Published:Updated:

`கிராமத்தினர் வாக்குகளை ஏலம் எடுத்தாரா அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ-வின் கணவர்?' - திருச்சி சர்ச்சை

பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ
பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும், அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் கணவர், ஒரு கிராமத்தின் மொத்த வாக்குகளையும் ஏலம் எடுத்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ளது வலையூர் கிராமம். கடந்த வாரம் இரவு நேரத்தில் அப்பகுதியிலுள்ள பஜனை மடம் அருகே கூடிய கிராம முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட மொத்தப் பதவிகளும் ஏலம் விடப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ
பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ

அதில், தலைவர் பதவியை ரெங்கராஜ் என்பவர் 10 லட்ச ரூபாய்க்கும் துணைத்தலைவர் பதவியை ஆனந்த் என்பவர் ரூ.92,000-த்துக்கு ஏலம் எடுத்தனர். இறுதியாக, மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள வலையூர், கரியமாணிக்கம், பாலையூர் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன், தேர்தலில் அப்பகுதி மக்கள் தனக்கே வாக்களிக்க, அவரது ஆதரவாளர் கருப்பன் என்பவர் மூலம் 14 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இந்த விவகாரம் பூதாகரமானதால், அப்பகுதி மக்கள் கொதித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்தனர். புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். இதனால், அதிருப்தியடைந்த அந்த ஊரைச் சேர்ந்த 4வது வார்டு இளைஞர்கள், `பணநாயகமா, ஜனநாயகமா, தேர்தல் முறையாக நடைபெறுமா, பணம் வாங்கும் கலாசாரம் ஒழியுமா என்றும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?' என்றும், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாகவும் விளம்பர பேனர் வைத்தனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த பேனர் அகற்றப்பட்டது.

பரமேஸ்வரி மற்றும் முருகன்
பரமேஸ்வரி மற்றும் முருகன்

தொடர்ந்து, அப்பகுதி மக்களின் எதிர்ப்புகள் காரணமாக தேர்தல் அலுவலரும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருமான ராஜேந்திரன் என்பவர் சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுகனூர் காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன், ரங்கராஜ், ஆனந்த் உள்ளிட்ட மூவர் மீதும் தேர்தலில் லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தி.மு.க வேட்பாளர் ஶ்ரீதர், ``எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன், வலையூர் பகுதியில் உள்ள மொத்த வாக்குகளையும் ஏலத்தில் எடுத்ததால், நாங்கள் ஊருக்குள் ஓட்டு கேட்கக் கூட போக முடியவில்லை. அந்தளவுக்கு இடையூறு செய்கிறார்கள். மேலும், வேட்புமனுத் தாக்கல் செய்ய அந்த ஊரில் இருந்து ஆட்கள் வரத் தயாராக இருந்தார்கள். அவர்களையும் தடுத்துவிட்டார்கள். எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனின் செயல்பாடுகள் குறித்து நாங்களும் புகார் கொடுக்க உள்ளோம்” என்றார்.

இதுதொடர்பாக அப்பகுதியினரிடம் விசாரித்தோம். ``கடந்த சிலமாதங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனின் செயல்பாடுகளைக் கண்டித்து அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ-வின் வீட்டை முற்றுகையிட்டனர். மேலும், அவரின் சொந்த ஊரில் இருக்கும் ஏரியில் சட்டவிரோதமாக மண் அடித்து கையும் களவுமாக சிக்கிக்கொண்ட சம்பவமும் நடந்தது. இப்படியான சம்பவங்களால், இவர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஶ்ரீதர்
ஶ்ரீதர்

அனைத்தையும் சரி செய்து, தனக்குச் சாதகமான சூழலை உருவாக்க நினைத்த, முருகன், உள்ளாட்சித் தேர்தலில் வலையூர் கிராம மக்களின் வாக்குகளுக்கு மொத்தமாகப் பணம் கொடுத்துள்ளார். இன்னும் சில மாதங்களில், எம்.எல்.ஏ பதவி முடிய உள்ளதால், கணவரை சேர்மன் ஆக்கிவிட எம்.எல்.ஏ பரமேஸ்வரி துடிக்கிறார்” என்கிறார்கள்.

குற்றச்சாட்டுகள் குறித்து எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனிடமே கேட்டோம். ``இந்தக் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை. தேர்தலுக்காகப் புரளியை கிளப்பிவிடுகிறார்கள். ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், நான் மட்டும் வேட்பாளர் இல்லை. 5 பேர் போட்டியிடுகிறோம். தேர்தலில் எதிர்த்து போட்டியிட விரும்பாதவர்கள், புரளியை கிளப்பிவிடுகிறார்கள்” என்றதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு