால் உற்பத்தியாளர்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளார் முதல்வர் ரங்கசாமி''

லட்சுமி நாராயணன், காங்கிரஸ் (சட்டமன்ற உறுப்பினர்):

''சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒழுங்காகத் தராமல் அதில் 50 லட்ச ரூபாயை பாக்கி வைத்துள்ளார். இங்கிருந்த தனியார் தொழிற்சாலைகள் சட்ட - ஒழுங்கு பிரச்னையால் வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டன. மின்சாரத்தை அரசால் ஒழுங்காக விநியோகிக்க முடியவில்லை. தொலைநோக்குப் பார்வையோடு எந்தத் திட்டங்களும் இல்லை. இதனால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படப் போவது கிடையாது.''

''யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!''

ஓம்சக்தி சேகர், அ.தி.மு.க ( சட்டமன்ற உறுப்பினர்):

'' என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 40 மாதங்கள் ஓடிவிட்டன. இதில், 8 முறை மட்டுமே 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது. அரிசிக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது? லேப்டாப், கல்வி உதவித்தொகை, வாஷிங்மெஷின் இப்படி நிறைய திட்டங்கள் இன்னும் கிடப்பிலேதான் இருக்கின்றன. ரங்கசாமியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலத்தின் வளர்ச்சி பின்னோக்கி உள்ளது. உள்ளாட்சிகள் மூலம் மாநில அரசுக்கு வர வேண்டிய வரிகளை வசூல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை. அதன் காரணமாக, தனியார் பெட்ரோல் பங்க், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தொழிற்சாலைகள் எனப் பலரும் பல கோடி ரூபாய் வரிபாக்கி வைத்துள்ளார்கள். இதன் விளைவு... நகரை துப்புரவு செய்து சுத்தமாக வைத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் திணறுகின்றனர்.''

விஸ்வேஷ்வரன் பி.ஜே.பி (நியமன எம்.எல்.ஏ):

''யாருமே குறை சொல்ல முடியாத அளவுக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் ரங்கசாமி. அனைத்துத் தரப்பு மக்களையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை, பள்ளிக்கூடங்களில் தனி கழிவறைகள், விவசாயிகளுக்கு மானியம், மீனவர்களுக்கு மானிய விலை படகுகள் முக்கியமாக அரசு சலுகைகளைப் பெற ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தியது பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள். தொழிற்சாலைகளை ஊக்குவித்து நிறைய தொழிற்சாலைகள் புதுவைக்கு வர இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தோ அல்லது புதிய திட்டங்களையோ வகுத்திருக்கலாம்''

- நா.இள.அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism