Published:Updated:

தனக்குத்தானே சான்று..! அப்பழுக்கற்ற அரசு ஊழியரா சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்

அப்பழுக்கற்ற அரசு ஊழியர் எனச் சொல்லிக்கொள்ளும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மீது புகார் பட்டியல் வாசிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்து வரும் கோ.பிரகாஷ் இ.ஆ.ப என்பவர், ஒரு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் எனச் சான்றளிக்கப்படுகிறது.'

- 'சான்று' என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த சான்றிதழுக்குக் கையெழுத்துப் போட்டவர் அதே கோ.பிரகாஷ் இ.ஆ.ப-தான். 'அப்பழுக்கற்ற அரசு ஊழியர்' எனத் தனக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக்கொண்டார் பிரகாஷ். 2008 மே 30-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. இது எதற்காக?

அப்பழுக்கற்ற அரசு ஊழியர் சான்றிதழ்
அப்பழுக்கற்ற அரசு ஊழியர் சான்றிதழ்

2006 - 2011 கருணாநிதி ஆட்சியில் நடந்த முறைகேடுகளில் முதன்மையானது வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டில் நடந்த மோசடிகள்தான். அதன் ஃபிளாஷ்பேக்குக்குப் போவோம்.

வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகளும் நிலங்களும் முறைகேடாக ஒதுக்கப்பட்ட விவகாரத்தில், தோண்டத் தோண்ட அன்றைக்குப் பூதங்கள் கிளம்பின. நீதித்துறையினர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசியல் புள்ளிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அறிவாலயத்தில் வேலை பார்ப்பவர்கள் என்று சகல தரப்பினருக்கும் அரசாங்கத்தின் வீடுகளையும் நிலங்களையும் வாரி வழங்கியது தி.மு.க ஆட்சி.

தி.மு.க.
தி.மு.க.

'அனைவருக்கும் வீடு’ என்ற நோக்கத்தில் 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்.’ வீட்டு மனைகளையும் வீடுகளையும் உருவாக்கி வரும் வீட்டு வசதி வாரியத்தின் 85 சதவிகித வீடுகள், நிலங்கள் பொது மக்களுக்குக் குலுக்கல் முறையில் வழங்கப்படும். மீதி 15 சதவிகிதம் அரசின் விருப்பு உரிமைப்படி ஒதுக்கப்பட்டு வந்தன. அரசின் விருப்பு உரிமைத் திட்டத்தில் வாங்கும் வீடுகளுக்குக் குலுக்கல் கிடையாது. இதில்தான் வேண்டப்பட்டவர்களுக்கு வீடுகளை வாரி வழங்கினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியாக வசிக்கும் திருமணம் ஆகாத பெண், உடல் ஊனமுற்றவர், ராணுவத்தினர், முதியோர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் மொழிப்போர் தியாகிகள், விளையாட்டு வீரர்கள், சமூக சேவகர்கள், அப்பழுக்கற்ற சேவை புரிந்த மாநில அரசு ஊழியர்கள் என்று 15 பிரிவுகளின் கீழ் இப்படி வீடுகள் ஒதுக்கினார்கள். இதில் சமூக சேவகர், அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்கிற பிரிவுகளில்தான் வீடுகளையும் வீட்டு மனைகளையும் ஒதுக்கியதில் விதிமீறல்கள் நடந்தன.

கருணாநிதி
கருணாநிதி

'சமூக சேவகர்கள்' என்று சர்ட்டிஃபிகேட் வாங்கி, அதிகார வர்க்கத்தினர் பலரும் வீடுகள் வாங்கினார்கள். அதே போலத்தான் 'அப்பழுக்கற்ற அரசு ஊழியர்' எனச் சான்றிதழ் அளித்து வீட்டு, மனைகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரும் வாங்கினார்கள். இப்படி நடந்த முறைகேட்டில் பிரகாஷ் விஷயத்தில் நடந்தது கேலிக்கூத்தின் உச்சம்.

2006 மே முதல் 2009 பிப்ரவரி வரையில் திருநெல்வேலி கலெக்டராகப் பணியாற்றினார் பிரகாஷ். அப்போதுதான் வீட்டுவசதி வாரியத்தில் வீட்டு மனை வாங்குவதற்காக, தனக்குத் தானே 'அப்பழுக்கற்ற அரசு ஊழியர்' எனச் சான்றிதழ் கொடுத்து, அரசின் வீட்டு மனையை வாங்கினார். 'அப்பழுக்கற்ற அரசு ஊழியர்’ என்கிற பிரிவில் திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் 76.58 லட்சம் மதிப்புள்ள சுமார் 3,800 சதுர அடி வீட்டு மனை பிரகாஷுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு தி.மு.க ஆட்சியில் தொழில்துறை இணைச் செயலாளராகக் கொஞ்ச காலம் இருந்தார் பிரகாஷ்.

பிரகாஷ்
பிரகாஷ்

இவர் இப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காலத்தில் சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், ''முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் வாகனம் பறிமுதல்'' என்று அதிரடி கிளப்பியிருக்கிறார் பிரகாஷ்.

''முகக் கவசம் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல் என்று எந்தச் சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்? வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்பதற்கு அரசாணைகள் எதுவும் போடப்பட்டிருக்கிறதா? அப்படிப் போடப்பட்டிருந்தால் முகக் கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு அபராதம்தானே விதிக்க முடியும். சம்பந்தமே இல்லாமல் வாகனத்தை எப்படிப் பறிமுதல் செய்ய முடியும். கொரோனாவைப் பயன்படுத்தி ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். அமைச்சர் ஒன்று சொல்கிறார். முதல்வர் வேறொன்று சொல்கிறார். அதிகாரிகள் இரண்டையும் மறுத்து இன்னொன்றைச் செய்கிறார்கள். சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், 'அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியதில்லை' என்றார். பிரகாஷ், 'மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை' என்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் எந்தவொரு அறிவிப்பும் தலைமையின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் வரும். இப்படி வினோதமான அறிவிப்பை எல்லாம் வெளியிட மாட்டார்கள்'' என்கிறார்கள் தன்னார்வலர்கள்.

பிரகாஷ்
பிரகாஷ்

''முகக் கவசம் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனச் சொல்லும் பிரகாஷ், சென்னை மாநகருக்குத் தேவையான அளவுக்கு முகக் கவசம் இருப்பில் இருக்கிறதா? தட்டுப்பாடு இல்லாமல் மாஸ்க் கிடைக்கிறதா? உங்கள் நிர்வாகத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கே தேவையான அளவுக்கு மாஸ்க்குகள், கையுறைகள் வழங்கப்படவில்லை. முதலில் அதைச் சரி செய்யுங்கள்'' என்கிறார்கள் அவர்கள்.

முகக் கவசம் பிரச்னை தீர்வதற்குள் 'பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார்' என்கிற அடுத்த பிரச்னை முளைத்தது. ''சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடந்த சில தினங்களாகச் செய்தியாளர்களை மிரட்டும் வகையில், சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வமாக வரும் வாட்ஸ் அப் குழுவில் பதிவிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மாநகராட்சியில் நடக்கும் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். அவர் செய்தியாளர்களை மிரட்டும் போக்கைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அனைத்துச் செய்தியாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகும்'' எனச் சொல்லியிருக்கிறது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.

அறப்போர் இயக்கம் போஸ்டர்
அறப்போர் இயக்கம் போஸ்டர்

சென்னை மாநகராட்சியை நேர்மையான மாநகராட்சியாக மாற்ற, பல ஊழல்களைத் தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது அறப்போர் இயக்கம். எம்.சாண்ட் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தட்டுப்பாடு காரணமாக ஆற்று மணல் விலை ஒரு கன அடிக்கு 40 ரூபாயிலிருந்து 120 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது. அதனால், கான்கிரீட் சாலைகள், மழை நீர் வடிகால், நடைபாதை போன்ற மாநகராட்சி பணிகளுக்கு ஆற்று மணலுக்குப் பதிலாக எம் சாண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எம் சாண்டின் விலை ஆற்று மணல் விலையில் பாதிதான். ஆற்று மணலின் விலை ஒரு கன அடிக்கு 120 ரூபாய். எம் சாண்ட் விலை ஒரு கன அடிக்கு 50 ரூபாய்தான். ஆனால், ஒப்பந்ததாரர்களுக்கு ஆற்று மணலின் விலையை ஒப்பிட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டதன் மூலம் 1,000 கோடி ரூபாய் வரையில் சென்னை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டதை அம்பலப்படுத்தியது அறப்போர் இயக்கம்.

சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்கள் போட்டது ஆற்று மணலுக்கு. ஒப்பந்ததாரர் விலை கொடுத்ததும் ஆற்று மணலுக்கு. ஆனால், கட்டுமானங்களில் பயன்படுத்தப்பட்டதோ எம் சாண்ட். இதற்கு ஆதாரமாக ஹார்லிஸ் ரோட்டில் போட்ட நடைபாதையின் மாதிரியை அறப்போர் இயக்கம் சோதித்தபோது எம் சாண்ட் பயன்படுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

''இந்த ஊழல் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷுக்குத் தெரிவித்தும் இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' எனக் குற்றம் சாட்டுகிறது அறப்போர் இயக்கம். ''கார்ப்பரேஷனுக்கு கமிஷனராக இருக்க போறீங்களா.. இல்லை கரப்சனுக்கு கமிஷனராக இருக்கப்போறீங்களா.. என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க பிரகாஷ் சார்'' என வீடியோவும் போஸ்டரும் அறப்போர் இயக்கம் வெளியிட்டும் பிரகாஷிடம் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. விவகாரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாராக அளிக்கப்பட்டிருக்கிறது.

பிரகாஷ் இதில் நடவடிக்கை எடுக்கக்கூடிய இடத்தில் இல்லை; நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவராக இருக்கிறார் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு இவர்கள் கூறும் காரணமும் வலுசேர்க்கிறது.

சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் நியமிக்கப்படும் முன், இதே துறையில் மிகவும் முக்கியமான பொறுப்பான நகராட்சி நிர்வாகங்களின் ஆணையராக இருந்தார். சென்னை மாநகராட்சி ஆணையராகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த கார்த்திகேயனை அங்கே மாற்றிவிட்டு, அங்கிருந்து இவரை இங்கே கொண்டு வந்தார்கள். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவருக்கு, ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சி வரும் முக்கிய அமைச்சர்களின் ஆதரவு இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டது.

சென்னை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அரசு டாக்டர், நர்ஸ்! -இருதயவியல் துறை கட்டடத்துக்கு சீல்?

அதனால் எம்.சாண்ட் ஊழலில் மட்டுமன்றி, சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் நடக்கும் ஊழல் பற்றியும் இவருக்கு நன்கு தெரியும் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

சமூக ஆர்வலர்கள், தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைவிட எதிர்க்கட்சியினரும் இவருடைய நடவடிக்கைகளில் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஒருவேளை ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பிரகாஷ் இருப்பார் என்று பலரும் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர். அதனால் தன்னை அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று நிரூபிப்பதோடு, தனக்கும் அந்த ஊழல்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்படும்.

உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு