Published:Updated:

அ.தி.மு.க வேட்பாளரைக் கடித்த பாம்பு! - தோகைமலை அதிர்ச்சி

ஒரு வீட்டின் முன்பு இருந்த வேலியில் கையை வைத்தபடி, தனலெட்சுமி நின்றிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாகஇடது கையில் விஷபாம்பு கடிக்க, அங்கேயே மயங்கி விழுந்தார்.

சிகிச்சையில் தனலெட்சுமி
சிகிச்சையில் தனலெட்சுமி

தோகை மலைப் பகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கேற்ற பிரசாரத்திற்குக் கட்சித் தொண்டர்களை அழைக்கச் சென்ற, நாகனூர் 11 வது வார்டு அ.தி.மு.க வேட்பாளரைப் பாம்பு கடித்துள்ளது. அவர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், நாகனூர் ஊராட்சி செயலாளராக இருப்பவர், சங்கர். இவரது மனைவி தனலெட்சுமி (வயது 33). தனலட்சுமி நாகனூர் 11 வது வார்டு, அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இந்த வார்டுக்கு நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், நேற்று மதியம் தோகை மலைப் பகுதி கழுகூரில், தனலட்சுமிக்காகவும், மற்ற அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும் ஆதரவாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிக்க வந்தார்.

சிகிச்சையில் தனலெட்சுமி
சிகிச்சையில் தனலெட்சுமி

அப்போது தனலெட்சுமி நாகனூர் பகுதி கலிங்கப்பட்டி, தெற்குகளம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களை அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கச் சென்றிருந்தார். ஒரு வீட்டின் முன்பு இருந்த வேலியில் கையை வைத்தபடி, தனலட்சுமி நின்றிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக தனலெட்சுமியின் இடது கையில் சுருட்டை விரியன் வகை விஷபாம்பு கடிக்க, அங்கேயே மயங்கி விழுந்தார். அதைப்பார்த்துப் பதறிய அருகிலிருந்தவர்கள் மற்றும் அ.தி.மு.க ஊராட்சி செயலாளரான கணவர் சங்கர் ஆகியோர், தனலெட்சுமியை இருசக்கர வாகனத்தில் வைத்து, மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கே சிகிச்சை அளித்து, பின்பு மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Vikatan

இதுகுறித்து, அ.தி.மு.க வேட்பாளர் தனலட்சுமியின் கணவர் சங்கர் கூறுகையில், ``எனது மனைவியும், வேட்பாளருமான தனலெட்சுமி, திருச்சி அரசு பொது மருத்துவமனையில், பாம்பு கடித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பாம்பு கடித்த இடத்தில், ரத்தக் கசிவும், வாந்தியும் தொடர்ந்து வந்துகொண்டுள்ளது. என் மனைவியைக் கடித்த பாம்பைக் கொன்று எடுத்து வந்து, மருத்துவமனையில் காண்பித்துள்ளோம். அதற்குத் தகுந்த மாதிரி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்" என்றார்.

சிகிச்சையில் தனலெட்சுமி
சிகிச்சையில் தனலெட்சுமி

நாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் தனலெட்சுமிக்குப் பாம்பு கடித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர், தோகை மலை பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.