Published:Updated:

துணை முதல்வர் தொகுதியில், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கும் மலை கிராமங்கள்..!- என்ன காரணம்?

கடந்த 2016 -ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா கண்ணக்கரை முதல் மருதையனூர் வரையிலான 2.5 கிலோமீட்டர் தூரத்திற்குத் தார் சாலை அமைக்க ஆறு கோடியே அறுபத்தியொரு லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.

கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் மக்கள்
கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் மக்கள்

அடிப்படை வசதியின்மை மற்றும் மோசமான சாலையால், வரும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் அகமலை மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள்.

அகமலைச் சாலை
அகமலைச் சாலை

பெரியகுளம் அருகே உள்ளது அகமலை ஊராட்சி. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில், கண்ணக்கரை, மருதையனூர், சொக்கர்மலை, பட்டூர், படப்பம்பூர், அலங்காரம் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2016 -ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா கண்ணக்கரை முதல் மருதையனூர் வரையிலான 2.5 கிலோமீட்டர் தூரத்திற்குத் தார் சாலை அமைக்க ஆறு கோடியே அறுபத்தியொரு லட்சம் ரூபாய் ஒதுக்கினார். தொடர்ந்து சாலை அமைக்க தேவையான ஆய்வுப் பணிகள் அனைத்தும் முடிந்து கடந்த 3 ஆண்டுகளாகப் பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அகமலைப் பகுதியில் தொடர்ச்சியாக மலை பெய்துவருவதாலும், கண்ணக்கரை ஆற்றில் தண்ணீர் அதிகம் வருவதாலும், கயிறு கட்டி ஆற்றைக் கடக்க வேண்டிய சூழலில் மக்கள் உள்ளனர். இது தொடர்பாக சொக்கர்மலை ராஜபாண்டி என்பவர் பேசும் போது, ``சாலை இல்லாததால் மலைகிராம மக்கள் பெரிதும் சிரமத்தை தினம் தினம் சந்தித்து வருகிறார்கள்.

உடல் நிலை சரியில்லாதவரை டோலி கட்டி தூக்கிச் செல்லும் மக்கள்
உடல் நிலை சரியில்லாதவரை டோலி கட்டி தூக்கிச் செல்லும் மக்கள்

யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் கூட, டோலி கட்டி கூட்டிவரக் கூடிய நிலைதான் இருக்கு. மேலும், இப்பகுதிகளில் விளையும் வாழை, காப்பி, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் காய்கறிகளை பெரியகுளம் சந்தைக்குக் கொண்டு போக பல நூறு செலவு செய்ய வேண்டியதா இருக்கிறது. சாலை இருந்தால் எளிமையா இருக்கும். சாலை அமைக்க, மலைகிராம மக்களிடமிருந்து 12 ஏக்கர் நிலமும் வாங்கி, டெண்டர் விட்டும் இதுவரை சாலை அமைக்கவில்லை.

Vikatan

கண்ணக்கரை ஆற்றில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக வெள்ளம் போகுது. இப்போ இரண்டு நாளாதான் தண்ணீர் குறைந்திருக்கு. அதனால கயிறு கட்டி ஆற்றைக் கடக்கிறோம். அதிலும், பாறைகள் வழுக்குவதால் மனிதர்களோடு கழுதைகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன. வருடா வருடம் மழை வரும். நாங்க ரொம்ப கஷ்டப்படுவோம். அதிகாரிகள் வருவார்கள். பார்ப்பார்கள். ’சீக்கிரம் சாலை அமைத்துத் தருவோம்’னு ஒரு வரி சொல்லிட்டுப் போயிட்டே இருப்பாங்க.! இதுதான் நடந்துட்டு இருக்கு. எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலை, அகமலையைச் சேர்ந்த மலை கிராம மக்கள் புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்திருக்கிறோம்” என்றார்.

அகமலைச் சாலை
அகமலைச் சாலை

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, “விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஒற்றைவரியில் முடித்துக்கொண்டனர்.