Published:Updated:

`இரண்டு பேருக்குமே 85 வாக்குகள்!' -ஈரோடு வேட்பாளர்களைக் கதிகலக்கிய கடைசி வாக்குச் சீட்டு

வேட்பாளர் இருவரும் சரிசமமாக வாக்குகளைப் பெற்றிருக்க, கடைசியில் இருந்த ஒரு வாக்குச் சீட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

நதியா - சுமதி
நதியா - சுமதி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் யூனியனில் இருக்கிறது புதுப்பீர்கடவு பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்தில் உள்ள 3-வது வார்டில் மொத்தம் 416 வாக்குகள் இருக்கின்றன. இந்த வார்டில் வெற்றி பெற்று வார்டு உறுப்பினராக வேண்டுமென மொத்தம் 4 பேர் தேர்தல் களத்தில் இறங்கினர். டிசம்பர் 30-ம் தேதி நடந்த தேர்தலில் மொத்தம் 326 வாக்குகள் மட்டுமே பதிவாகின.

அதிலும் 32 வாக்குகள் செல்லாத ஓட்டுகளாயின.124 வாக்குகளை இதர வேட்பாளர்கள் பெற்றனர். இந்நிலையில், சாவி சின்னத்தில் போட்டியிட்ட சுமதி என்பவரும், கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட நதியா என்பவரும் சரிசமமாக தலா 85 வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். வாக்குப் பெட்டியில் ஒரே ஒரு சீட்டு மட்டும் மீதம் இருந்திருக்கிறது. அந்த சீட்டில் யாருக்கு வாக்கு இருக்கிறதோ, அவரே வெற்றியாளர் என்ற நிலை. இப்படிப்பட்ட நிலையில், கடைசியில் மீதமிருந்த ஒற்றை வாக்குச் சீட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

`குடும்பப் பிரசாரம்; கணவரின் செயல்பாடு!' -82 வயதில் ஊராட்சித் தலைவரான முன்னாள் அமைச்சரின் மனைவி
நதியா
நதியா

மீதமிருந்த அந்த ஒற்றை வாக்குச் சீட்டைப் பிரித்த போது, கட்டில் மற்றும் சீப்பு ஆகிய இரண்டு சின்னங்களுக்கு மத்தியில் அந்த ஓட்டானது குத்தப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிருப்தியடைந்த சுமதியோ, `இரண்டு சின்னங்களுக்கும் மத்தியில் ஓட்டு இருப்பதால், இந்த ஓட்டினைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. குலுக்கல் முறையில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுங்கள்’ என வாதிட்டார். இறுதியாக அதிகாரிகளோ, `நதியாவின் கட்டில் சின்னத்தில்தான் 90 சதவிகிதத்திற்கு மேல் வாக்கினுடைய அச்சு இருக்கிறது’ எனக்கூறி நதியாவை வெற்றி பெற்றவராக அறிவித்துவிட்டனர்.

வெற்றிபெற்ற நதியாவிடம் பேசினோம். `கடைசி சீட்டில்தான் வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு இருந்தது. ஆனால், அந்த சீட்டில் இரண்டு சின்னங்களுக்கு மத்தியில் ஓட்டு குத்தப்பட்டிருந்தது. என்னுடைய சின்னத்தில்தான் அதிகளவு மை குத்தப்பட்டிருந்தது. அதிகாரிகள் அதைப்பார்த்து என்னை வெற்றியாளராக அறிவித்தனர். கடைசி சீட்டு எண்ணுற வரைக்கும் யார் ஜெயிச்சாலும் பரவாயில்லை. மக்களுக்கு நல்லது செஞ்சா போதும்னு நினைச்சேன். அந்த ஒரு சீட்டு என்னை ஜெயிக்க வைச்சிடுச்சி” என்றார்.

சுமதி
சுமதி

ஒரு ஓட்டில் வெற்றி வாய்ப்பை இழந்த சுமதியோ, ``கடைசி வாக்குச் சீட்டில் தெளிவாக வாக்குப் பதிவாகவில்லை. அதனால, `ரெண்டு பேருக்கு சரிபாதி வாக்கு வந்துருக்கு. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பாங்க’ன்னு நினைச்சேன். ஆனா, அதிகாரிங்க அவங்க ஜெயிச்சதா சொல்லிட்டாங்க. ஒரு ஓட்டுல தோத்தது மனசுக்கு சங்கடமா இருக்குதுங்க. எங்க சொந்தக்காரவங்க எல்லாம் எனக்கு ஓட்டுப் போட்டாங்க. அவங்க எல்லாம் வீட்டுக்கு வந்து எனக்கு ஆறுதல் சொல்லிட்டுப் போறாங்க. அவங்களோட ஒத்தாசையால நான் கண்டிப்பாக அடுத்த தடவை தேர்தல்ல நின்னு ஜெயிப்பேன்னு நம்பிக்கையிருக்கு” என்றார்.