Published:Updated:

`பணத்தைச் சுருட்ட நினைத்தால்?!'- வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை பேனர் வைத்த ஆலவயல் இளைஞர்கள்

தேர்தலில் வெற்றி பெற்றவுடன், தேர்தலுக்குச் செலவு செய்த பணத்தை, ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் பணத்தின் மூலம் சரிக்கட்டி விடலாம் என்று நினைத்துக்கூட பார்க்காதீர்கள்.

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒருசில தினங்களே இருப்பதால், தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் ஆங்காங்கே இளைஞர்கள் மற்றும் பொதுமக்களே தாங்களாக முன்வந்து வேட்பாளர்களிடம், ``ஓட்டுக்குப் பணம் கொடுக்காதீர்கள்" என்று வலியுறுத்துவதைப் பார்க்க முடிகிறது.

``நம் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என்று கூறி வீடுகள் மற்றும் பொதுவிடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான், தற்போது புதுக்கோட்டை அருகே ஆலவயல் ஊராட்சி, அரையப்பட்டி ஊராட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் என்று இளைஞர்கள் அதிரடி பிளக்ஸ் பேனர்களை வைத்து வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

ஆலவயல் பகுதியில் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் வைத்துள்ள பேனரில், ``பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலவயல் ஊராட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அன்பான வேண்டுகோள்! ஊராட்சிப் பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் பணத்தில் எடுத்துவிடலாம் என்று யாரும் நினைத்துவர வேண்டாம்.

வருடந்தோறும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் இனிமேல் தொடர்ச்சியாக ஆலவயல் இளைஞர்கள் மற்றும் கிராமப் பொதுமக்களால் கணக்கு வரவு செலவு கேட்டு அறியப்படும்.

கேட்டு அறியப்பட்ட அனைத்துத் தகவல்களும் சரியானதா எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சரிபார்க்கப்படும். ஊழல் நடைபெற்றுக் கண்டறியப்பட்டால், ஊழல் செய்தவர் பெயர், வகிக்கும் பதவி போன்றவை சமூக வலைதளங்களில் (ஊடகம், முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியருக்கு) உடனடியாக இளைஞர்களால் பகிரப்படும்" இவ்வாறு வைத்துள்ளனர்.

பேனர்
பேனர்

இந்த போஸ்டர், பேனர்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதுபற்றி இளைஞர்களிடம் கேட்டபோது, ``சமீபத்தில் உள்ளாட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்துப் படித்துத் தெரிந்துகொண்டோம். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்பதற்காகவே அனைவரும் களம் இறங்கி இருக்கிறோம். அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களை உடனடியாகத் தோலுரிப்போம்" என்றனர்.