Published:Updated:

"ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ, முதல்ல சண்டை செய்யணும்…"- அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு தினகரன் கொடுத்த டானிக்!

தினகரன்
தினகரன்

ஆளுங்கட்சி, தேர்தல் ஆணையம் என பலமுனை நெருக்கடிகளுக்கு நடுவிலும் தன்னை நிரூபித்துள்ளது அ.ம.மு.க.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க இவ்விரு கட்சிகளின் கூட்டணிகளும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலில் 95 சதவிகித இடங்களையும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கான தேர்தலில் 85 சதவிகித இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இவ்விரு கூட்டணிகளுக்கிடையே பொதுச்சின்னம், கூட்டணி என ஏதுவும் இல்லாமல் துணிச்சலுடன் களமிறங்கிய அ.ம.மு.க., 94 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் இரண்டு ஒன்றிய சேர்மன் பொறுப்புகளையும் தட்டிச் சென்றுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே அ.ம.மு.க-வுக்கு நெருக்கடிகள் தொடங்கிவிட்டன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தனர். சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர்களை தாலுகா அலுவலகத்தில் உள்ளவர்கள் நடையாய் நடக்கவைப்பது போல நடக்கவைத்து, ஆறு மாதம் இழுத்தடித்து, கடைசியாக நவ.25-ம் தேதி அ.ம.மு.க-வை அரசியல் கட்சியாகப் பதிவு செய்துகொண்டது தேர்தல் ஆணையம். இதற்கிடையே, பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத் தனியாக பொதுச்சின்னம் வழங்க வேண்டியதில்லை என்கிற சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. இதனால், அங்கீகாரம் பெறாத பதிவு செய்யப்பட்ட கட்சியான அ.ம.மு.க-வுக்கு பொதுச்சின்னம் வழங்க முடியாது என கடந்த டிச.9-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

"ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ, முதல்ல சண்டை செய்யணும். களத்துல இறங்காமலேயே ஒதுங்கினோம்னா அரசியல்ல இருக்க முடியாது!"
தினகரன்

நீதிமன்றம் சென்றால் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. சுயேச்சையாக களத்தை சந்திப்பது என அ.ம.மு.க-வினர் முடிவு செய்தனர். மொத்தமுள்ள 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 4,710 பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியது அ.ம.மு.க. 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இடங்களுக்கு 498 இடங்களில் வேட்பாளர்களை களமிறக்கினர். ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு தமிழகத்திலேயே மிக அதிகமாக வேட்பாளர்களை நிறுத்திய ஒரே கட்சி அ.ம.மு.க மட்டும்தான். தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கூட இவ்வளவு எண்ணிக்கையில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

தினகரன்
தினகரன்

`முதல்ல சண்டை செய்யணும்…’

அ.ம.மு.க-வின் மாநில மூத்த நிர்வாகி ஒருவர், "தேர்தல் ஆணையம் எங்களுக்குப் பொதுச் சின்னம் கொடுக்க மறுத்தவுடனே நாங்க எல்லாரும் சோர்ந்து போய்விட்டோம். அப்ப எங்களை அழைத்த தினகரன், `இந்த தேர்தல்ல நம்மாள எவ்வளவு வேட்பாளர்களை களமிறக்க முடியுமோ அவ்வளவு தூரம் இறக்குங்க. கிராமப்புறத்துல நாம கால் ஊன்றதுக்கும் கட்சியை வளர்க்குறதுக்கும் இதுதான் சிறந்த வழி. உடனடியா எல்லா மாவட்டச் செயலாளர்களையும் கூப்பிட்டு `பி பார்ம்’ கொடுக்கச் சொல்லுங்க’ என்றார். `எப்படிண்ணே, அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளுமே பணபலம், ஆள்பலம், அதிகார பலத்தோட இருக்காங்க. நம்மளால எப்படித் தாக்குப்பிடிக்க முடியும்?’ என்றோம்.

`ஒரு படத்துல தனுஷ் சொல்லுவாரே.. ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ, முதல்ல சண்டை செய்யணும். களத்துல இறங்காமலேயே ஒதுங்கினோம்னா அரசியல்ல இருக்க முடியாது. எல்லா இடத்துலயும் நம்மளால வெற்றி பெற முடியாதுதான். ஆனா, நாம யார்னு இரண்டு பெரியக் கட்சிகளுக்கும் மட்டுமில்ல நமக்கு நாமளே நிரூபிக்கணும். தைரியமா போங்கய்யா’ என்று உற்சாகப்படுத்தினார் தினகரன். அவர் சொன்ன வார்த்தைகள் இன்னமும் என் காதில் ஒலிக்கிறது” என்றார் சிலிர்ப்புடன்.

டெல்டா
டெல்டா
“பா.ம.க-வின் தயவும்... அ.தி.மு.க வெற்றியும்!” - உள்ளாட்சி உற்சாகத்தில் பா.ம.க.

காவிரிக்கு தெற்கே டார்கெட்

காவிரி பாயும் டெல்டா மாவட்டத்திலிருந்து தெற்கே உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் தொடக்கத்தில் இருந்தே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது அ.ம.மு.க. வேட்பாளர்களைத் தேர்வு செய்ததில் தொடங்கி, அவர்களை மற்ற கட்சிகள் விலைக்கு வாங்குவதைத் தடுத்தது வரையில் பல சோதனைகளைக் கடந்துள்ளனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்தார். இதன் வெளிப்பாடாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் அளித்த ஒரே கட்சி அ.ம.மு.க மட்டும்தான். கிட்டத்தட்ட 2,500 பெண் வேட்பாளர்களை ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தல்களில் களமிறக்கியுள்ளனர். புதிதாகப் பதிவு செய்யப்பட்ட கட்சியை நம்பி இவ்வளவு பெண்கள் துணிச்சலுடன் களமிறங்கியிருப்பதே பெரிய சாதனைதான்.

தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் வெற்றியை அ.ம.மு.க பெருமளவு பாதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில்தான் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் சொந்த ஊரான சிதம்பராபுரம் வருகிறது. இந்த ஒன்றியத்தை குறித்துவைத்து பணிசெய்த அ.ம.மு.க-வின் தென்மண்டல அமைப்பாளரான மாணிக்கராஜா, மொத்தமுள்ள 16 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 10-ல் அ.ம.மு.க-வை வெற்றி பெற வைத்து கயத்தாறு ஒன்றிய சேர்மன் பதவியையும் பெற்றுத் தந்துள்ளார்.

மாணிக்கராஜா, தேர்போகி பாண்டி
மாணிக்கராஜா, தேர்போகி பாண்டி
`யோவ், ஸ்டேசனில் கொண்டுபோய் விடு!’ - பைக் திருட முயன்ற இளம்பெண்ணின் சிசிடிவி வீடியோ அதிர்ச்சி

இதேபோல, சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றிய சேர்மனாக தேர்போகி பாண்டியின் மனைவி செல்வி பாண்டி இருந்தார். தற்போது அ.ம.மு.க-வின் சிவகங்கை மாவட்டச் செயலாளராக உள்ள தேர்போகி பாண்டி, கண்ணங்குடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 6 வார்டுகளில் நான்கில் அ.ம.மு.க-வை வெற்றி பெறவைத்து ஒன்றிய சேர்மன் பதவியையும் அ.ம.மு.க-வுக்கு பெற்றுத் தந்துள்ளார். அரியலூரில் தொடங்கி, தூத்துக்குடி வரையிலும் நீலகிரியில் தொடங்கி திருவள்ளூர் வரையிலும் அ.ம.மு.க ஒன்றிய கவுன்சிலர் பொறுப்புகளை கைப்பற்றியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரணி கார்த்திகேயன் தி.மு.க-வுக்குச் சென்றது ஒருபக்கம், அமைச்சர் விஜயபாஸ்கரின் குடைச்சல் மறுபக்கம் என இரண்டு பக்கமும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டே, ஐந்து ஒன்றிய கவுன்சிலர்களை வென்றுள்ளனர். இரண்டு அமைச்சர்கள் மாவட்டமான மதுரையில் 7 இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளனர். துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அ.ம.மு.க வேட்பாளர் மருதையம்மாள் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் அ.தி.மு.க-வைவிட அ.ம.மு.க ஒரு இடம் கூடுதலாக வென்றுள்ளது. தஞ்சாவூரில் 10 ஒன்றிய கவுன்சிலர் இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

தாம்பரம் நாராயணன்
தாம்பரம் நாராயணன்
கூட்டணியை தவிர்த்துவிட்டு, போட்டியிட்ட தொகுதிகள், பதிவான மொத்த வாக்குகளையும் கணக்கிட்டுப் பார்த்தால், மூன்றாவது பெரிய கட்சியாக அ.ம.மு.க உருவெடுத்திருப்பதை அறியமுடிகிறது.

மொத்தம் போட்டியிட்ட 4,710 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 94 இடங்களில் அ.ம.மு.க வென்றுள்ளது. அதே சமயம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிட்ட 498 இடங்களில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க-வின் செய்தி தொடர்பாளரும் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளருமான தாம்பரம் நாராயணன், "மனுத்தாக்கலுக்கு ஆறு நாள் மட்டுமே இடைவெளி இருந்தபோது, கட்சிக்காரர்கள் போட்டியிட 5,200 பி பார்ம் வழங்கினோம். எந்தக் கட்சியினாலும் முடியாத காரியத்தை நாங்கள் நிகழ்த்திக் காட்டினோம். பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போய்விட்டாலும் இன்று ஒவ்வொரு கிராமங்களிலும் அ.ம.மு.க வேரூன்றி உள்ளது. ஆளுங்கட்சியின் நெருக்கடி, தேர்தல் ஆணையத்தின் அநீதி என பலமுனை தாக்குதல்களுக்கு மத்தியில் இவ்வளவு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருப்பதே சரித்திர சாதனைதான். இது வெறும் தொடக்கம்தான். சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெருவதற்கான முன்னோட்டம் தான் இந்த வெற்றி” என்றார்.

கடம்பூர் ராஜுவின் சொந்த ஊரில் வெற்றியைப் பறித்த அ.ம.மு.க மாணிக்கராஜா யார்?

வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக பா.ம.க உருவெடுத்துள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.க கட்சிகளின் கூட்டணியுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த பா.ம.க., 224 ஒன்றிய கவுன்சிலர்களையும் 16 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களையும் பெற்றுள்ளது. ஆனால், கூட்டணியைத் தவிர்த்துவிட்டு, போட்டியிட்ட தொகுதிகள், பதிவான மொத்த வாக்குகளையும் கணக்கிட்டுப் பார்த்தால், மூன்றாவது பெரிய கட்சியாக அ.ம.மு.க உருவெடுத்திருப்பதை அறியமுடிகிறது. அ.ம.மு.க இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டியதுள்ளது. அதற்கு ஒரு டானிக்காக இந்தச் சிறிய வெற்றி கிடைத்திருப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். தினகரன் கூறியிருப்பதைதான் நாமும் கூறுகிறோம், `ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ, முதல்ல சண்டை செய்யணும்’.

அடுத்த கட்டுரைக்கு