Published:Updated:

`இட்லிக்குச் சட்னி இல்லை; அரைவேக்காடு சாப்பாடு!'- அறந்தாங்கி வாக்கு எண்ணிக்கை மைய அதிர்ச்சி

சாப்பாடு
சாப்பாடு

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு சாப்பாடு சரியாகக் கொடுக்காததால், வாக்கு எண்ணிக்கை தாமதமாகத் தொடங்கியது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு சாப்பாடு சரியாகக் கிடைக்காததால், வாக்கு எண்ணுவதற்கு அலுவலர்கள் மறுத்தனர். இதனால், வாக்கு எண்ணிக்கை மிகவும் தாமதமானதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியது.

தமிழகம் முழுவதுமே பல இடங்களில் பல்வேறு காரணங்களால், வாக்கு எண்ணிக்கை தாமதமானது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு சாப்பாடு சரியாகக் கொடுக்காததால், வாக்கு எண்ணிக்கை தாமதமாகத் தொடங்கியது.

அலுவலர்கள்
அலுவலர்கள்

அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வாக்கு எண்ணும் அலுவலர்கள் காலையிலேயே வந்தனர். அவர்களுக்கு காலை உணவாக இட்லி கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு சட்னி, சாம்பார் உடனே கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வாக்கு எண்ணுவதற்கு அலுவலர்கள் மறுத்துள்ளனர். இதன்பின்பு, நீண்ட நேர தாமதத்துக்குப் பிறகுதான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு தொடர்ந்து வழக்கப்பட்ட மதிய சாப்பாடான தக்காளி சாதமும் சரியாக வேகாதநிலையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், கொதிப்படைந்த ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின் பேரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல் சுற்றே மதியத்துக்கு மேல்தான் தொடங்கியுள்ளது. இதனால், வாக்கு எண்ணி முடிக்க நள்ளிரவு ஆகும் என்று கூறப்படுகிறது. வேட்பாளர்கள் பொதுமக்கள் பலரும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே அதிகளவில் குவிந்திருந்தனர். கூட்டம் அதிகமானதால், கூட்டத்தை விரட்டி, பேரிகார்டுகள் வைத்து போலீஸார் தடுத்தனர்.

அலுவலர்கள்
அலுவலர்கள்

இதுபற்றி வாக்கு எண்ணும் அலுவலர் ஒருவர் கூறும்போது, ``காலை சாப்பாடுதான் சரியாக கிடைக்கலை. மதியமும் அரைவேக்காடு சாப்பாட்டைத்தான் எங்களுக்கு கொடுத்தாங்க. அதைச் சாப்பிட முடியலை. வெளியேயும் போக முடியாது. வேறு வழியில்லாம பலரும் பட்டினியோடுதான் பணியில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு