Published:Updated:

வேட்புமனுத்தாக்கல் செய்தார்; தி.மு.க-வில் இணைந்துவிட்டார்- திடீர் ட்விஸ்ட் அடித்த அதிமுக வேட்பாளர்!

`அ.தி.மு.க-வில் 20 வருடங்களாக விசுவாசமாக இருந்தார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு செய்ய வைத்தோம் ஒரே நாளில் தி.மு.க-விடம் பணத்துக்கு விலை போய்விட்டார்.'

திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர் நாராயணன்
திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர் நாராயணன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் தம்பி கார்த்திகேயன். அ.ம.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்த கார்த்திகேயன், சமீபத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் ஐக்கியமானார். இந்நிலையில்தான், உள்ளாட்சி தேர்தலில் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய 14வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் நாரயணன் என்பவர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். பிரசாரத்தைத் தொடங்கவிருந்த நாராயணன் திடீரென வேட்புமனு பரிசீலனையின்போது தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கப்போவதாகத் தெரிவித்தார்.

திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர் நாராயணன்
திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர் நாராயணன்

இதற்கு அ.தி.மு.க-வைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து, அவரைத் தடுத்தும் நிறுத்தினர். அவரின் வாபஸ் மனுவை அ.தி.மு.க-வினர் கிழித்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், நாராயணனுக்கும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகத் தி.மு.க தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இருதரப்பிலும் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. நாராயணனின் வேட்புமனு நிராகரிக்கப்படவில்லை என்றாலும்கூட நாராயணன் தேர்தல் பணிகளில் பணியாற்ற விரும்பமில்லாமல் இருந்து வந்தார். அதேநேரம் தி.மு.க சார்பில் தேர்தல் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே திடீர் ட்விஸ்ட்டாகத் தற்போது நாராயணன் தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் திருமயம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இணைந்தபோது கார்த்திகேயனும் உடனிருந்தார். அ.தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு செய்தநிலையில், திடீரென தி.மு.கவில் சேர்ந்த விஷயம் வெளியில் தெரியவர புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அ.தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, "நாராயணன் அ.தி.மு.க-வில் 20 வருடங்களாக விசுவாசமாக இருந்தார். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு செய்ய வைத்தோம் ஒரே நாளில் தி.மு.க-விடம் பணத்துக்கு விலை போய்விட்டார்.

திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர் நாராயணன்
திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர் நாராயணன்

14வது வார்டு என்பது அ.தி.மு.க-வின் கோட்டை. அங்கு நிச்சயமாகத் தி.மு.க-வால் வெற்றி பெற முடியாது. அதனால், குறுக்குவழியில் எப்படியாவது வெற்றிபெற நினைக்கிறார்கள். வேட்புமனுவை முன்மொழிந்தவர், வேட்பாளரையும் பணம் கொடுத்து வாங்கிவிட்டனர். ஆனாலும், கூட மாற்று வேட்பாளராக ஒருவரையும் வேட்புமனு செய்ய வைத்தோம். அவருக்கு தீப்பெட்டி சின்னம் கொடுத்துள்ளது. அதைவைத்து தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். என்ன செய்தாலும், 14வது வார்டில் தி.மு.க ஜெயிக்க முடியாது" என்றனர்.