Published:Updated:

வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்!

சாய ஆலைகளுக்கு எதிராக மீண்டும் போராட்டம்

வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்!

சாய ஆலைகளுக்கு எதிராக மீண்டும் போராட்டம்

Published:Updated:
வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்!

டாலர் சிட்டியான திருப்பூருக்கு, 2011-ம் ஆண்டு கறுப்பு ஆண்டு. சாயக்கழிவு நீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்றாததைக் கண்டித்து, 700-க்கும் அதிகமான சாய, சலவை ஆலைகளை மூட உத்தரவிட்டது அந்த ஆண்டில்தான்.

'சாயமேற்றும் அவசரத்தில் சில சாயப்பட்டறைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இதனால் விளைநிலங்களும், நாங்களும் பாதிக்கப்படுகிறோம்’ என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாக அப்போது சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டன. சாயக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கும் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றினால்தான் மீண்டும் சாய, சலவை ஆலைகள் இயங்க வாய்ப்பளிக்கப்படும் என்றது உயர் நீதிமன்றம். அதையடுத்து, சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டன. அந்தப் பாதிப்பில் இருந்து திரும்ப கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பிடித்தன. தற்போது ஓரளவு சாய, சலவை ஆலைகள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் சாய, சலவை ஆலைகள் விதிகளை மீறி, சுத்திகரிக்காமல் சாயக்கழிவுகளை வெளியேற்றுவதாகவும், திடக்கழிவுகளை அப்புறப்படுத்தாமல் கொட்டி வைத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர் பொதுமக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்!

கடந்த வாரத்தில் மட்டும் அடுத்தடுத்த போராட்டங்களைச் சந்தித்தது திருப்பூர் நகரம். திருப்பூர் வீரபாண்டி புதுத்தோட்டம் பகுதியில் சாயக்கழிவு நீரை திறந்தவெளியில் தேக்கி வைத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதேபோல் போயம்பாளையம் கங்கா நகரில் தனியார் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயன வாடைக் காற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வாழத் தகுதியில்லாத நகரமாகும் திருப்பூர்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி குமார் நம்மிடம் பேசினார். 'திருப்பூரில் பல இடங்களில் சாயக் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருவதற்கு பின்புறமே தினமும் சாயக் கழிவு நீர் சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இதெல்லாம் தெரிந்திருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவோ இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குழுக்கள், பறக்கும் படை எல்லாம் பெயரளவுக்குதான் இருக்கின்றன. முறையாக செயல்படவில்லை. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இதைப்பற்றி பேசக்கூட அனுமதி மறுக்கிறார்கள். ஆங்காங்கே நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. சில கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. தண்ணீரை பயன்படுத்துவதால் தோல்நோய்கள் ஏற்படுகின்றன. வாழத் தகுதியில்லாத அளவுக்கு நகரம் மாறிவிடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சாய ஆலைகளில் அதிகளவில் விறகுகள் எரிக்கப்படுவதால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதேபோல் கிணற்று நீரை குடிக்கும் ஆடு, மாடுகளின் கரு கலைந்து விடுகிறது. ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பு மனிதர்களுக்கு உருவாவதற்கான சூழல் வெகுதூரத்தில் இல்லை' என்றார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பிரச்னை குறித்து கேட்டோம். 'சாய ஆலைகள் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்றுகிறதா என்பதைத் தொடர்ந்து ஆய்வு நடத்தி கண்காணித்து வருகிறோம். ஓரிரு இடங்களில் விதிமீறல் நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்றபடி ஒட்டுமொத்தமாக மீண்டும் சாயக்கழிவு பிரச்னை அதிகரித்துவிட்டதாகச் சொல்ல முடியாது. விதி மீறிய நிறுவனங்கள் சீல் வைக்கப்படுகின்றன' என்றனர்.

ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்களுக்கு முதுகெலும்பாய் உள்ளது திருப்பூர் சாய ஆலைகள்தான். மீண்டும் சாய ஆலைகளுக்கு அடுத்த சிக்கல் வந்தால் திருப்பூர் தொழில் நிலைமை விபரீத நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். இதைத் தவிர்க்க விதிமீறல்களைத் தடுத்து, முறையாக தொழில் நடப்பதை அதிகாரிகள் உறுதிசெய்திட வேண்டும்.

- ச.ஜெ.ரவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism