Published:Updated:

பி.கே டீம்... திண்ணை பிரசாரம்... ஸ்டாலின் `மெயின்’ டார்கெட்! - எடப்பாடியின் உள்ளாட்சி வியூகம்

ஸ்டாலின் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அவர்களுக்கு எதிரான செய்திகள் எல்லோரது போன்களிலும் வட்டமடிக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் எடப்பாடியின் ஐ.டி விங்க் களம் இறங்கியுள்ளது.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

திண்ணை பிரசாரம், 10 பேர் கொண்ட குழுக்களை வைட்டமின் `ப’ கொடுத்துச் சிறப்பாகக் கவனிப்பது எனப் பல விஷயங்களோடு களம் இறங்க இருக்கிறது அ.தி.மு.க. அதேபோல் ஸ்டாலினையும் விட்டுவைக்கவில்லை, அவர் எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும் அவர்களுக்கு எதிரான ஆடியோ, வீடியோ பற்றிய செய்திகள் இனி எல்லோரது போன்களிலும் வட்டமடிக்க இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலில் எடப்பாடியின் புது வியூகத்தைப் புகுத்த இருப்பதுதான் அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக். உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திலும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கலந்துகொள்ளாதது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பொதுக்குழு முடிந்ததிலிருந்தே ஓ.பி.எஸ்ஸுக்கும் எடப்பாடிக்கும் விரிசல் அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்று புகார் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

அ.தி.முக அலுவலகத்துக்கு வந்த ஏ.சி. சண்முகம்
அ.தி.முக அலுவலகத்துக்கு வந்த ஏ.சி. சண்முகம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இடங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட உள்ள சீட் விவரங்களை விரைவில் மாவட்ட பொறுப்பாளர்களே அறிவிக்கும்படி, முதல்வர் அறிவுரை வழங்கியிருந்த நிலையில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அப்படி என்ன விஷேசம் என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

இதுகுறித்து அ.தி.மு.க முக்கிய புள்ளிகளிடம் பேசினோம். ``உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது மற்றும் கூட்டணிக்கட்சிகளை எப்படிக் கையாள்வது போன்றவற்றை விவாதிப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஓ.பி.எஸ் வரவில்லை. அதற்குக் காரணம் பொதுக்குழு முடிந்த பிறகு, எந்தவித நிகழ்ச்சிகள் நடந்தாலும் சரிவர ஓ.பி.எஸ்ஸுக்குத் தகவல் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிக் கொண்டிருக்கிறது. அத்தோடு கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்தும் சரிவரத் தகவல் கொடுக்கப்படுவதில்லையாம்.

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
ஸ்டாலின் வாக்கு கேட்டுச் செல்வதாக இருந்தால் அதற்கு முன்பே திமுகவினர் செய்த முறைகேடுகள், ஊழல் பட்டியல்கள் என வீடியோவாகவும் ஆடியோவாகவும் வெளியிடத் தாயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க-வினர்.

அந்த வெறுப்பில்தான் இந்தக் கூட்டத்தையே புறக்கணித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது" என்றவர்கள், அடுத்ததாக, தேர்தலில் எடப்பாடியின் வியூகத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். ``நடந்து முடிந்த தேர்தல்களைப்போல இல்லாமல் இந்த உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்து அ.தி.மு.க என்றால் அது எடப்பாடிதான் என்ற நிலையைத் தொண்டர்கள் மனதிலும் கட்சி நிர்வாகிகள் மனதிலும் பதிய வைப்பதுதான் அவரது முதல் நோக்கம். இந்த விஷயங்களை தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோரின் டீமிலிருந்த ஒருவர்தான் இயக்கப்போகிறார்.

அந்த ஐ.டி விங்க் டீம் பல யுக்திகளைக் களம் இறக்கப்போகிறது. முதலில் கிராமம்தோறும் உள்ள வீடுகளுக்குச் சென்று திண்ணை பிரசாரம் மூலமாக அ.தி.மு.க அரசின் பெருமைகளை எடுத்துச் சொல்லுதல், அத்தோடு ஒரு தெருவில் பத்து வாக்குகளை ஒரு நபர் வைத்திருந்தால் அவருக்கு வைட்டமின் `ப’ கொடுத்து கவனிப்பது. என இதைத் தமிழகம் முழுவதும் செயல்படுத்த இருக்கிறார்கள். இதே போன்று பல திட்டங்களோடு களம் இறங்க இருக்கிறது அந்த ஐ.டி விங்க். அத்தோடு ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை இந்த ஐ.டி விங்க்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

ஸ்டாலின் வாக்கு கேட்டு எந்த மாவட்டத்துக்குச் செல்வதாக இருந்தாலும் அந்த மாவட்டத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பே ஸ்டாலின் மற்றும் தி.மு.க-வுக்கு எதிரான செய்திகள் எல்லோரது போன்களிலும் வட்டமடிக்க இருக்கிறது. அதில் அவர்கள் செய்த முறைகேடுகள், ஊழல் பட்டியல்கள் என வீடியோவாகவும் ஆடியோவாகவும் வெளியிட தாயாராகிக்கொண்டிருக்கிறார்கள். வீடியோ முடியும்போது,`அராஜகம் செய்யும் ஆட்சி உங்களுக்கு வேண்டுமா இல்லை.... அமைதியான முறையில் நடக்கும் அ.தி.மு.க-வின் ஆட்சி வேண்டுமா?’ என்ற வசனத்தோடு முடிய இருக்கிறது" என்றார்கள்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |