Published:Updated:

`உங்களுக்கு 2 பதவி, வைத்திக்கு 4 பதவி!' -உள்கட்சி மோதலால் பேராவூரணியை நழுவவிடும் அ.தி.மு.க.

அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராசு
அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராசு

பேராவூரணியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகளுக்குள் நிலவும் உள்கட்சி பூசலால் அதிக இடங்களை அ.தி.மு.க பிடித்தும் சேர்மன் பதவியை தி.மு.க கைப்பற்ற உள்ளதாக அ.தி.மு.க-வினர் கவலையில் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் அ.தி.மு.க 7 இடங்களையும் பி.ஜே.பி ஓர் இடமும் தி.மு.க 6 மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஓர் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான கோவிந்தராசு தனக்கு வேண்டியவருக்குச் சேர்மன் பதவியைக் கொடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டார். ஆனால், 13-வது வார்டில் வெற்றி பெற்ற ஒன்றியச் செயலாளரான துரை.மாணிக்கம் என்பவர் தனக்குத்தான் சேர்மன் பதவியைக் கொடுக்க வேண்டும் எனப் பேசி வருகிறார். இந்த மோதலைப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க, அ.தி.மு.க-விலிருந்து வெற்றி பெற்ற ஒருவரைத் தங்கள் பக்கம் இழுத்து சேர்மன் பதவியைப் பிடிக்கக் காய்களை நகர்த்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துரை.மாணிக்கம்
துரை.மாணிக்கம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், `` 15 இடங்களில், பி.ஜே.பி வெற்றி பெற்றதையும் சேர்த்து 8 கவுன்சிலர்கள் இருப்பதால் தானாகவே சேர்மன் பதவியை அ.தி.மு.க பிடிப்பதற்கான சூழல் உருவானது. இதில் எம்.எல்.ஏ கோவிந்தராசு தன் சமூகத்தைச் சேர்ந்தவரான முன்னாள் எம்.எல்.ஏ திருஞானசம்பந்தத்தின் அண்ணன் மருமகள் சசிகலாவை சேர்மன் ஆக்குவதற்கு முயற்சி செய்தார்.

இதை ஒன்றியச் செயலாளர் எதிர்த்ததுடன், `நான் கட்சிக்காக உழைத்ததுடன் சீனியரும்கூட. தவிர, எனக்குச் சேர்மன் பதவி தருவீர்களா எனக் கேட்டுவிட்டுத்தான் தேர்தலில் போட்டியிட்டேன். இப்போது வேறு ஒருவரை சேர்மன் ஆக்குவதாக சொல்கிறீர்கள். அப்புறம் எனக்கு என்ன மரியாதை இருக்கிறது?' என்று கோவிந்தராசுவிடம் கேட்டிருக்கிறார்.

இதற்கிடையில், தி.மு.க-வினர் அ.தி.மு.க-விலிருந்து வெற்றி பெற்ற மாலா போத்தியப்பனிடம், `நீங்க தி.மு.க பக்கம் வந்து விடுங்க.. உங்களுக்கு சேர்மன் பதவி தருகிறோம், நாங்க துணை சேர்மன் பதவியை வைத்துக்கொள்கிறோம்' எனக் கேட்டு காய்களை நகர்த்தியுள்ளனர். இதற்கு மாலா போத்தியப்பன் `சம்மதம் தெரிவித்ததுடன் இன்னும் சில கவுன்சிலர்களையும் அழைத்து வருகிறேன்' எனக் கூறியிருப்பதாக தெரிகிறது.

கவுன்சிலர் சசிகலா
கவுன்சிலர் சசிகலா

இந்த நிலையில் எம்.எல்.ஏ கோவிந்தராசு, துரை.மாணிக்கத்திடம், `நீங்க சேர்மன் பதவியை வச்சுக்கங்க, ஆனால் ஒன்றியச் செயலாளர் பதவியை ராஜினாமா செஞ்சுடுங்க. ஒரே நேரத்தில் இரண்டு பதவியை வகிக்க முடியாது' எனப் பேசியிருக்கிறார். அதற்கு துரை.மாணிக்கம், ` நீங்க மட்டும் எம்.எல்.ஏ-வாகவும் தொகுதி செயலாளராகவும் இருக்கீங்க. இதில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே, அத்துடன் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நான்கு பதவிகளில் இருக்கிறார். அவரையும் ராஜினாமா செய்யச் சொல்வீர்களா?' எனக் கேட்க எம்.எல்.ஏ-வால் பதில் சொல்ல முடியவில்லை.

துரை. மாணிக்கம் வைத்திலிங்கத்தைப் பற்றிப் பேசிய தகவல் அவரின் கவனத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் துரை.மாணிக்கத்திடம் வைத்தி தரப்பு சமாதானம் செய்யவில்லை. துரை.மாணிக்கமும் தனது செல்போனை சுவிட்ச்ஆஃப் செய்துவிட்டார். இதனால், தி.மு.க தரப்பில் இருந்து மாலா போத்தியப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். நாளை நடைபெற உள்ள மறைமுகத் தேர்தலில் தி.மு.க ஒன்றிய சேர்மன் பதவியைப் பிடிக்க உள்ளது.

கவுன்சிலர் மாலா போத்தியப்பன்
கவுன்சிலர் மாலா போத்தியப்பன்

தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்ற ஒரு சில ஒன்றியங்களில் பேராவூரணியும் ஒன்று. ஆனால், உள்கட்சி பூசலால் இங்கும் சேர்மன் பதவியைக் கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க செல்வாக்கு கொண்ட இந்தப் பகுதியில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது உண்மை விசுவாசிகளைக் கடும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது" என்கின்றனர் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு