Published:Updated:

ஆயிரக்கணக்கில் விபத்துகள்... நூற்றுக்கணக்கில் மரணங்கள்!

கூட்டேரிப்பட்டு திக்திக்

ஆயிரக்கணக்கில் விபத்துகள்... நூற்றுக்கணக்கில் மரணங்கள்!

கூட்டேரிப்பட்டு திக்திக்

Published:Updated:
ஆயிரக்கணக்கில் விபத்துகள்... நூற்றுக்கணக்கில் மரணங்கள்!

''கூட்டேரிப்பட்டு சந்திப்பில் 100 கிராமங்களின் மக்கள் பயன்பெறும் வகையில் மேம்பாலம் அமைத்துத் தரப்படும். உங்களின் கோரிக்கையை வென்றெடுக்க அ.தி.மு.க-வை ஆதரிப்பீர்'' - இது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதி அல்ல; 2009 எம்.பி. தேர்தலில் விழுப்புரத்துக்குப் பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதா உதிர்த்த முத்துக்கள்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மைலம்-திண்டிவனம் சாலை என நான்கு சாலைகள் ஒருங்கிணையும் ஜங்ஷன் பகுதி அமைந்துள்ளது. திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மைலம் சட்டமன்றத் தொகுதி தனியாக பிரிந்த பிறகு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி என கூட்டேரிப்பட்டு வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உருவேடுத்துள்ள அதே சமயத்தில், கூட்டேரிப்பட்டு ஜங்ஷன் சாலையில் மேம்பாலம் இல்லாததால்... தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் வரும் வாகனங்களுக்கு மத்தியில் தினம் தினம் உயிரை பணயம் வைத்துதான் சாலையைக் கடக்க வேண்டிய இக்கட்டில் கூட்டேரிப்பட்டு மக்கள் உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களில் வாகனங்கள் மோதி 210 பேர் இறந்துள்ளதாக காவல்துறை பதிவில் உள்ளது. பலர் கை, கால்களை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரக்கணக்கில் விபத்துகள்... நூற்றுக்கணக்கில் மரணங்கள்!

மேம்பாலம் வேண்டி கூட்டேரிப்பட்டு மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தியுள்ள நிலையில், போராட்டக் குழுவைச் சேர்ந்த ஏழுமலையிடம் பேசினோம்,

''மைலம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டுதான் சுற்றுவட்டாரத்தில் உள்ள 45 பஞ்சாயத்துகளுக்கும் தலைமை. வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் அலுவலகம்,  அரசு பள்ளிகள் எல்லாம்

ஆயிரக்கணக்கில் விபத்துகள்... நூற்றுக்கணக்கில் மரணங்கள்!

கூட்டேரிப்பட்டில்தான் உள்ளன. புகழ்பெற்ற மைலம் முருகர் கோயிலுக்கும், திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கும் கூட்டேரிப்பட்டு வழியாக த்தான் செல்ல வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டேரிப்பட்டில் நடக்கும் வாரச் சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். வாரச்சந்தையன்று முழுவதும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.  

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை முக்கியமான நெடுஞ்சாலை என்பதால் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து லட்சம் வாகனங்களாவது அதில் செல்கின்றன. வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டே இருப்பதால் கால்மணி நேரம் காத்திருந்தாலும் மக்களால் சாலையைக் கடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து மக்கள் சாலையைக் கடக்கும்போது அதிவேகத்தில் வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.

விவசாயத்தைத் தவிர வேறு எந்தப் பிரதான தொழிலும் இங்கு இல்லாத நிலையில், கை கால்களை இழந்தவர்கள் எப்படிக் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்? இவ்வளவு கோர விபத்துக்கள் நடந்த பிறகும் இங்கு ஒரு மேம்பாலம் அமைத்து எங்களின் உயிரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. யாராவது வி.ஐ.பி வந்தால் மட்டுமே போலீஸார் இங்கு வந்து பாதுகாப்பு அளிக்கிறார்களே தவிர மற்ற நாட்களில் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை.

மக்கள் எல்லாரும் சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்திய பிறகு எம்.பியாக இருந்த  கிருஷ்ணசாமி,  கண்துடைப்பாக இரண்டு கோடி ரூபாய் செலவில் இரும்பு நடைபாதை அமைக்க முன்வந்தார். இரும்பு நடைபாதையால் எந்தப் பயனும் இல்லை என்பதால், அந்தத் திட்டத்தைத் தடுத்துவிட்டோம். எங்களுக்குத் தேவை நிரந்தரத் தீர்வே தவிர தற்காலிகத் தீர்வு இல்லை. 2011 சட்டமன்றத் தேர்தலின்போதே கூட்டேரிப்பட்டில் மேம்பாலம் கட்டித் தருவதாக முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை மேம்பாலம் அமைப்பதற்காக ஒரு துரும்பும் அசைந்தபாடில்லை. விரைவில் மேம்பாலம் அமைத்துத் தரவில்லை என்றால், நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை'' என்றார் ஆவேசமாக.

இதுகுறித்து நெடுஞ்சாலை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது,'' தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குக் கடிதம் எழுதியிருந்தோம். ஆறுவழி சாலையாக மாற்றும்போது மேம்பாலம் கட்டுவதாகக் கூறியிருக்கிறார்கள். ஆறுவழி சாலையாக மாற்ற காலதாமதம் ஆகும். இந்தத் தொகுதி எம்.பி அழுத்தம் கொடுத்தால் உடனே மேம்பாலம் கட்ட வாய்ப்பிருக்கிறது.'' என்றார்கள்.

ஆரணி எம்.பி செஞ்சி. ஏழுமலையிடம் கேட்டபோது, ''மேம்பாலம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன்.  நடவடிக்கை எடுப்பதாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இருந்து பதில் வந்திருக்கிறது'' என்றார்

விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற முன் வருவார்களா?

- ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism