Published:Updated:

``ஆடம்பரமா கேட்டோம்... ஆரம்ப சுகாதாரம்தானே கேட்டோம்!” - அரசநத்தம் மக்களின் அபலைக்குரல்

விவசாயிகள் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் அரை மணி நேரத்தை மிச்சப்படுத்தலாம்னு சொல்லி சேலத்துல பல கோடி ரூபாய்ல ரோடு போடுறாங்க. ஆனா....

Arasanatham
Arasanatham

2015-ம் ஆண்டு செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 7 பேர் தர்மபுரி மாவட்டம் அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவத்துக்கு முன்பு, இந்த மலைக்கிராமங்களின் அவல நிலை அரசுக்குத் தெரியாமல் இருந்தாலும், சம்பவத்துக்குப் பிறகு, அரசின் கவனத்துக்கு எட்டியது. அத்துடன் அரசநத்தம் என்ற பெயர், இந்திய அளவில் உச்சரிக்கப்பட்டது. இதுபற்றி விரிவாக ஜூனியர் விகடன் 15.04.2015 இதழில் செய்தியும் வெளியிட்டிருந்தோம்.

Arasanatham Roads
Arasanatham Roads

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்தேரி மலைத்தொடரில் அமைந்துள்ளது, அரசநத்தம் கிராமம். சுமார் 600 பேர் அங்கு வசிக்கிறார்கள். கரணம் தப்பினால் மரணம் அல்லது பலத்த காயம் என்ற நிலையில் நெட்டுக்குத்தும் கரடுமுரடுமான மலைப் பாதை நம்மை வரவேற்கிறது. மக்களைச் சந்தித்தே தீர வேண்டும் என்ற எண்ணவோட்டமே எங்களை வழிநடத்தியது.

அமைதியான சுற்றுச்சூழல், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை அனுபவித்து வரும் அப்பகுதி மக்களிடம், "பத்திரிகையில் இருந்து வருகிறோம்" என்று சொன்னதும் கோபமும் விரக்தியும் அவர்களது முகங்களில் வெளிப்பட்டது. எத்தனையோ முறை அடிப்படை வசதிகள் வேண்டி முறையிட்டும் பலன் கிடைக்காததால் ஏற்பட்ட வெறுப்புதான் அதற்குக் காரணம்.

`அரசும் செய்ய மாட்டேங்குது... எங்களையும் செய்யவிட மாட்டேங்கிறாங்க!' - அழியும் துறையூர் ஏரி

”நகரங்கள் எல்லாம் எவ்வளவோ முன்னேறியிருக்கே. இங்கே எதுவும் மாறவில்லையா” என மக்களிடம் மெள்ள பேசத் தொடங்கினோம். ”அதிகாரிங்க எப்போதாவதுதான் வருவாங்க. நாங்களும் எங்க குறைகள் எல்லாத்தையும் சொல்லுவோம். ஏதாவது நல்லது நடக்கும்னு நம்புவோம். ஆனா, ஒண்ணும் நடக்காது. தேர்தல் வந்ததும் அரசியல்வாதிங்க ஓட்டு கேட்க வருவாங்க. 'அது செய்கிறோம்... இது செய்கிறோம்'னு வாக்கு குடுப்பாங்க. தேர்தல் முடிஞ்சதும் அதுவும் காணாம போயிடும். உங்களபோல பத்திரிகைல இருந்தும் அடிக்கடி வருவாங்க. ஆனா இதுவரைக்கும் ஒண்ணும் நடந்தபாடில்ல.

டவுன்ல ஆடம்பர வசதியோட வாழ்க்கை முன்னேறிடுச்சு. நாங்க என்ன ஆடம்பர வசதியா கேட்கிறோம். போக வர ரோடு, குடிக்க தண்ணி, பொழப்பு நடத்த ஒரு வேலையைத்தானே கேட்குறோம். விவசாயிகள் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் அரைமணி நேரத்தை மிச்சப்படுத்தலாம்னு சொல்லி சேலத்துல பல கோடி ரூபாய்ல ரோடு போடுறாங்க. நாங்க ஆஸ்பத்திரிக்குப் போகக்கூட வழியில்லை என்று கெஞ்சினாலும் ரோடு போட்டுத் தர மாட்டேங்குறாங்க. அப்போ இந்த அரசாங்கம் யாருக்குத்தான் நல்லது செய்யுது?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அரசநத்தம் சாலைகள்
அரசநத்தம் சாலைகள்

அருகில் இருந்த பெண் ஒருவர் பேசத்தொடங்குகையில், "நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊரில்தான். எங்களோட மிக முக்கியத் தேவை ரோடு வசதிதான். இங்க ஆரம்ப சுகாதார நிலையம்கூட இல்ல. பிரசவ வலினு வந்தா 'டோலி' கட்டித்தான் தூக்கிட்டுப் போவோம். அப்படிப் போகுறப்போ தாயும் சேயும் காப்பாத்தறதுக்கு ஊரே அல்லோலகல்லோலம் பட்டுடும். இங்கு எந்த வேலைவாய்ப்பும் இல்ல. அதனால வேற ஊருக்குத்தான் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணும். தினமும் அவ்வளவு தூரம் நடந்துபோய் வர முடியுமா? சொல்லுங்க!

அதனாலேயே தங்கி வேலை செய்யலாம்னு யார் வந்து கூப்பிட்டாலும் என்ன வேலைனுகூடச் சரியா தெரியாமலேயே போய்டுவாங்க. வேலைக்குக் கூட்டிட்டுப் போறவங்களுக்கு இது சாதகம். செம்மரம் வெட்ட எங்க சனங்களைக் கூட்டிட்டுப் போனதும் இப்படித்தான். பள்ளிக்கூடம் போகணும்னா 10 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கு. இதனால விடுதியில தங்கிப் படிக்குறதுதான் ஒரே வழி. அதனாலேயே பெரும்பாலும் பெண் பிள்ளைங்க அஞ்சாவதோட படிப்ப விட்டுடுவாங்க. ஒண்ணு ரெண்டு பேருதான் காலேஜுக்குப் போறாங்க. ரோடு போட்டா என்ன மாதிரி புள்ளைங்ககூடப் படிப்போம்ல” என்றார் ஏக்கத்துடன்.

அரசநத்தம்
அரசநத்தம்

இதுகுறித்து அரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான முருகனைத் தொடர்புகொண்டு பேசினோம். "சித்தேரி மலையில் சுமார் ஒன்பது கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்ததையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட்டு 12 கோடி ரூபாய் செலவில் மன்னூர் முதல் சேவூர் அம்மாபாளையம் வரை சாலை அமைத்துக் கொடுத்தேன்.

மேலும், சாலை அமைக்க அரசிடம் முறையிட்டு இருக்கிறேன். அரசு தரப்பில் ஒரு தொகுதிக்கு பல கோடி செலவு செய்து சாலை அமைக்கும் அளவுக்கு நிதி இல்லை. தர்மபுரி மாவட்டத்துக்கு நூலகம் அமைக்க 1.50 கோடி ரூபாய் நிதியானது கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனால் வழங்கப்பட்டது. அதை அரூர் தொகுதிக்கு வழங்காமல் அவருடைய தொகுதியான பாலக்கோடு மற்றும் காரிமங்கலத்துக்கு எடுத்துக்கொண்டார் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முருகன்
முருகன்

இதையடுத்து உயா்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகனிடம் பேசினோம். ”நூலகம் பாலக்கோடு தொகுதிக்கு மட்டும் அமைச்சிக்கிட்டேன் என்பதெல்லாம் தவறான தகவல். மேலும், தொகுதிக்கான தேவைகளை நான் செய்து கொடுத்ததால்தான் நடந்த அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி இடைதேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது" என முடித்துக்கொண்டார்.

இது சம்பந்தமாகத் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் பேசப் பலமுறை தொடர்புகொண்டும் பதிலளிக்கவில்லை.

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்

இந்த மலைவாழ் மக்களுக்கான தேவைகள் தார்ச்சாலை, ஆரம்ப சுகாதார நிலையம், சுயதொழில் பயிற்சி என மிகச் சிறியனவே. டிஜிட்டல் இந்தியாவின் ஆதார் கார்டு திட்டங்கள் இன்னும் இவர்களைச் சென்றடையவில்லை. இவர்களைப் போன்ற பல நூறு மலைக்கிராமங்கள் அடிப்படை வசதிக்காக இன்றும் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஏக்கங்கள் தீரும் நாள் எப்போது என்ற ஏக்கத்துடனே நீள்கிறது, இவர்களது வாழ்க்கை. காத்திருந்தனர், காத்திருக்கின்றனர் இன்னும் காத்திருக்க வேண்டிவருமோ என்ற ஏக்கத்தோடு!