Published:Updated:

`ஒரே வார்டில் மோதிக்கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகள்!’- ராமநாதபுரம் தி.மு.க கூட்டணியில் குழப்பம்

சமீபகாலமாக இத்தகைய எதிர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு கட்சிகளும் ஓரணியாக பயணிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Stalin
Stalin

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் ஒரே வார்டில் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் கூட்டணிக் கட்சியினரிடையே குழப்பம் நிலவி வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள்
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள்
உ.பாண்டி

இந்தியாவில் கம்யூனிஸம் அரசியல் இயக்கமாகவும், போராட்ட இயக்கமாகவும் வளர்ந்து இருந்தாலும், சமீப ஆண்டுகளாக இருவழிக் கொள்கைகளுமே பின்னடைவைச் சந்தித்த நிலையிலேயே உள்ளது. ஆயுதப் போராட்ட வழி செல்பவர்கள் ஆளும் அரசுகளால் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இயக்கம் நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்குள் நிலவிவரும் பிரிவினை போக்குகளால் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இணைந்து இடதுசாரி இயக்கங்களாக செயல்பட்டாலும் முழு மனதுடன் இணைய முடியாமல் இருந்து வருவது என்பதே உண்மை.

கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து வரும் நிலையிலேயே இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருந்து வருகின்றன. தேர்தல் காலங்களில் ஆளுக்கு ஒரு கூட்டணி எனும் எதிர் எதிராக மோதிக்கொண்ட வரலாறும் உண்டு. சமீப காலமாக இத்தகைய எதிர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு கட்சிகளும் ஓரணியாக பயணிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு வேட்டு வைப்பதுபோல் அமைந்துள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடையே நடந்துவரும் மோதல்.

இந்திய கம்யூனிஸ்ட்  துண்டு பிரசுரம்
இந்திய கம்யூனிஸ்ட் துண்டு பிரசுரம்
உ.பாண்டி

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களைப் பிரித்துக்கொள்ளும் அதிகாரங்களை அந்தந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பில் விட்டிருந்தது தி.மு.க. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கான இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனிச்சியம், வேந்தோணி, தங்கச்சிமடம் ஆகிய 3 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மஞ்சூர், அச்சன்குளம் , பெரியபட்டினம் ஆகிய 3 இடங்களும் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்கச்சிமடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தங்கச்சிமடம் கிளைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினருமான எஸ்.பி.டீரோஸ் என்பவர் போட்டியிடுகிறார். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் இ.ஜஸ்டின் என்பவர் போட்டியிடுகிறார்.

சி.பி.எம் துண்டு பிரசுரம்
சி.பி.எம் துண்டு பிரசுரம்
உ.பாண்டி

தங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் தங்கச்சிமடம் ஊராட்சி வார்டைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒரே இடத்துக்கு இருவரும் தனித் தனியாக வேட்பாளர் நிறுத்தியுள்ள நிலையில், இரு தரப்பிடமும் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் இரு தரப்பினரும் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வர மறுத்து வருகின்றனர். இதனால் ஒரே கூட்டணியிலிருந்து வரும் கட்சியினர் யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.