Published:Updated:

பி.ஜே.பி-யில் வெட்டுக்குத்து!

மதுரை பரபர

பி.ஜே.பி-யில் வெட்டுக்குத்து!

மதுரை பரபர

Published:Updated:
பி.ஜே.பி-யில் வெட்டுக்குத்து!

கட்டுப்பாடான கட்சி என்று பெயர் எடுத்த பி.ஜே.பி-க்கு, கட்டுப்போடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பி-யினரின் கோஷ்டி மோதல், இப்போது அடிதடி, வெட்டுக்குத்து என்று வளர்ந்து, மதுரை மண்ணை ரத்தத்தில் நனைத்திருப்பதுதான் வேதனை.

 இது மட்டுமல்லாது, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியிடம் பி.ஜே.பி நிர்வாகிகள் விலை போகிறார்கள் என்கிற விஷயமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை மாநகர் முன்னாள் தலைவர் ராஜரத்தினத்தைத் தாக்குவதற்கு ஆள் அனுப்பியதாக பி.ஜே.பி-யின் மாநில துணைத்தலைவர் சுரேந்திரன் மீது போலீஸ் வழக்குப் போட்டுள்ளது.

பி.ஜே.பி-யில் வெட்டுக்குத்து!

உயிர் பயத்திலிருந்த ராஜரத்தினத்திடம் பேசினோம். ''ஆரம்ப காலத்திலிருந்து இந்து அமைப்புகளிலும் பி.ஜே.பி-யிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறேன். 1999-லிருந்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து வருகிறேன். கட்சியில் இடையில் வந்து ஒட்டிக்கொண்டவர் சுரேந்திரன்.  சுரேந்திரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அப்போதிருந்தே தலைமைப் பதவிகளை வழங்கியதால், கட்சியின் உண்மையான விசுவாசிகள் மிகவும் அதிருப்திக்கு உள்ளாகி, மாநில மத்திய தலைமைக்கு ஏகப்பட்ட புகார்களை அனுப்பினார்கள். இதற்காக  அடியாட்கள் மூலம் கட்சிப் பிரமுகர்களை மிரட்டிய சம்பவமும் தாக்கிய சம்பவமும் நடந்து பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப் பதிவாகியுள்ளன. இதைப்பற்றி எல்லாம் தலைமைக்குப் புகார் போகும். இதற்கெல்லாம் நான்தான் காரணம் என்று எப்போதும் என் மீது கோபமாக இருந்தார் சுரேந்திரன். பழங்காநத்தத்தில் ரவுடியிஸம் செய்து வந்த அவருடைய உறவினர் மணிவண்ணனுக்கு இளைஞரணி பொறுப்பு கொடுத்தார். இவர் பல தடவை என்னை மிரட்டியிருக்கிறார். இதுதொடர்பாக நான் அப்போதே பொன்.ராதாகிருஷ்ணனிடம் இவர்களின் மிரட்டல் பற்றி புகார் கொடுத்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருமுறை இல.கணேசன், கே.என்.லட்சுமணன் போன்றவர்கள் அடங்கிய மூவர் குழு விசாரணைக்கு வந்தது. அதிலும் புகார் செய்தேன். எனக்கு சுரேந்திரன் மூலம் கொலை அச்சுறுத்தல் உள்ளது என்று கடந்த வருடம் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கடிதமே எழுதினேன். எதற்கும் நடவடிக்கை இல்லை. இப்படியே போய்க் கொண்டிருந்தது. இப்போது மதுரை மாநகராட்சியில் இரண்டு வார்டுகளுக்கான தேர்தலில் பி.ஜே.பி வேட்பாளர்கள் மனு செய்தார்கள். இதில் வேட்பாளர் ஹரிகரசுதன் கையெழுத்துப் போடாமலேயே, அவரது மனு வாபஸ் பெறப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்த வாபஸ் பின்னணியில் சுரேந்திரன் அ.தி.மு.க-வுக்கு உதவியுள்ளார் என வெளியான தகவலை மாநில, மத்திய தலைமைக்கும் தொண்டர்கள் புகாராக அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் சுரேந்திரன் தரப்புக்குத் தெரிந்து, அதற்கும் நான்தான் காரணம் என்று நினைத்து, தன் உறவினரும் ரவுடியுமான மணிவண்ணன் தலைமையில் 20 அடியாட்களை கடந்த 11-ம் தேதி  அனுப்பினார். என்னை வெளியே வரச்சொல்லி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை உள்ளே வரவிடாமல் தடுத்ததால் நான் உயிர் பிழைத்தேன். அன்று என்னுடைய பிரஸ்ஸில் இருந்த பி.ஜே.பி தொழிற்சங்க கோட்ட பொறுப்பாளரான பாலமகேந்திரன் என்னைத் தாக்க வந்தவர்களைத் தடுத்தார். அவரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இப்படி ரவுடியிஸத்தையும் கூலிப்படையினரையும் வளர்த்துவிடுபவரை மாநில துணைத்தலைவராக வைத்திருக்கிறார்கள். மீண்டும் வந்து கொல்வதாக எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். பி.ஜே.பி நிர்வாகிகள் மீது பி.ஜே.பி-யினரே கொலை வெறி தாக்குதல் நடத்துவதை என்னவென்று சொல்வது? கட்சித்தலைமை இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்' என்றார்.

பி.ஜே.பி-யில் வெட்டுக்குத்து!

தற்போது பாலமகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். காவல் துறை மாநில பி.ஜே.பி துணைத்தலைவர் சுரேந்திரன், மணிவண்ணன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் சுரேந்திரனிடம் பேசினோம். ''இது முழுக்க முழுக்க பொய் புகார். நான் பார்த்து உருவாக்கிவிட்டவர்தான் ராஜரத்தினம். சம்பவம் நடந்த அன்னைக்கு நான் ஊரிலேயே இல்லை. அந்த மணிவண்ணன் என் உறவினர் இல்லை. ஒரே சாதி அவ்வளவுதான். ராஜரத்தினத்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால்தான் கட்சிப் பொறுப்பிலிருந்து எடுத்தார்கள். அப்படியும் அவர் ஒழுங்காக இல்லை; கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார். என் மீது ஏதாவது புகார் கிளப்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். கட்சித் தலைமைபற்றி மீடியாக்களிடம் விமர்சிக்கிறார். மாநகராட்சி 58-வது வார்டு இடைத்தேர்தலில் பி.ஜே.பி வேட்பாளர் மனு வாபஸ் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பது சம்பந்தமாக நாங்கள் ஆளும் கட்சிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம். வழக்கும் போடப் போகிறோம். அப்படியிருக்கும்போது நான் அ.தி.மு.க-வினரிடம் சோரம் போனது போல் அவதூறு கிளப்பி வருகிறார். நான் தலைமைக்கு அவரைப்பற்றி புகார் கொடுத்திருக்கிறேன். விரைவில் நடவடிக்கை இருக்கும். ஏற்கெனவே இப்படித்தான் மாவட்ட துணைச் செயலாளராக இருந்த பெண் ஒருவர் மூலம் என் மீது அவதூறு புகாரை கட்சியில் கொடுத்தார். கட்சி நியமித்த விசாரணைக் கமிட்டியில் அது பொய் என்று நிரூபணமானது. இவர் என்னையும், பி.ஜே.பி-யையும் தொடர்ந்து அசிங்கப்படுத்தி வருகிறார். அவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

மதுரையில் பி.ஜே.பி-க்குள் நடக்கும் வெட்டு குத்துக்களை அக்கட்சி கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது அக்கட்சிக்கு நல்லது அல்ல என்கின்றனர் பொது மக்கள்.

- செ.சல்மான்

படங்கள்: இ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism