Published:Updated:

''என்னை மிரட்டுறியா... உன்னால முடிஞ்சதை செய்!''

திருச்சி தி.மு.க. திகுதிகு

''என்னை மிரட்டுறியா... உன்னால முடிஞ்சதை செய்!''

திருச்சி தி.மு.க. திகுதிகு

Published:Updated:
''என்னை மிரட்டுறியா... உன்னால முடிஞ்சதை செய்!''

''ஒற்றுமையாய் களப்பணி ஆற்றுங்கள், திருச்சி மாவட்ட தி.மு.க., முன்னுதாரணமாக விளங்கும் என நினைக்கிறேன்' - இது தி.மு.க பொருளாளர் முக.ஸ்டாலின் கடந்த 2-ம் தேதி திருச்சி தி.மு.க ஆய்வுக்கூட்டத்தில் பேசிவிட்டுப் போன வார்த்தைகள். ஆனாலும் திருச்சி தி.மு.க-வில் கோஷ்டிபூசல் குறைந்தபாடு இல்லை.

கடந்த 6-ம் தேதி... ''முன்னாள் அமைச்சரும் தி.மு.க திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு, உட்கட்சி தேர்தலை ஒருதலைபட்சமாக நடத்துகிறார்'' என கோஷமிட்டபடி மருங்காபுரி ஒன்றிய தி.மு.க துணைச் செயலாளர் கே.சி.பழனிச்சாமி தீக்குளிக்க முயல, அவரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் திருச்சி தி.மு.க-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னை மிரட்டுறியா... உன்னால முடிஞ்சதை செய்!''

பழனிச்சாமியிடம் பேசினோம்.

''1979-லிருந்து தி.மு.க-வில் இருக்கிறேன். தலைமை அறிவித்த பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளேன். குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக மட்டும் ஏழு முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன். ஆனால், என்னைப் புறக்கணிக்கிறார் நேரு. இப்போது மருங்காபுரி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்துள்ளனர். இரண்டுக்கும் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்குப் பதவி தர பார்க்கிறார். அதனால் மற்றவர்களுக்கு விண்ணப்பம் வழங்க மறுக்கிறார்கள். நேருவிடமே கேட்டேன். 'என்ன மிரட்டுறியா? உன்னால முடிஞ்சதை செய்' என்றார். அதனால் என் எதிர்ப்பைக் காட்ட வேறு வழியில்லாமல் தீக்குளிக்கப் போனேன். தடுத்து என்னை போலீஸ் கைது பண்ணி ஜெயில்ல அடைச்சாங்க. இப்போ ஜாமீனில் வந்துள்ள என்னை ஒன்றிய செயலாளராக்க முன்மொழிந்தவர்களை, நேரு கட்சியிலிருந்து நீக்கப்போவதாக மிரட்டுகிறார்' என்றார்.

இது ஒருபுறமிருக்க, திருச்சி தி.மு.க மாவட்டச் செயலாளர் நேருவுக்கு எதிரணியைச் சேர்ந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜின் வலதுகரமான கைக்குடி சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக  செல்வராஜ் ஆதரவாளர்களிடம் கேட்டோம்.

''என்னை மிரட்டுறியா... உன்னால முடிஞ்சதை செய்!''

'திருச்சியில் ஆய்வுக்கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளைப்  பேசவே விடல. நேரு எங்களை கட்சிக்கு விரோதியாகவே சித்திரிக்கிறார். வேறு வழியில்லாமல், கைக்குடி சாமி உள்ளிட்ட சிலர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்குப் போய் கட்சித் தேர்தலுக்கு விண்ணப்ப மனு கொடுத்துட்டு, தலைவர் கலைஞரை சந்தித்து நடந்ததைச் சொல்லி நியாயம் கேட்கலாம்னு காத்திருந்தோம்.  மணிக்கணக்காய் காக்க வைச்சிட்டு கடைசியில் அனுமதியில்லைன்னு சொல்லிட்டாங்க. இதில் கடுப்பான கைக்குடி சாமி, தலைமைக் கழக நிர்வாகியான ஜெயக்குமாரிடம் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக கைக்குடி சாமியை கட்சியிலிருந்து நீக்கியிருக்காங்க' என்றார்கள்.

எதிர் கோஷ்டியினரின் குற்றச்சாட்டுகள் குறித்து கே.என்.நேரு தரப்பினரிடம் பேசினோம்.

'உள்கட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் யாராக இருந்தாலும் கலைஞர் அறிவாலயத்தில் நேரில் மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். இல்லை எனில் சென்னை தலைமைக் கழகத்திலும் மனு செய்யலாம் என மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகும் வேண்டும் என்றே பிரச்னை செய்கிறார்கள். இவர்களைப் பின்னால் இருந்து இயக்குவது அ.தி.மு.க-வினர்தான்.

பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக விண்ணப்பம் வாங்கியிருக்கிறார். 'அவரையே போட்டியின்றி ஒன்றியச் செயலாளராக தன்னை அறிவிக்கணும்னு நேருவிடம் கேட்டார். அதை தலைமைதான் முடிவு செய்யும்’னு நேரு எவ்வளவோ சொல்லியும்கூட காதில் வாங்காமலேயே பழனிச்சாமி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இது முழுக்க முழுக்க உள்நோக்கமுடையது. அதேபோல் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த ஒன்றியச் செயலாளர் தனது குடும்ப நிகழ்வுக்கு அ.தி.மு.க கூட்டணியில் உள்ள முக்கியப்  பிரமுகரை அழைத்து விழா நடத்தினார். இதன் காரணமாகவே  தனக்கு மீண்டும் ஒன்றியச் செயலாளர் பதவி கிடைக்காது என நினைத்த அவர் முக்கிய நிர்வாகிகள் மூலம் அ.தி.மு.க-வுக்கு வலை வீசினாராம். இதற்கு திருச்சி மாவட்ட அ.தி.மு.க-வில் எதிர்ப்புக் கிளம்பவே, வழியில்லாமல், கட்சிக்குள்ளேயே குழப்பம் செய்கிறார். ஒன்றியச் செயலாளர் பதவியை தனக்கோ, தன் தம்பிக்கோ வழங்க வேண்டும் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார். கட்சிக்கு விரோதமாக நடந்த அதிருப்தியாளர்களைப் பயன்படுத்தி அ.தி.மு.க சில உள்ளடி வேலைகளைச் செய்கிறது. இதற்கான ஆதாரங்கள் நேருவிடம் கிடைத்துள்ளது. விரைவில் துரோகிகள் களையெடுக்கப்படுவார்கள்'' என்றார்கள்.

திருச்சியில் கொழுந்துவிட்டு எரிகிறது கோஷ்டிப்பூசல்!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism