Published:Updated:

`பில் இன்னும் பாஸ் ஆகல' - 5 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி.. இது கிருஷ்ணகிரி அவலம்!

எம்.வடிவேல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம், அத்திநத்தம் மலைக் கிராமத்தில் ரூ.6.50 லட்ச ரூபாய் மதிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் அதிகாரிகள் அலட்சியத்தால் பூட்டியே கிடக்கிறது.

பூட்டி கிடக்கும் அங்கன்வாடி மையம்
பூட்டி கிடக்கும் அங்கன்வாடி மையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திநத்தம் மலைக் கிராமத்தில் ரூ.6.5 லட்ச ரூபாய் மதிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் குழந்தைகள் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தாமல், பூட்டியே கிடக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகப் பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டு வரவே, இது குறித்து விசாரித்தோம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் அதிகளவு மலைக் கிராமங்களைக் கொண்ட பகுதி. இங்கு வாழும் மக்கள் விவசாயத்தையும், வனப்பகுதியைச் சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2014 ஆண்டில் ரூ.6.50 லட்சம் மதிப்பில், அத்திநத்தம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. கட்டிடம் முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று வரை குழந்தைகள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கின்றது. கட்டிடம் பூட்டி கிடப்பதால், 50 மேற்பட்ட மலைக் கிராம குழந்தைகள், அங்கன்வாடி திட்டத்தின் பயனை முழுமையாகப் பெற முடியாமல் இருக்கிறார்கள்.

`பில் இன்னும் பாஸ் ஆகல' - 5 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி.. இது கிருஷ்ணகிரி அவலம்!
Vikatan

இது குறித்து சமூக நலத்துறை திட்ட இயக்குநர் நாகலட்சுமியிடம் கேட்டபோது, ``அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதோடு எங்கள் பணி முடிந்துவிட்டது. அதன் பிறகு, தளி ஒன்றிய ஆணையாளர்தான், ஒப்பந்தப் பணி கோரி, ஒப்பந்ததாரரிடம் கட்டிட பணியை முடித்து, கட்டிடத்தை சமூக நலத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இன்று வரை கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை எங்கள் வசம் ஒப்படைக்கவில்லை'' என்றார்.

தளி ஒன்றிய ஆணையாளர் சோபாராணிரிடம் பேசினோம், ``அந்த மலைப் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டியதே நல்ல விஷயம். ஒப்பந்த தாரருக்குக் கொடுக்க வேண்டிய பில் தொகையில் பிரச்னை ஏற்பட்டு பில் நிலுவையில் இருக்கு. அதை இதற்கு முன்பு இருந்த அதிகாரிகள் சரி செய்து கொடுத்திருக்கவேண்டும். ஆனால் அதை அவர்கள் ஏனோ செய்யவில்லை. இன்னும் ஒரே வாரத்தில், ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை கொடுத்துவிட்டு. கட்டிடத்தை சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கவுள்ளோம்'' உறுதி அளித்தார் பிடிஒ சோபாராணி.