Published:Updated:

`உள்ளடி வேலைகளால் சறுக்கிய அன்வர் ராஜாவின் வாரிசுகள்!' -அதிர்ச்சி கொடுத்த ராமநாதபுரம்

அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர் ராஜா
News
அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர் ராஜா

செல்வாக்குடன் வலம்வந்த அன்வர் ராஜாவின் அரசியல் வாழ்வில் எதிரியாக நுழைந்தவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.

ராமநாதபுரம் முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவுக்கு எதிராக நடந்த உள்ளடி வேலைகளால் அவரது வாரிசுகள் இருவரும் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்தனர். இதனால் அன்வர் ராஜாவும் அவரின் ஆதரவாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

ராமநாதபுரம் மாவட்டத்தின் மிக மூத்த அரசியல்வாதியாக இருந்து வருபவர் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியதிலிருந்து அதன் உறுப்பினராக இருந்து வருபவர். கட்சியும் ஆட்சியும் பின்னடைவைச் சந்தித்த நிலையிலும் அ.தி.மு.க-வை விட்டு வெளியேறாதவர்.

இதனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையின்கீழ் தனி இடம் பெற்றிருந்தார். இத்தனை செல்வாக்குடன் இருந்து வந்த அன்வர் ராஜாவின் அரசியல் வாழ்வில் எதிரியாக நுழைந்தவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். இளம் வயதில் அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முறையிலேயே அமைச்சராகவும் ஆனார் மணிகண்டன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``சொந்தக் கட்சியினரை மதிக்காமல் இருப்பது, சீனியர்களை அவமதிப்புடன் நடத்துவது, வயது, அனுபவம் எதைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் பொது இடங்களில் விமர்சிப்பது போன்ற நடவடிக்கைகளால் பலரும் கட்சியைவிட்டு வெளியேறக் காரணமாக மணிகண்டன் இருந்தார்'' என்று கூறும் அக்கட்சியினர், ``மணிகண்டன் நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர் அன்வர் ராஜாதான்" என்கின்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிபோனது. இதன் பின்னர் அன்வர் ராஜாவின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது. இதைத் தடுக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டார் மணிகண்டன். இந்த மோதல்போக்கு உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வின்போதும் எதிரொலித்தது.

மணிகண்டன்
மணிகண்டன்

நீண்ட கால அரசியல்வாதியான அன்வர் ராஜா இதுவரை தனது வாரிசுகளை அரசியல் பதவிகளுக்குக் கொண்டு வர முயலவில்லை. இந்நிலையில், கடந்த எம்.பி தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு செயலாளர் என்ற பதவியில் மட்டும் நீடித்து வந்தார்.

இதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் தனது மகன் மற்றும் மகளை மண்டபம் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சில் வேட்பாளர்களாக நிறுத்தினார். இவர்கள் போட்டியிட்ட பகுதி அதிகளவிலான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டிருந்ததால் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்திருந்தார் அன்வர் ராஜா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், அவரது நினைப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன. மண்டபம் ஒன்றியம் 2-வது வார்டில் போட்டியிட்ட அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா தி.மு.க வேட்பாளர் சுப்புலெட்சுமியிடம் 1,343 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதற்கும் காரணம் மணிகண்டன்தான் என்கின்றனர் அன்வர் ராஜா தரப்பினர்.

அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியாவிற்கு எதிராக வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்கள் மூலம் வாக்காளர்களுக்கு மணிகண்டன் தரப்பு பணம் விநியோகித்ததாக அன்வர் ராஜா தரப்பில் குற்றம் சுமத்துகின்றனர். இதனால்தான் தி.மு.க வேட்பாளர் சுப்புலெட்சுமியிடம் 1,343 வாக்குகள் வித்தியாசத்தில் ராவியத்துல் அதரியா தோல்வியடைந்தார் என்கின்றனர்.

ராவியத்துல் அதரியா
ராவியத்துல் அதரியா

இதேபோல் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் நிறைந்த மண்டபம் ஒன்றியம் 16-வது வார்டில் (வேதாளை கவுன்சில்) போட்டியிட்டார் அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி. அங்கும் மணிகண்டன் தனது உள்ளடி வேலைகளைக் காட்டியுள்ளார் என்கின்றனர். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஒட்டுமொத்த முஸ்லிம்களும் போராடி வரும் நிலையில், நாசர் அலிக்காக அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் மோடியின் படத்தை இடம் பெறச்செய்து அதைத் தனது ஆதரவாளர்கள் மூலம் வாக்காளர்களிடம் விநியோகம் செய்ததாக மணிகண்டன் தரப்பினர் மீது புகார் கூறுகின்றனர்.

இதனால், 16-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் தவ்பீக் அலியிடம் 983 வாக்குகள் வித்தியாசத்தில் அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலி தோல்வியுற்றார். உட்கட்சிக்குள் நடந்த இந்த உள்ளடி வேலைகளால் அன்வர்ராஜா மட்டுமல்ல அ.தி.மு.க-வினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நாசர் அலி
நாசர் அலி

அன்வர் ராஜா தரப்பினர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ``இந்தக் குற்றச்சாட்டில் ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை. சொந்தக் கட்சிக்கு எதிராக மணிகண்டன் எப்போதும் செயல்பட்டதில்லை. தோல்வியை மறைக்க அவர் மீது வீண்பழி சுமத்துகின்றனர்" என்கின்றனர்.