Published:Updated:

`விலைபோகும் ஒன்றியக் கவுன்சிலர்கள்!' - பெரும்பான்மை கிடைத்தும் தேனி தி.மு.க திணறல்

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிய நிலையிலும், ஒன்றியத் தலைவர் பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தி.மு.க.

தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர்கள், அடுத்தடுத்து அ.தி.மு.க பக்கம் சாய்ந்துவருவதால், பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிய நிலையிலும் ஒன்றியத்தலைவர் பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தி.மு.க.

`ரூ.10 லட்சம் பேரம்... அ.ம.மு.க ஆதரவு யாருக்கு?' - தேனி ஒன்றியங்களைக் கைப்பற்றுமா அ.தி.மு.க?
தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் செல்வம்.
தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் செல்வம்.

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் 10 மாவட்ட கவுன்சிலர்கள். இதில், 8 இடங்களை அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 2 இடங்கள் தி.மு.க வசம் உள்ளன. இதேபோல, 8 ஒன்றியங்களில் உள்ள 98 ஒன்றியக்கவுன்சிலர்களில், 49 இடங்களை அ.தி.மு.க கூட்டணியும், 42 இடங்களை தி.மு.க கூட்டணியும், 5 இடங்களை அ.ம.மு.க-வும், 2 இடங்களை சுயேச்சையும் கைப்பற்றியுள்ளன. கம்பம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய ஒன்றியங்களில் அ.தி.மு.க பெரும்பான்மையுடனும், தேனி, சின்னமனூர், பெரியகுளம் ஆகிய ஒன்றியங்களில் தி.மு.க பெரும்பான்மையுடனும் உள்ளனர். கடமலை-மயிலையில் சம பலத்துடன் உள்ளனர். இந்நிலையில், தி.மு.க பெரும்பான்மை பலத்துடன் உள்ள தேனி, சின்னமனூர் மற்றும் பெரியகுளம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள தி.மு.க கவுன்சிலர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் அ.தி.மு.க தீவிரம்காட்டி வெற்றியும் பெற்றுள்ளது, தி.மு.க-வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றியக் கவுன்சிலர்களில், அ.தி.மு.க கூட்டணி 7 ஒன்றியக் கவுன்சிலர்களையும், தி.மு.க 8 ஒன்றியக் கவுன்சிலர்களையும், அ.ம.மு.க 1 ஒன்றியக் கவுன்சிலரையும் பெற்றுள்ளன. அ.ம.மு.க-வின் ஆதரவு அ.தி.மு.க-விற்குச் சென்றாலும்கூட, சம பலம் என்ற நிலை.

தி.மு.க நிர்வாகிகளுடன் செல்ல மறுக்கும் ஜெயந்தி.
தி.மு.க நிர்வாகிகளுடன் செல்ல மறுக்கும் ஜெயந்தி.

ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜெயமங்கலம் 8-வது வார்டு தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் செல்வம், நேற்று சென்னையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். உடன், அ.தி.மு.க நிர்வாகிகள் இருந்தனர். இதனால், தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைந்துள்ளது. இந்நிலையில், பெரியகுளத்தை இழந்தது தி.மு.க.

நேற்று முன்தினம், ஒன்றியக் கவுன்சிலர்கள் பதவியேற்பு முடிந்து அனைவரும் வெளியே வந்தபோது, சின்னமனூர் ஒன்றியம், பொட்டிபுரம் 1-வது வார்டு தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் ஜெயந்தி, தி.மு.க நிர்வாகிகளுடம் செல்ல மறுத்து காவல்துறை துணையுடன் தனது வீட்டுக்குச் சென்றார். வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று அவர், அ.தி.மு.க பக்கம் சாய உள்ளார் என்ற தகவல் பரவ, அவரது வீட்டுக்குச் சென்ற தி.மு.க நிர்வாகிகள், அங்கு அவர் இல்லை எனத் தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். அவரை அ.தி.மு.க-வினர் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறி, திம்மரசநாயக்கனூர் விலக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தி.மு.க-வினரை சமாதானம் செய்தனர். ஒன்றியக் கவுன்சிலர் ஜெயந்தியைக் காணவில்லை எனவும், அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் எனவும் கூறி, போடி காவல்துறை துணை கண்காணிப்பாளர், சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர்.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள 10 ஒன்றியக் கவுன்சிலர்களில், தி.மு.க 6 இடங்களிலும், அ.தி.மு.க 4 இடங்களிலும் வெற்றிபெற்றன. இந்நிலையில், பொட்டிபுரம் தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் ஜெயந்தி அ.தி.மு.க பக்கம் சாய்ந்தால், இரு கட்சிகளும் சம பலத்துடன் இருக்கும். வரும் 11-ம் தேதி நடைபெறும் பதவியேற்பில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தப் பிரச்னையை வைத்து பதவியேற்பைத் தள்ளிவைத்து, தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர்களில் ஒருவரைத் தங்கள் பக்கம் சாய்க்க அ.தி.மு.க திட்டமிட வாய்ப்புள்ளது. இதனால், சின்னமனூர் ஒன்றியத்தை தி.மு.க கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றே கூறலாம்.

`அது ஸ்டாலினுக்கே தெரியாது!'- தேனி பிரச்சாரத்தில் ஆவேசமான ரவீந்திரநாத் குமார்

தி.மு.க பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிய ஒன்றியங்களில் ஒன்றான தேனி ஒன்றியத்தில், தி.மு.க கூட்டணி கட்சி கவுன்சிலரைத் தங்கள் பக்கம் சாய்த்து காய்நகர்த்த அ.தி.மு.க திட்டமிட்டுள்ளது. சின்னமனூர் போலவே தேனியிலும், பதவியேற்பின்போது பிரச்னை செய்து, பதவியேற்பைத் தள்ளிவைத்து, தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர்களைத் தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க திட்டம் போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவர், ``பணத்தால் தி.மு.க நிர்வாகிகளை அ.தி.மு.க விலைக்கு வாங்குவது தேனியில் புதிது இல்லை. பணம் செலவுசெய்து வெற்றிபெற்ற ஒன்றியக் கவுன்சிலர்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட தலைமைக்குத் தெரிந்தால், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. அ.தி.மு.க-வின் நடவடிக்கைகளை அறிந்த தங்க தமிழ்ச்செல்வனைப் பயன்படுத்தியிருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது. இதேநிலை நீடித்தால், தேனியில் தி.மு.க ஆதிக்கம் செலுத்தவே முடியாது. மாவட்ட தலைமையில், வரும் 20-ம் தேதிக்குப் பிறகு மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம், பார்க்கலாம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு