Published:Updated:

மனநலக் காப்பகத்தில் மர்ம மரணங்கள்!

மதுரை பகீர்

மனநலக் காப்பகத்தில் மர்ம மரணங்கள்!

மதுரை பகீர்

Published:Updated:
மனநலக் காப்பகத்தில் மர்ம மரணங்கள்!

மதுரை கொடிமங்கலத்தில் செயல்படும் 'அக்ஷயா’ மனநல ஆதரவற்றோர் காப்பகத்தில் நடந்த மர்ம மரணங்கள் பற்றியும் சில நாட்களுக்கு முன்பு அங்கு தங்கியிருந்த இளம்பெண் நிர்வாணமாக வெளியே ஓடி வந்தது பற்றியும் கடந்த ஜூலை 20 தேதியிட்ட ஜூ.வி-யில் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்தக் காப்பகத்துக்கு எதிராக மாதர் சங்கத் தலைவி முத்துராணி போட்ட வழக்கின் அடிப்படையில் நீண்ட விவாதத்துக்குப் பிறகு, அந்தக் காப்பகத்தில் உள்ளவர்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட, அதன்படி பலர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மர்மமாக நடந்து வரும் அந்தக் காப்பகத்தின் செயல்பாடுகளை விசாரிக்கச் சொல்லி  போடப்பட்ட வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் உள்ளது.

இந்த நிலையில்தான், விளாங்குடியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில், ''அக்ஷயா காப்பகத்தில் தங்கியிருந்த 47 வயதான எத்தினம்மாள் என்ற பெண்மணி ஆகஸ்ட் 22-ம் தேதி இறந்தார். மதுரை ஜி.ஹெச்-சில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் தத்தனேரி சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. அந்தப் பெண்மணியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. அதனால், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்'' என்று  புகைப்பட ஆதாரங்களுடன் வழக்கறிஞர்கள் தனசேகரன், அழகுமணி மூலம் மனு செய்தார்.

மனநலக் காப்பகத்தில் மர்ம மரணங்கள்!

  இந்த மனுவை சீரியஸாக எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், எத்தினம்மாளின் உடலை உடனே மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. கடந்த 30-ம் தேதி தத்தனேரி சுடுகாட்டில் மதுரை வடக்கு தாசில்தார் ராமன், சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், ராஜாஜி மருத்துவமனையின் பிரேத

மனநலக் காப்பகத்தில் மர்ம மரணங்கள்!

பரிசோதனை தலைவர் டாக்டர் நடராஜன், வழக்கு தாக்கல் செய்த வழக்கறிஞர்கள் ஆகியோர்  முன்னிலையில் எத்தினம்மாளின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அது முழுவதும் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. இதன் அறிக்கையைக் கடந்த 2-ம் தேதி கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

சில வருடங்களுக்கு முன்பு, 'வாழும் காலத்தில் மனிதர்கள் இவரைப்போல இருக்க வேண்டும்’ என்று மீடியாக்களால் பாராட்டப்பட்ட கிருஷ்ணன் என்பவர் நடத்தி வரும் 'அக்ஷயா டிரஸ்ட்’டை பற்றி பலவிதமான சந்தேகப் புயல்கள் சமீபத்தில் அடித்து ஓய்ந்த நிலையில்,  இப்போது எத்தினம்மாளின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து, மீண்டும் அக்ஷயா காப்பகத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

  வழக்கு தாக்கல் செய்த குமரேசனின் வழக்கறிஞர்கள்  தனசேகரன் மற்றும் அழகுமணியிடம் கேட்டபோது, ''அக்ஷயா காப்பகம் பற்றித் தொடர்ச்சியான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே முத்துராணி என்பவர் போட்ட வழக்கின் அடிப்படையில் பல பேரை கட்டாயப்படுத்தி அங்கே வைத்திருக்கிறார்கள் என்றும், குணமடைந்தவர்களை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்காமல் வைத்திருக்கிறார்கள் என்றும் புகார்கள் கூறப்பட்டன. அதைத் தொடர்ந்து வக்கீல் கமிஷன் போட்டு ரிப்போர்ட் அளிக்கப்பட்டது. அதன் காரணமாக பலர் அவரவர் ஊர்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில்தான் எத்தினம்மாள் என்பவர் திடீரென்று இறந்து போனார். 'உண்மையில் இதுதான் இவர் பெயரா’ என்று தெரியவில்லை. இது காப்பகத்தினரே வைத்த பெயராம்.

போலீஸ் எஃப்.ஐ.ஆரில், 'மதுரையில் சாலையோரத்தில் மன நலமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தவரை மார்ச் மாதம் அக்ஷயா காப்பகத்தினர் அழைத்து வந்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்தப் பெண்ணின் சாவில் மர்மம் உள்ளது என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்தப் பெண் இறந்தபின் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவரது முகத்தில் காயங்கள் இருந்ததைப் பார்க்க முடிந்தது. அதோடுதான் வழக்கு தாக்கல் செய்தோம். அந்தக் காப்பகம்பற்றி இன்னும் புதிரான சில விஷயங்கள் உள்ளன. அதையும் கோர்ட்டில் தெரிவிப்போம். ரீபோஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு பின் இதிலுள்ள உண்மை தெரிய வரும்'' என்றனர்.

  அக்ஷயா டிரஸ்ட்காரர்களோ, '’இயற்கையாக நடந்த மரணத்தைச் சிலர் வதந்தியைப் பரப்பி பூதாகாரமாக்குகிறார்கள். நாங்கள் ஆதரவற்றோருக்குச் செய்ய வேண்டிய சேவைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்'' என்றனர்.

- செ.சல்மான்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism